அளுத்கம சம்பவத்தின் பின்னால் உள்ள அரசியல் - மங்கள எம்.பி.யுடன் நேர்காணல்

Sunday, July 6, 20140 comments



கேள்வி :- அளுத்கமயில் இடம்பெற்ற சம்பவம் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் சற்று தெளிவுபடுத்த முடியுமா?

பதில் :- அளுத்கம சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது முழு உலகத்துக்கும் தெரியும். கடந்த 15ஆம் திகதி கலகொட அத்தே ஞானசார தேரர் என்பவர் அந்த பகுதிக்குச் சென்று தான் ஒரு தேரர் என்பதற்கு அப்பால் இனவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார். அத்தோடு அங்குள்ள மக்களை ஆத்திரமடையச் செய்து வெளியில் இருந்து கொண்டு வந்தவர்களையும் தூண்டிவிட்டு அளுத்கமை, பேருவளை மற்றும் தர்காநகர் போன்ற இடங்களுக்குச் சென்று நான்கு ஐந்து மணித்தியாலங்கள் எவ்வித தடையுமின்றி பாரிய சேதங்களை விளைவித்துள்ளனர். வீடுகள், வர்த்தக நிலையங்கள் தகர்க்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதுடன் அப்பாவி உயிர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளதுடன் பலருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.

இவ்வாறு இவர்கள் தாக்குதல் நடத்திய போது அங்கிருந்த பொலிஸ் அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் அமைதியாக இருந்ததுடன் தாக்குதலுக்குள்ளான முஸ்லிம் மக்களுக்கெதிராகவே கண்ணீர் புகைப்பிரயோகம் செய்துள்ளனர்.

பின்னர் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில் கத்தி வாள்  போன்ற ஆயுதங்களுடன் இருந்த 13 பேரை பொலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களுக்கு மேலிடத்திலிருந்து வந்த அழுத்தங்களையடுத்து உடனே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இதுவரைக்கும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஞானசார தேரரை கைது செய்யவுமில்லை. அவரிடம் வாக்குமூலத்தினையும் பெறவில்லை.

கேள்வி: பொதுபல சேனாவின் செயற்பாடுகள் மற்றுமொரு பயங்கரவாதத்திற்கு இட்டுச் செல்லுமா?

பதில்: இவ்வாறான குழுக்களது செயற்பாடுகளினால்தான் நாட்டின் இனவாதம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. தமிழர்களும் அவ்வாறே பயங்கரவாத செயற்பாடுகளுக்குத் தள்ளப்பட்டார்கள். இவர்கள் கூறுவதைபோல நாட்டில் ஜிஹாத் அமைப்புக்களோ எதுவும் கிடையாது இவர்கள் முஸ்லிம் இளைஞர்களையும் அவ்வாறான இனவாத செயற்பாடுகளில் தள்ளி விடப்பார்க்கிறார்கள்.

முப்பது வருட கால யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகின்றன. இவ்வாறான நிலையில் மீண்டும் அவ்வாறானதொரு நிலைமையினை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாட்டில் தற்போது ஏற்படும் இவ்வாறான செயற்பாடுகளானது முன்னர் ஏற்பட்ட அழிவுகளை விட மோசமான அழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அத்தோடு நாட்டின் இவ்வாறான நிலைமைகளை கட்டுப்படுத்தாவிட்டால் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் எமது சிங்களவர்களுக்கான கதவுகள் மூடப்படும். அதனால் எமக்கே பாதிப்பு இன்று நாட்டிற்கு  வருகின்ற அந்நியச்செலாவணியில் அதிகம் பெற்றுத்தருபவர்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் பணியாளர்களே. இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் நாம் மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுவோம்.

கேள்வி; பொது பல சேனாவின் செற்பாடுகளை கட்டுப்படுத்த உங்கள் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது.

பதில்: நாம் இவ்வாறான சம்பவங்களை சுட்டிக்காட்டி கட்டுப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறான குழப்பங்களை விளைவித்து நாட்டை குழப்பும் குழுக்களே உண்மையில் துரோகிகள். எனவே அவ்வாறானவர்களையும் அவ்வாறான செயற்பாடுகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவது நாட்டின் மீது பற்றுக்கொண்டவன் என்ற வகையிலும் ஒரு மக்கள் பிரதி நிதி என்ற வகையிலும் எனது கடமையாகும்.

