அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுப்போர் கண்டனம் தெரிவிப்பதானது கோமாளித்தனம்- மௌலவி முபாறக்
Friday, July 4, 20140 comments
அளுத்கம பேருவளை முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு அரசாங்கமே காரணம் என தெரிந்து கொண்ட அந்த அரசுக்கு முட்டுக்கொடுப்பவர்கள் கல்முனை மாநகர சபையில் அளுத்கம தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பது கோமாளித்தனமான மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
கல்முனை மாநகரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சபையில் ஆளும் சுதந்திர கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் இன்னொரு முஸ்லிம் கட்சியின் உறுப்பினரும் இருக்கின்றார். இவர்கள் அனைவரினதும் கட்சிகளே மத்தியிலும் மாகாணத்திலும் அரசாங்கமாக இருக்கிறது. இந்த நிலையில் இவர்கள் சேர்ந்து அளுத்கம தாக்குதலுக்கு கண்டனம் நிறைவேற்றியிருப்பதை பார்த்து சிரிப்பதா? அழுவதா? என்று புரியவில்லை.
மேற்படி, தாக்குதலுக்கு முழுக்காரணமும் அரசு என்றே அமைச்சர்களான ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஹரீஸ் பா.உ. போன்றவர்கள் பகிரங்கமாக கூறுகின்றார்கள். அரசு நினைத்திருந்தால் உடனடியாக இதனை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்றும் இவர்கள்தான் கூறுகின்றனர். அதாவது, இவர்களும் பங்காளிகளாக உள்ள அரசுதான் இத்தனைக்கும் காரணம் என்பதாயின் இந்த அநியாயங்களில் இவர்களுக்கும் பங்குள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த நிலையில் இவற்றுக்கான பொறுப்பையும் ஏற்று இனியும் நாம் இந்த அநியாய அரசுக்கு முட்டுக்கொடுக்கமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றாமல் வெட்கமின்றி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
மனிதர்களை இடிக்க வரும் வாகனத்தை தள்ளுபவர்களாக இவர்களும் இருந்து கொண்டே ஐயோ வாகனம் தான் முட்டியது நாமல்ல என்று கூறுவது போன்ற முட்டாள்தனமானதாகவே இவர்களின் கருத்துக்களும் தீர்மானங்களும் உள்ளன.
உண்மையில் ஹக்கீம், அதாவுல்லா, ரிசாத் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போன்ற கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகர பிரதேச சபைகள் முஸ்லிம்கள் மீதான சம்பவங்களை கண்டிக்கு முன் விடயத்தில் கையாலாகாத தமது தலைமைகளை பகிரங்கமாக கண்டிப்பதோடு இத்தகைய அநியாய அரசுக்கு இனியும் தமது தலைவர்கள் முட்டுக்கொடுக்க கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றினால் அதுதான் உளச்சுத்தியான சமூக பற்றுள்ள தீர்மானமாகும். இதற்கு முதுகெலும்பில்லாமல் ஆடு நனைவதை பார்த்து ஓநாய்கள் அழ வேண்டாம் என கல்முனை மாநகர ஆளுந்தரப்பு அனைத்து அரச ஆதரவு கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment