முதலமைச்சர் ஒரு வார காலத்திற்குள் கிழக்கு மாகாண உபை உறுப்பினர் குழுவொன்றை கருமலையூற்று பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்வதாக வாக்குறுதியளித்தார். அவரின் வாக்குறுதிப்படி ஒருவாரம் முடிவடைந்துவிட்டது. எனினும் இன்று வரை எவரையும் குறித்த இடத்துக்கு அழைத்துசெல்லாது அனைவரையும் முதலமைச்சர்
ஏமாற்றிவிட்டதாக கிழக்குமாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதின் அசமந்தப்போக்கானது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் துரோகமிழைப்பதாகவே அமைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
அரசாங்கத்தினால் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக மேற் கொள்ளப்பட்டுள்ள மற்றுமொரு அடாவடித்தனம் கருமலையூற்று புராதன பள்ளிவாயல் உடைப்பாகும். இது தொடர்பாக இம்மாதம் 19 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களை ஒரு வார காலத்திற்குள் அழைத்துச் சென்று குறித்த பள்ளியைக் காட்ட ஏற்பாடு செய்வதாக இதன் போது முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார்.
அவரது வாக்குறுதிப்படி ஒரு வாரம் முடிந்து விட்டது. எனினும் அவர் சொன்னபடி எதையும் செய்யவில்லை. சமூகத்தை ஏமாற்றுவதற்காக அவ்வப்போது பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருவது அவரது வழமையாகும். இருந்த போதிலும் ஒரு கௌரவமான சபையில் சமுக நலன் சார்ந்த விடயம் ஒன்றில் அவர் அளித்த வாக்குறுதியை அவரே காற்றிலே பறக்க விடுவது என்பது சமூகத்திற்கு செய்கின்ற பாரிய துரோகமாகும்.
கிழக்கு மாகாண சபையில் 2012 இல் அவர் வாக்குறுதி அளித்தபடி கருமலையூற்று பள்ளிவாயலில் மக்கள் தொழுகை நடத்த ஏற்பாடு செய்து கொடுத்திருந்தால் இன்று இந்நிலை ஏற்பட்டிருக்காது. அன்று முதலமைச்சர் நஜீப் எப்படி பொய் வாக்குறுதி அளித்தாரோ இன்றும் அதே பொய் வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
இது சமூக நலன் சார்ந்த விடயம். எதிர்காலம் சம்பந்தமானது என்ற எண்ணம் அவருக்கு இல்லை. அவருக்கு இருக்கின்ற ஒரேயொரு எண்ணம் முதலமைச்சர் கதிரையை எப்படிக் தக்க வைத்துக் கொள்வது என்பது மட்டும் தான். அதற்காக எப்படியான பொய்யைச் சொல்லவும் சமூகத்தை ஏமாற்றவும் அவர் தயாராக இருக்கின்றார்
கருமலையூற்று பள்ளிவாசல் உடைக்கப்பட்ட விடயத்தை முதன் முதலாக ஊடகங்கள் ஊடாக நான் மக்கள் மயப்படுத்தியபோது அங்கு பள்ளியே இருக்கவில்லை என கிழக்கு கட்டளைத் தளபதி ஊடகங்களுக்கு கூறினார். ஆனால் இந்த விடயத்தை மறைக்க முடியாது என்ற விடயம் பின்னர் தெளிவானதும் மழைக்கு பள்ளி விழுந்ததாக கதையளந்தார்கள். இதற்கு முதலமைச்சரும் ஆமாம் போட்டு தலையசைத்தார்.
பள்ளிவாயல் இருந்த இடத்தில் இருக்கும் நீரூற்றைப் பயன்படுத்தி பாரிய ஹோட்டல் ஒன்று கட்டுவதற்காக பள்ளிவாசல் உடைக்கப்பட்டதாக சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதற்காக மேல் மட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் இப்பகுதிக்கு விஜயம் செய்ததாகவும் பொது மக்கள் கூறுகின்றனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை அங்கு அழைத்துச் சென்றால் இந்த விடயம் அம்பலமாகி விடும் என்பதற்காக எல்லோரையும் ஏமாற்றும் பொய் வாக்குறுதியை முதலமைச்சர் வாய் கூசாமல் வழங்குகிறார்.
உடைத்த பள்ளியை படையினர் மீளக் கட்டுவதாக இப்போது கூறுகிறார்கள். சமூகத்தை ஏமாற்றுவதற்காக சொல்லப்படுகின்ற விடயம் இதுவென்பதை முழு முஸ்லிம் சமூகமும் அறியும். வரலாற்றுத் தொன்மை வாய்ந்த ஒரு பள்ளியை அழித்து விட்டு அங்கு புதிய பள்ளியை நிர்மாணிப்பது என்பது வரலாற்றுத் தடயங்களை அழிக்கின்ற செயற்பாடு என்பதை கற்ற சமூகமும், இளைஞர் சமூகமும் நன்கு அறிந்து வைத்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கருமலையூற்று, புல்மோட்டை, தோப்பூர், சம்பூர் என எல்லாப் பிரதேசங்களிலும் முஸ்லிம்களுக்கு இன்று நெருக்கடி ஏற்படுத்தப் படுகின்றது. எந்த விடயத்திற்கும் தீர்வு இல்லை. தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான முன்னெடுப்புகளை அரசாங்கத்தில் இருக்கும் எவரும் முன்னெடுக்கவுமில்லை. எனவே சமூகத்தின் எதிர்கால நலன் கருதி ஆக்கபூர்வமான விடயங்களைச் செய்ய முதலமைச்சர் முன்வர வேண்டும்.
இதற்கு பின்னர் இது போன்ற சம்பவங்கள் இடம் பெறாது என்பதை முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் உறுதிப்படுத்த வேண்டும். இன்றேல் செய்யக் கூடிய ஒருவருக்கு இடம்விட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இது தான் சமூகத்திற்கு செய்கின்ற பாரிய நன்மையாகும் என்று இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

Post a Comment