கேள்வி :- பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்தன. இவ்வாறான நிலையிலேயே அளுத்கமை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் இனங்களுக்கிடையிலான உறவில் பாதிப்பதுடன் சந்தேகங்களையும் ஏற்படுத்துமல்லவா?

பதில் :- நிச்சயமாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படுவதுடன் பல்வேறு வகையான சந்தேகங்களையும் ஏற்படுத்தும். இவ்வாறான சந்தேகங்களை இனங்களுக்கிடையில் ஏற்படுத்துவதே இந்த அரசாங்கத்தின் நோக்கம்.

ஜனாதிபதியினுடைய குடும்பத்தாருக்கு சமாதான சூழலில் இடமில்லை என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். யுத்தம் இருந்தால் அல்லது குழப்பகரமான சூழல் இருந்தால்தான் தேசப்பற்று என்ற போர்வையில் தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். 

ஆகையால் தான் அவர்களே நாட்டில் குழப்பங்களையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தி சிங்கள தமிழ் மக்களிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி சிங்களவர்களின் பாதுகாவலன் நானே என்ற எண்ணப்பாட்டை தோற்றுவித்து மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக வருவதற்கு மஹிந்த ராஜபக் ஷ கனவு காணுகின்றார்.

கேள்வி :- பொதுபலசேனா என்ற அமைப்புக்கு எதிராக அரசாங்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன இருந்தும் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் அரசாங்கம் எடுக்காதுள்ளதேன்?

பதில் :- மஹிந்த ராஜபக் ஷவினுடைய ஆட்சி பத்து வருடங்களை அண்மித்துள்ளதுடன் யுத்தம் முடிவடைந்தும் ஐந்து வருடங்கள் ஆகின்றன. இருந்தும் இன்று அரசாங்கத்துக்கு சமாதானமான இலங்கைக்குள் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் போயுள்ளது. உண்மையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தை விடவும் மிகவும் மோசமான நிலைமை இன்று ஏற்படுள்ளது.

இன்று நாட்டில் பயங்கரவாத யுத்தம் இல்லா விட்டாலும் தாய்மார்களுக்கும் வீடுகளில் உள்ள பெண்களுக்கும் சமையலறை யுத்தம் புரிய வேண்டி ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலைவாசி மலைபோல் உயர்வடைந்து நாட்டின் பொருளாதாரம் பாரியளவு சரிவடைந்துள்ளது. கொலை கொள்ளை அராஜகம் இன்று ஆட்சி செய்கிறது.

சட்டத்தின் ஆதிக்கம் இன்று முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தோடு இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளே போதைப்பொருள் வர்த்தகத்தின் கேந்திர நிலையமாக மாறி வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, இந்த அரசாங்கத்தால் இதுவரையில் நல்ல ரீதியிலான மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்த முடியாமல் போயுள்ளது.

கப்பல் வராத அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் மழைக்காலத்தில் சிதைவடைந்து செல்லும் கார்ப்பட் வீதிகளையும் விமானங்களே வராத விமான நிலையங்களையுமே இவர்களால் காண்பிக்க முடியும். இருந்தும் மக்களுக்கு காண்பிக்கக்கூடிய வகையிலான எந்த வேலைத்திட்டங்களும் கிடையாது. எனவே மூன்றாவது முறை ஜனாதிபதித்தேர்தலை வெறுங்கையுடனேயே சந்திக்க வேண்டியுள்ளது. ஆகையால் தான் தேசப்பற்றாளர்கள் என்ற பொய்யான ஒன்றை அரங்கேற்றுகிறார்கள்.

அதாவது, தேசப்பற்றாளர்கள் என்று கூறி இனவாதத்தை தூண்டி விட்டு சிங்கள பெளத்த மக்களது வாக்குகளை மாத்திரம் பெற்று அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் செய்து வருகிறது.

