எஸ்.றிபான்
ஊவா மாகாண சபைத் தேர்தல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மற்றுமொரு சோதனைக் களமாகும். ஏற்கனவே இவ்வாண்டு நடைபெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி ஆட்சியை கைப்பற்றிக் கொண்டாலும், 2009 ஆம் ஆண்டு மேல் மாகாண சபைக்கு நடைபெற்ற தேர்தலை விடவும் சுமார் 11 வீதமான வாக்குகளை குறைவாகவே பெற்றுள்ளது. இதே போன்றுதான் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தென் மாகாண சபைத் தேர்தலிலும் அரசாங்கத்தின் செல்வாக்கு சுமார் 10 வீதத்தினால் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.
இந்நிலையில், ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சிடைந்தால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அல்லது ஜனாதிபதித் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி பெரும் சவாலை எதிர்க்கட்சிகளிடம் இருந்து எதிர் கொள்ள வேண்டியேற்படும். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி 72.39 வீத வாக்குகளைப் பெற்று ஆட்சியை கைப்பற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்திற்கு இருக்கின்ற இச்சூழ்நிலையில் அரசாங்கத்தை எவ்வளவுதான் திட்டித் தீர்த்துக் கொண்டாலும், இறுதியில் அரசாங்கத்தினை கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தங்களை நண்பர்கள் என்று காட்டுவதனை விடவும் ஆளுக்கு ஆள் எதிரிகள் என்று தமது ஆதரவாளர்களிடம் காட்டிக் கொள்வதனையே பெருமையாக நினைத்து கொண்டவர்கள். கீறியும் பாம்புமாக செயற்பட்டவர்கள். வடமாகாண சபை, மேல் மாகாண சபைத் தேர்தல்களில் இக்கட்சியின் தலைவர்களும், ஆதரவாளர்களும் மோதிக் கொண்ட சம்பவங்களும் உள்ளன.
இத்தகைய வரலாறுகளைகொண்ட இரு கட்சிகளும் முஸ்லிம்களை பல தடவைகள் ஏமாற்றியுள்ளன. ஒரு கட்சியின் அழிவில்தான் மறுகட்சியின் வாழ்வு இருக்கின்றதென்று மடித்துக் கட்டிக் கொண்டு செயற்பட்டவர்கள் ஊவா மாகாண சபைத் தேர்தலில் கூட்டாக துஆ கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட இருக்கின்றனர்.
இக்கட்சிகள் தேர்தலில் கூட்டு வைத்துள்ளமையை வரவேற்கவே வேண்டும். ஆனால், இக்கூட்டு, சமூகத்தின் பாதுகாப்பு, நலன்கள் போன்றவற்றை கருத்திற் கொண்டு எடுக்கப்பட்டதொரு தீர்மானமாக பார்க்க முடியாதுள்ளது. ஏனெனில், இவ்விரு கட்சிகளும் பௌத்த இனவாதிகளினால் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் பற்றி பலத்த கண்டன அறிக்கைகளை விடுத்தாலும், ஐ.நாவிற்கு அறிக்கை அனுப்பி வைத்தாலும், அவற்றின் மூலமாக அரசியல் இலாபம் அடைந்து கொள்ளவே விரும்புகின்றன. மாறாக ஆளுத் தரப்புக்கு அழுத்தங்களை கொடுத்து, முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு குறைந்த பட்ச தீர்வுகளையாவது பெற்றுக் கொடுப்பதற்கு முடியாத கட்சிகளாகவும், அரசாங்கத்தில் இருந்து கிடைத்துக் கொண்டிருக்கும் சொகுசுகளுக்கு வாய் திறந்து கொண்டிருப்பவர்களாகவுமே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு வந்துள்ளார்கள்.
அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளையில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி பிரதமர் பிழையான தகவல்களை பாராளுமன்றத்தில் முன் வைத்த போது கூட, இக்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் மௌனமாகவே இருந்தார்கள். தம்புள்ள பள்ளிவாசலை பாதுகாப்போம் என்றார்கள். இன்று வரைக்கும் அப்பள்ளிவாசல் ஆபத்தான நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம்கள் தங்களின் மதவிழுமியங்களைப் பின்பற்றி நடப்பதில் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளார்கள். இவைகள் பற்றி எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க இயலாதவர்களாகவே அரசாங்கத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், பள்ளிவாசல்களின் மூலமாக பொது மக்கள் வழங்கிய பொருட்களை பேருவளை பகுதிக்கு கொண்டு சென்று, அதனை தங்களின் முயற்சிகளினால் பெறப்பட்டதாகக் காட்டி போட்டோவும் பிடித்துக் கொண்டார்கள்.
இந்த குணப்பண்புகளைக் கொண்ட இக்கட்சிக்காரர்கள் ஊவா மாகாண சபைத் தேர்தலில் கூட்டு வைத்து போட்டியிடுகின்றார்கள் என்றால், முஸ்லிம்களை ஏமாற்றுவதற்கு மற்றுமொரு அடித்தளத்தை போட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மையாகும். அரசாங்கத்தின் முழுமையான அங்கீகாரத்தின் அடிப்படையிலேயே மு.கா, அ.இ.ம.காவும் இணைந்து இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகளும், இனவாத அமைப்புக்களும் நாளாந்தம் மேற்கொண்டு வருகின்ற எதிர் நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகள் இன்னும் பாக்கியாகவே இருந்து கொண்டிருக்கின்றது. இதனை செய்வதற்கு அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகளும், அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் துணிவதற்கு பதிலாக கூனிக்குறுகி நிற்கின்றார்கள்.
இதனால், முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சிகளின் மீதும், முஸ்லிம் அரசியல் தலைவர்களின் மீதும் கோபமும், வெறுப்பும் கொண்டவர்களாகவே உள்ளார்கள்.
முஸ்லிம்களின் இந்த மனோ நிலையை மத்திய மாகாண சபை, வடமேல் மாகாண சபை, மேல் மாகாண சபை ஆகியவற்றின் தேர்தல்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. முஸ்லிம்களின் அநேகமான வாக்குகள் எதிர்கட்சிகளில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிக்கப்பட்டன.
முஸ்லிம்களிடம் காணப்படுகின்ற இந்த மனமாற்றத்தை தெளிவாக அறிந்து கொண்ட ஆளுந் தரப்பினர் மு.காவையும், அ.இ.மு.காவையும் இணைந்து போட்டியிடுவதற்கும் ஆசிர்வாதம் வழங்கியுள்ளார்கள்.
மேற்படி இரு முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்த வரை ஊவா மாகாண சபைத் தேர்தலில் தனித் தனியே போட்டியிட்டாலும், அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டாலும் கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. எதிர்கட்சியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை மத்திய மாகாண சபைத் தேர்தலில் பெற்றுக் கொண்டதனைப் போன்று பெற்றுவிடுவார்கள் என்ற எடுகோளின் அடிப்படையிலேயே எதிரும், புதிருமாக முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு வெற்று அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருந்த மு.காவும், அ.இ.ம.காவும் அதிகார தரப்பினரின் ஏவலுக்கு அமைவாக கூட்டு வைத்துள்ளார்கள்.
அதிகாரத் தரப்பினரின் எண்ணங்களுக்கு உயிரூட்டுவதற்காக களம் இறங்கியுள்ள இக்கட்சிகள் வெறுமனே ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டுமே இணைந்துள்ளன. மாறாக, கொள்கை அடிப்படையில் எதிர்கால திட்டங்களை வகுத்துக் கொள்ளவில்லை. ஊவா மாகாண சபையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஊவா மாகாண சபையில் முஸ்லிம் வேட்பாளர்களை இக்கட்சிகளின் கூட்டு மூலமாக பெற்றுக் கொண்டால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்ந்து போய்விடாது. எதிர் கால திட்டத்தின் அடிப்படையில் ஒரு உடன்படிக்கை மூலமாக முஸ்லிம் சமூகத்தினை மையப்படுத்தி இனிவரும் அனைத்து தேர்தலிலும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும். எந்த சக்திக்கு பணிந்து செல்ல முடியாத வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். ஆனால், இவை போன்ற எதுவும் இல்லாது ஒரு தேர்தலை சந்திப்பதற்கு தயாராக நிற்கின்றார்கள். இந்த கூட்டால் முஸ்லிம்களுக்கு நன்மைகள் இருப்பதாக தெரிவித்தாலும், அரசாங்கத்திற்கு அதிக பலன் கிடைக்க இருக்கின்றது.
அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம்களினால் எதிர்க் கட்சிக்கு அளிக்கப்படவுள்ள வாக்குகளில் ஒரு தொகையை மு.கா, அ.இ.ம.காவின் கூட்டு பெற வேண்டுமென்பதே அரசாங்கத்தின் திட்டமாகும். இதன் மூலமாக அரசாங்கத்தின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க முடியும் என்பதில் ஐயமில்லை.
மு.காவைப் எடுத்துக் கொண்டால், இன்றைய அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தே அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி வாய்ப்புக்களை அதிகரித்துக் கொண்டது. பல தேர்தல்களில் இவ்விதமாக செயற்பட்ட இக்கட்சியினால், எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தை விமர்சனம் செய்து வாக்குகளை பெற முடியாது. வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக நாடகம் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள் என்று மக்கள் தெளிவடைந்துள்ளார்கள். இதனை சரியாக எடைபோட்டுக் கொண்ட மு.கா தன்னை அழிப்பதற்கு அதிகாரத் தரப்பின் முழுமையான ஆதரவுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அ.இ.ம.காவுடன் கூட்டு வைத்துள்ளது.
இது போதாதென்று மு.காவை அழிப்பதற்கு புறப்பட்ட நசீர் அஹமட்டின் தலைமையிலான துஆ கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் மு.கா விட்டுக் கொடுப்பை செய்துள்ளது. ஊவாவில் தமக்கு இருக்கின்ற குறைந்தபட்ச ஆதரவுடன் அ.இ.ம.காவுடன் கூட்டு வைத்தால் தமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய முடியுமென்று மு.கா கருதிக் கொண்டாலும், இதனை ஒரு அரசியல் கட்சியின் திட்டமாக பார்க்க வேண்டுமேயன்றி, முஸ்லிம்களின் எதிர்காலத்திற்குரியதாக கூற முடியாது.
இவ்விரு கட்சிகளும் எடுத்துக் கொண்ட முடிவால் நசீர் அஹமட்தான் அதிக நன்மைகளை பெறவுள்ளார். அவர் மு.காவில் இணைந்து கொண்டதன் பின்னர் துஆ கட்சி இயங்காது. அக்கட்சி இனி அவசியமில்லை என்று ஒரு சில மு.காவினர் தெரிவித்துக் கொண்டார்கள். ஆனால், தற்போது இரட்டை இலை ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை பெற்றுள்ளது.
தமிழர் தரப்பினர் தங்களின் எதிர் கால சமூக நலனை கருத்திற் கொண்டு, தங்களின் ஆரம்ப கட்சியாகவும், பலராலும் பாராட்டப்படும் தந்தை செல்வாவின் கட்சியான தமிழரசுக் கட்சியையும் அதன் வீட்டுச் சின்னத்தையும் முன் வைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்கள். இதனை கொள்கையின் அடிப்படையில் நிறுவியுள்ளார்கள். இக்கூட்டமைப்பில் உள்ள கட்சிகளிடையே கொள்கை அடிப்படையில் அதிக வேறுபாடுகளை காண முடியாது.
ஆனால், எல்லோராலும் மதிக்கப்படுகின்ற மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் ஆரம்பித்த கட்சியின் மரச்சின்னத்தையும், கட்சியையும் வைத்து ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளாது இரட்டை இலையை தெரிவு செய்து இருப்பது இக்கட்சிகளின் கூட்டு ஒரு தற்காலிகமானது என்பதனை காட்டுகின்றது. இலங்கை முஸ்லிம்களிடையே அதிகம் பரிச்சயமானது மு.காவின் மரச்சின்னமாகும். ஆதலால், மரச்சின்னத்தில் போட்டியிட்டு இருந்தால் அதிக பலனை கொடுக்கும்.
மேலும், மரச்சின்னத்தில் இணைந்து போட்டியிடுவதற்கு முன் வராதது, அஸ்ரப்பின் கொள்கைகள் இக்கட்சிகளிடம் எந்த இடத்தில் உள்ளதென்று தெளிவாகின்றது.
முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். முஸ்லிம்களின் வாக்குகள் பிளவுபட்டால், சமூகத்தில் இருப்பும், அரசியல் பலமும் பலவீனப்பட்டுவிடும். இது முஸ்லிம்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஆதலால், முஸ்லிம் கட்சிகளும் தலைவர்களும் சமூகத்தின் நன்மைக்காக ஒற்றுமைப்பட வேண்டுமென்று பல தடவைகள் முஸ்லிம் அமைப்புக்களினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவற்றை ஏற்று நடக்கும் பக்குவம் முஸ்லிம் தலைவர்களுக்கு இருக்கவில்லை. தங்களை பெரும் சக்தியாக கணிப்பிட்டுக் கொண்டார்கள். ஒற்றுமை பற்றி பேசியவர்களை தட்டிக் கழித்தார்கள்.
2009ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடைபெற திகதி குறிக்கப்பட்ட போது, கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிம் முதலமைச்சரை பெற வேண்டும். முஸ்லிம் கட்சிகள் யாவும் ஓரணியில் இணைந்து போட்டியிட வேண்டுமென்று ஒரு குழுவினர் முயற்சிகளை எடுத்தார்கள். ஆனால், இதற்கு ஒரு கட்சியும் ஒத்துழைக்கவில்லை.
மு.கா மரச்சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றது. மற்றைய கட்சிகள் பொதுச்சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றும், அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட வேண்டுமென்றும் இரு திட்டங்களை கொண்டிருந்தார்கள். இறுதியாக தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்ததென்று சொல்ல வேண்டியதில்லை.
தங்களின் சுயநலன்களுக்கு முன்னுரிமை வழங்கி பல கட்சிகளை தொடங்கினார்கள். விட்டுக் கொடுப்பதற்கு முன் வராது இருந்தார்கள். எல்லோரும் அமைச்சர்களாக வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கென தனியான அஜண்டாவை வைத்துக் கொண்டு செயற்பட்டு, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை பிளவுபடுத்திக் கொண்டவர்கள், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை மீளவும் கட்டி எழுப்புவதற்கு திட்டமிடாது, ஊவா மாகாண சபைத் தேர்தலை மட்டும் கருத்திற் கொண்டு, இணைந்து நிற்பது ஆளுந் தரப்புக்கு இலாபங்களை பெற்றுக் கொடுப்பதற்கே. அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும் தனித்துப் போட்டியிடுவதும், இணைந்து போட்டியிடுவதும், அரசாங்கத்தை விமர்சனம் செய்வதும் முஸ்லிம் சமூகத்தின் நன்மைக்காகவல்ல. மாறாக ஆளுந் தரப்பினது நன்மைக்கும், தாங்கள் அரசியல் பிழைப்பு நடத்த வேண்டும் என்பதனாலுமாகும்.

Post a Comment