மியான்மார் மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் தொடர்பில் திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா கவலை தெரிவித்துள்ளார்.
தனது 79ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். பிறந்த தினத்தன்று இந்திய காஷ்மீர் – ஹிமாலயா பிரதேசத்தில் பௌத்தர்கள் அதிகம் வாழும் லதாக் பகுதியில் ஆயிரக்கணக்கான தமது ஆதரவாளர்கள் மத்தியில் தலாய் லாமா உரையாற்றினார்.
இலங்கையில் பௌத்தர்கள்- முஸ்லிம் சிறுபான்மையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துகின்றமையானது ஏற்கத்தக்கதல்ல என்று அவர் குறிப்பிட்டார். புத்தபகவானின் சிலைக்கு முன்னால் நின்று பௌத்தர்கள் இந்த வன்முறைகளை மேற்கொள்வதை போன்ற தோற்றத்தை நினைத்துப் பார்க்கவேண்டும் என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
புத்தர் அன்பு மற்றும் கருணையை போதித்ததாகவும் புத்தர் உயிரோடு இருந்தால் பௌத்தர்களால் தாக்கப்படும் முஸ்லிம்களை காப்பார் என தலாய் லாமா குறிப்பிட்டுள்ளார். மேலும் முஸ்லிம்கள் மீது சுன்னி பிரிவினர் மேற்கொள்ளும் தாக்குதல் குறித்தும் தலாய் லாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Post a Comment