இவர்கள் நினைப்பதை போன்று சிங்கள பெளத்த மக்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் நன்கு சிந்திக்கக்கூடியவர்கள். சம்பிக்க ரணவக்க மற்றும் வீரவன்ச போன்ற இனவாதிகள் சிலர் இருக்கின்றார்கள் அவர்கள் வேண்டுமானால் அரசாங்கத்தின் இந்த தேசப்பற்று என்ற ஏமாற்று வேலைத்திட்டத்தை நம்பலாம். சிங்கள பெளத்த மக்களுக்கும் இன்று நாட்டில் என்ன நடக்கின்றது என்று நன்றாக தெரியும்.

கேள்வி :- ஜாதிக்க பலசேனாவின் தலைவரும், கிராந்துரு கோட்டை மகாவலி மஹா விகாரையின் விகாராதிபதியுமான வட்டரக்க தேரர் தன்னைத்தானே வெட்டிக்கொண்டதாக பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். அதன் உண்மைத்தன்மை பற்றி கூற முடியுமா?

பதில்: வட்டரக்க விஜித்த தேரருக்கு எதிராக இன்று பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். ஞானசார தேரருக்கு எதிராக முன்னின்று பேசியவரே இந்த வட்டரக்க விஜித்த தேரர். ஆகையினாலேயே இன்று அவருக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

வட்டரக்க விஜித்த தேரர் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு தன்னைத்தானே காவியுடையில் கட்டிக்கொண்டு கதையை சோடித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது அவர் மீது சுமத்தப்பட்ட மிகவும் அப்பட்டமான, பொய்யான குற்றச்சாட்டுக்களாகும்.

இவ்வாறான எந்த பிரச்சினைகளுடனும் தொடர்பு இல்லாத மாகாண சபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் போன்றோரை புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்கின்றனர். அத்தோடு இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் என்னையும் கைது செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனவே இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் அரசியல் பலம் மற்றும் பின்னணி நிச்சயமாக உள்ளது. அத்தோடு குழப்பங்களை விளைவிக்கும் குழுக்களுக்கு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.

கேள்வி :- சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் நாட்டிற்குள் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதானது மேலும் மேலும் சவாலாக அமைவதற்கு வாய்ப்பாக அமையுமல்லவா?

இன்று புலனாய்வாளர்களை பயன்படுத்துவது கூட நாட்டிற்காகவல்ல. மாறாக ஜனாதிபதியின் குடும்ப பாதுகாப்பிற்காக முழு நாடும் சர்வதேச அழுத்தத்தால் பாதாளத்திற்கு சென்றாலும் பரவாயில்லை. நாட்டிற்குள் தமது அதிகாரம் உறுதியானால் சரி என்ற நிலைப்பாட்டில்தான் இவர்கள் இருக்கின்றார்கள்.

இவர்கள் இன்று முகாபேயின் மனநிலையில்தான் செயற்படுகிறார்கள். முகாபே முழு உலக நாடுகளுடனும் பகைத்துக்கொண்டு தனது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார். அதுபோன்ற ஒரு நிலைப்பாட்டில்தான் இவர்களும் இருக்கின்றார்கள். சர்வதேச மட்டத்தில் எவ்வகையான அழுத்தங்கள் வந்தாலும் தமது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக எதையும் செய்ய தயார் என்ற நிலைப்பாட்டிலேயே இவர்கள் இருக்கின்றார்கள்.

கேள்வி: சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸாரே இன்று பல்வேறு குற்றச்செயல்களை புரிகின்றனர். அண்மையில்கூட வெள்ளவத்தைப் பகுதியில் அவ்வாறான ஒரு கொள்ளைச் சம்பவத்தை இரு பொலிஸார் புரிந்துள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

பதில் :- உண்மையிலேயே நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்துள்ளது. அத்தோடு அரசாங்கத்துக்கு சார்பாக அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்பவர்களாக இருந்தால் என்ன செய்தாலும் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்ற நிலைமை காணப்படுவதால்தான் இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன.

இன்று சில சந்தேக நபர்களை கைது செய்யும் பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் கைக்குண்டை வீச முயன்றார் அல்லது பொலிஸாரை தாக்க முயன்றார் எனக்கூறி கொன்று விடுகின்றனர். அவ்வாறான நிலைமைகளை இந்த அரசாங்கமே ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று இராணுவத்தினரும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

அதாவது, இராணுவத்தினருக்கு கொடுக்க வேண்டிய மரியாதை மற்றும் கெளரவத்தை இந்த அரசாங்கம் கொடுக்க தவறியுள்ளது. யுத்தம் செய்த இராணுவ வீரர்கள் இன்று கொங்கிரீட் போடுகிறார்கள் அல்லது சமையலறை பணிகளை செய்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளும் இராணுவத்தினர் இவ்வாறான குற்றச்செயல்களை புரிய தூண்டுகோளாய் அமைகின்றன.

