எகிப்தில் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக இஃவானுல் முஸ்லிமீன் உயர் தலைவர் முஹம்மது பதீஃ உள்ளிட்ட 37 பேருக்கு எகிப்திய நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு எகிப்தில் முதன்முறையாக ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது முர்ஸியை ராணுவ சதிப் புரட்சி மூலம் ஆட்சியில் இருந்து நீக்கியதை கண்டித்து வீதியில் இறங்கியவர்களை வன்முறைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கெய்ரோ நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியதாக அந்நாட்டின் தொலைக்காட்சி தெரிவித்தது.
இதுபோன்றதொரு வழக்கில் கெய்ரோ நீதிமன்றம் ஏற்கனவே 10 பேருக்கு தூக்குத் தண்டனையும், 36 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்திருந்தது. இதர இரண்டு வழக்குகளில் ஏற்கனவே பதீஃவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச்சில் 529 பேருக்கு மரண தண்டனை விதித்த எகிப்திய நீதிமன்றத்தின் அராஜக தீர்ப்பிற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியது.

Post a Comment