பொது பல சேனா அமைப்புடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் மற்றும் மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பு தொடர்பில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரத்ன 'திவயின' பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் தமிழாக்கம்.
தமிழில்: எம்.எம்.மின்ஹாஜ்
பதில்: - உண்மையில் இது கருத்து வேறுபாட்டு பிரச்சினை. நான் ஒரு கொள்கையின் அடிப்படையில் செயற்படுபவன் என்பது நாட்டில் அனைவருக்கும் தெரியும். நான் யாருக்காகவும் என்னுடைய கொள்கையை மாற்றமாட்டேன்.
நாட்டில் உன்னதமான அரசியல்வாதிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் ஏற்பட்ட விபரீதத்தை உணர்ந்தே நான் இவ்வாறு புரிந்துணர்வுடன் செயற்படுகின்றேன்.
எனவே எத்தகைய கெடுபிடிகள் வந்தாலும் நான் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளேன்.
கேள்வி:- இந்த பிரச்சினைக்கு அளுத்கம சம்பவமே மூலகாரணம்?
பதில்: - இந்த பிரச்சினையின் போது பொது பல சேனாவுடன் நான் பேசச் செல்லவில்லை. பௌத்த தர்மத்தைப் பற்றியே நான் பேசினேன்.
பௌத்த தர்மத்தினுடைய கோட்பாடுகளின்படி இன மத பேதத்திற்கு இடமில்லை. மாறாக உலகில் மனிதர்கள் அனைவரும் ஒரு இனத்தை சேர்ந்தவர்கள். புத்த பெருமானும் கூட மனிதர்கள் அனைவரும் ஒரே இனம் என்றே போதனையை வழங்கியுள்ளார். இதற்கமைய பௌத்த தர்மமே என்னுடைய வழி. வேறு எவருடைய வழிமுறைகளும் எனக்கு தேவையில்லை. ஏனென்றால் நாங்கள் அனைவரும் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள்.
கேள்வி :- பொதுபல சேனாவுடன் பிரச்சினைகள் ஏற்படுத்துவதினால் உங்களுக்கு அரசியல் ரீதியாக பாதிப்புக்கள் ஏற்படாதா?
பதில்: காவியுடையணிந்த சிறந்த பிக்குகள் காணப்படுகின்றனர். பௌத்த தர்மத்தின்படி பிக்குகளுக்கு உதவி புரிவதும் அடிபணிவதும் தெய்வ கடமையாகும்.
கேள்வி: - பொதுபலசேனாவிற்கு நோர்வே நாட்டிலிருந்து உதவிகள் கிடைப்பதாக நீங்கள் குற்றம் சுமத்தி வருகின்றீர்கள். இந்த குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் உண்டா?
பதில்: - நான் இதனை ஏற்கனவே நிரூபித்துக் காட்டிவிட்டேன். என்னிடம் அதற்கான சான்றுகள் உள்ளன. என்னுடைய குற்றச்சாட்டுக்களை ஊடகவியலாளர் மாநாட்டின் போது பொதுபலசேனா ஒப்புக்கொண்டது. அவர்களுக்கு அதனை ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
இருப்பினும் ஞானசார தேரர் எனக்கு சவால் விடுத்தார். இந்த சவால் எவ்வித பிரயோசனமும் அற்றது. இதன்போது என்னிடமுள்ள ஆவணங்களை எடுத்துக் காட்டினேன். இது ஒரு நபரின் மூலமாக கிடைக்க பெற்றதாகும். அந்த தகவலின் படி நோர்வே செல்ல டிக்கட் வாங்கிய விதம், அங்கே சென்று ஹோட்டல்களில் தங்கியிருந்த விதம், புலம்பெயர் தமிழர்கள் ஏழு பேருடன் பேச்சுவார்த்தை நடத்தியது போன்ற அனைத்து ஆதாரங்களும் உள்ளன.
அதுமட்டுமன்றி இவர்களுக்கு இணையத்தளமொன்றை திறப்பதற்கும் நோர்வேயிலிருந்து தேவையான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த இணையத்திற்கு 'சி.த.மு' என்ற பெயரே வைக்கப்பட்டது. அதாவது சிங்களம் தமிழ் முஸ்லிம் என்பதாகும். இதில் தொடர்பாளராக முஸ்லிம் ஒருவரையே நியமித்தனர்.
அதற்கு பின்பே இவர்கள் பொதுபலசேனாவை உருவாக்கினர். அதன் பின்பு நோர்வே தூதரகத்தை சேர்ந்த ஒருவர் அந்த பிக்குகளை சந்திக்க விரும்புகின்றீர்களா என என்னிடம் வினவினார். இதற்கு முன்பு இவர்கள் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தமையே மூலகாரணம்.
தேரர்களை சந்திக்க தயார் என்றே நான் கூறினேன். இதன்போது ஞானசார தேரர் என்னை வந்து சந்தித்து ''அமைச்சரே நாம் பழைய சம்பவங்களை மறந்து விடுவோம். நான் தற்போது உங்களுடைய கருத்தையே கொண்டுள்ளேன். அதாவது அனைத்து இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதேயாகும்'' என்றார்.