கேள்வி :- யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் இதுவரையில் நாட்டின் தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வு முன்வைக்கப்படவில்லை. அத்தோடு வடக்கில் தொடர்ந்தும் அளவுக்கு அதிகமான இராணுவத்தை வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் :- நாட்டில் நல்ல புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கான நல்ல தருணமென்று மஹிந்த ராஜபக் ஷவிற்கு கிடைத்ததை போன்று ??? வரலாற்றில் எந்தவொரு அரசியல் தலைவருக்கும் கிடைக்கவில்லை.

உண்மையில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டபோதும் நாம் மகிழ்ச்சியடைந்தோம். நாம் சந்தோசப்பட்டது பிரபாகரனை கொன்றதனாலோ அல்லது தமிழர்களை கொன்றதனாலோ அல்ல. மாறாக யுத்தம் முடிந்ததன் பின்னர் நாட்டில் நல்லதொரு மாற்றம் ஏற்படும் என்றே சந்தோசப்பட்டோம். வடக்கு, கிழக்கு மக்களை ஐனநாயக நீரோட்டத்தில் இணைத்துக்கொண்டு பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து புதிய யுகமொன்று ஏற்படுத்தப்படும் என்று நாம் அனைவரும் எதிர்பார்த்திருந்தோம்.

உலக நாடுகளுடன் கைகோர்த்துக்கொண்டு ஆசியாவிலேயே சிறந்த நாடு என்ற நிலைமைக்கு செல்வதற்கும் எமக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தமது குடும்ப ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும் ஸ்தாபிப்பதற்கும் யுத்த வெற்றியை பயன்படுத்திக்கொண்டதுடன் சர்வாதிகார முறை நோக்கி பயணிக்கத் தொடங்கினார்கள்.

யுத்தம் முடிந்ததும் நான் நாடாளுமன்றத்திலே கூறினேன் ஜனாதிபதி ராஜபக் ஷவிற்கு முக்கியமான சந்தர்ப்பம் ஒன்று கிட்டியுள்ளது என்று. ஒன்று தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொள்ளும் வகையிலான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து அவர்களுக்கும் சில அதிகாரங்களை வழங்கி இந்த பிரச்சினையை தீர்க்கும் சந்தர்ப்பம் உள்ளது.

கேள்வி :- முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கான வேலைத்திட்டங்களை நீங்களே மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றதே. அது உண்மையா?

பதில் :- அது முற்றிலும் பொய்யான ஒரு தகவல். முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் அரசியலுக்கு நான் கொண்டுவர வேண்டியதில்லை. அவருக்கு அது தொடர்பாக முடிவெடுக்கின்ற வல்லமையுண்டு. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தற்போது நேரடியாக செயற்பட்டு அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பில்லை. ஆனால் இந்த நாட்டை ஆட்சி செய்தவர் என்ற வகையிலும் இனவாதத்தை இல்லாதொழித்து சமாதானத்தை ஏற்படுத்த முயன்றவர் என்ற வகையிலும் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இவர் மிகுந்த அவதானத்துடன் இருக்கிறார்.

கேள்வி :- எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் பேசப்படுகிறது. அதுபற்றி சற்று தெளிவுபடுத்த முடியுமா?

பதில் :- தற்போதுள்ள ஜனாதிபதியின் பதவிக்காலம் 2016ஆம் ஆண்டிலேயே நிறைவடையவுள்ளது. எனவே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. அவ்வாறு உத்தியோகபூர்வ அறிவிப்பொன்று வெளியானதும் நாம் எமது வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம்.

தற்போதுள்ள நிலைமையில் பொது வேட்பாளர் என்பதை விட பொது வேலைத்திட்டமே தேவைப்படுகிறது. அவ்வேலைத்திட்டத்தினை நாம் ஆரம்பித்துள்ளோம். அது தொடர்பிலான கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும் கூட முன்னெடுத்து வருகின்றோம்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham