இவ்வருடத்துக்கான ஹஜ் குழுவின் இணைத்தலைவராக தான் நியமிக்கப்பட்டிருந்தாலும் குழுவின் நடவடிக்கைகளைப் புறக்கணித்து வருவதாகத் தெரிவித்த சுற்றாடல்துறை பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.அப்துல்காதர் சவூதி அரசினால் இலவசமாக வழங்கப்படும் 'பேஸா' விசாக்கள் விற்கப்படமாட்டாது என உறுதி வழங்கப்பட்டால் மாத்திரமே ஹஜ் குழுவின் இணைத்தலைவராக செயற்பட முடியும் என பிரதமரும், புத்தசாசன மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சருமான டி.எம்.ஜயரத்னவிடம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
பிரதியமைச்சர் அப்துல் காதர் கொழும்பில் தனதில்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த இரு வருடங்களாக ஹஜ் குழுவின் இணைத்தலைவராக நான் நியமிக்கப்பட்டேன். ஆனால் ஹஜ்குழு கூட்டங்களுக்கு நான் அழைக்கப்படவில்லை. எனக்கு நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு ஹஜ் கோட்டா வழங்கப்படவில்லை. சவூதி அரசினால் இலவசமாக வழங்கப்படும் 'பேஸா' இலவச விசா எனக்குத் தரப்படவுமில்லை. இந்நிலையில் இவ்வருட ஹஜ் குழுவின் இணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.
எனது நிலைப்பாட்டினை நான் மிகத் தெளிவான பிரதமரிடம் விளக்கியிருக்கிறேன். நான் குழுவின் நடவடிக்கைகளில் செயற்பட வேண்டுமென்றால் ஒரு இணைத்தலைவர் மற்றும் ஒரு பிரதியமைச்சர் என்ற வகையில் சமவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். என்னைப் பிரதி நிதித்துவப்படுத்தும் மக்களுக்கு வழங்குவதற்காக சவூதி இலவச விசாக்களில் 50 வீதம் வழங்கப்பட வேண்டும். அது விற்பனை செய்யப்படக்கூடாது என பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
ஹஜ் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சகல வசதிகளுடன் கூடிய ஹஜ் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஹஜ் பயணிகளை திணைக்களமோ, ஹஜ் குழுவோ அசெளகரியங்களுக்கு உட்படுத்தக்கூடாது. ஹஜ் முகவர்கள் ஒவ்வொரு வருடமும் நேர்முகப் பரீட்சைகள் மூலம் நியமிக்கப்பட வேண்டிய தேவையில்லை. அவர்கள் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அல்ல. ஹஜ் முகவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். பலவருட சேவைகளை நடத்தியவர்கள். ஊழல்களில் ஈடுபட்ட முகவர்கள் தொடர்பில் திணைக்களம் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. எடுத்திருந்தால் ஹஜ் முகவர்கள் ஊழல்களைத் தவிர்த்திருப்பார்கள்.
ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிப்பவர்களிடமிருந்து அறவிடப்படும் மீள அளிக்கக்கூடிய 25 ஆயிரம் ரூபா கட்டணம் அவசியமற்றது. ஜனாதிபதியும், பிரதமரும் இவ்வாறு கட்டணங்கள் அறவிடுவதை விரும்பவில்லை.
ஹஜ்குழு கடந்த இரு வருடங்களைப் போலல்லாது நீதியான முறையில் ஹஜ் பயணிகளுக்கு அசெளகரியங்களற்ற வகையில் கடமைகளை மேற்கொள்ளும் என உறுதியளித்தால் மாத்திரமே குழுவின் இணைத்தலைவராக செயற்படுவேன் என்றார்.
Post a Comment