அதற்கு ''நமக்கிடையே கருத்து வேறுபாடுகளே காணப்படுகின்றதேயொழிய தனிப்பட்ட பிரச்சினைகள் ஏதும் இல்லையே, என்னுடைய கருத்தின் மீது உடன்பட்டால் எவ்வித பிரச்சினைகளும் இல்லை'' என்று நான் அவரிடம் கூறினேன்.
கேள்வி:- இது எந்த காலத்தில் நடந்தது என்று கூறமுடியுமா?
பதில்: - இது ஒரு வருடத்திற்கு முன்பு இடம்பெற்ற சம்பவமாகும். அவர்கள் நோர்வே போய் வந்த பின்பேஇந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது தேசிய ஒற்றுமை தொடர்பான மாநாடு ஒன்றை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதற்கான முழுமையாக தொகையை நான் பொறுப்பேற்கின்றேன். அத்தோடு என்னுடன் தொடர்பு கொண்டுள்ள பிக்குகளையும் இதற்கு பங்கு கொள்ள செய்ய முடியும் என்று நான் கூறினேன். இதன்பின்பு இந்த முடிவுக்கு உடன்பட்டு தேரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கேள்வி: - அந்த மாநாடு நடைபெற்றதா?
பதில் :- இல்லை. ஒரு மாதத்திற்கு பின்பு அவர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படத் தொடங்கினார்.
தேரர் ஒவ்வொரு காலத்திற்கு காலம் வெவ்வேறு கருத்துக்களை கொண்டு செயற்படுகின்றார். ஆரம்பத்தில் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டார். பின்பு முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது வரை செயற்பட்டு வருகின்றார். அது மாத்திரமின்றி யுத்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யுத்தத்திற்கு எதிராக செயற்பட்டு சில காலங்களில் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக செயற்பட்டார். பின்னர் அரசுடன் இணைந்து யுத்தத்திற்கு ஆதரவாக செயற்பட்டார். இந்நிலையில் இந்த தேரரின் நிலைப்பாடுகள் எனக்கு என்னவென்று தெரியவில்லை.
கேள்வி: -தற்போது ஞானசார தேரரிடம் நஷ்டஈடு கோரியுள்ள நிலையில் இதற்கு ஒரு சதம் கூட வழங்கப் போவதில்லையென அவர் கூறியுள்ளதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: அதனை தீர்மானிப்பது தேரர் அல்ல. நீதிமன்றமாகும். தேரருக்கு நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம் இல்லையே.
கேள்வி:- நீங்களும் சில அமைச்சர்களும் சேர்ந்து கண்டியில் மகாநாயக்க தேரர்களை சந்தித்தீர்களே... அதில் என்ன நடந்தது?
பதில்: நல்லதொரு முடிவு கிடைத்தது. இதன்போது மகாநாயக்க தேரர்கள் எமக்கு ஆசிர்வாதமும் வழங்கினர். நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் நல்ல நிலைப்பாட்டில் மகாநாயக்க தேரர்கள் உள்ளனர்.
இதேவேளை பொதுபலசேனா அமைப்பின் பிக்குகளின் செயற்பாடுகள் தொடர்பில் கவலையடைந்தனர். இதன்போது மகாநாயக்க தேரர்கள் ''சாசன சட்ட மூலமொன்றை உருவாக்க வேண்டும். அதன் மூலமே தேரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அதிகாரம் கிடைக்கும். அந்த அதிகாரம் இல்லாமையே இப்பிரச்சினைகளுக்கு காரணம். எனவே இந்த சாசனத்தை நிறைவேற்ற கூட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும்'' என்று கோரினார்கள்.
இது தொடர்பில் அனைத்து கட்சியையும் ஒன்றிணைப்பதாக நான் கூறினேன்.
கேள்வி:- அளுத்கம சம்பவத்தில் முஸ்லிம்களின் வாக்குகளை எதிர்பார்த்து நீங்கள் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்றதே?
பதில்: - நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். களுத்துறை மாவட்டத்தில் 31 சதவீதம் முஸ்லிம்களும் 69 சதவீதமளவில் சிங்களவர்களும் காணப்படுகின்றனர். நான் முட்டாள் அல்ல. சுமார் 40 வருடங்களாக அரசியலில் ஈடுபடுகின்றேன்.
நான் எந்தவொரு தேர்தலிலும் தோல்வியடையவில்லை. கடந்த மாகாண சபை தேர்தலின் போது களுத்துறையில் ஏனைய ஆசனங்களில் கட்சியின் வாக்கு குறைவடையும் போது எனது தொகுதியில் மாத்திரமே வாக்குகள் அதிகரித்திருந்தன.
அவற்றில் பேருவளையிலேயே முஸ்லிம்களின் வாக்குகள் எமக்கு கிடைக்கப் பெற்றன. அதனாலேயே முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு ஆசனம் மாத்திரம் கிடைத்தது.
முஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் முஸ்லிம்கள் தேசிய கட்சிகளுக்கு வாக்களித்தது என்னுடைய தேசிய ஒற்றுமை கொள்கையினாலாகும்.
எனவே இவையெல்லாம் புத்தியில்லாதவர்களுக்கு புரியாது. நான் எதற்காகவும் என்னுடைய நிலைப்பாட்டை மாற்றமாட்டேன்.
நான் அனைத்து இனத்தவர்கள் தொடர்பிலும் குரல் கொடுத்துள்ளேன். எனவே என்னுடைய கொள்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாறாது.

Post a Comment