தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்கு ஒத்தாசை வழங்குங்கள்: ரிஷாடிடம் சிவி கோரிக்கை

Sunday, June 29, 20140 comments


தமிழ் - முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்காக நீங்கள் உங்களால் இயலுமானவரை ஒத்தாசை வழங்க வேண்டும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச சபையின் சிறுவர் பூங்கா மாற்றும் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நேற்று (28) மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

சி.வி.விக்னேஸ்வரன் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மாந்தை மேற்கு பிரதேச சபை மற்றைய பிரதேச சபைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இன்று நடந்து கொண்டுள்ளது. சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம் ஆனவை எமது இளம் பிராயத்தினருக்குப் பயன் உள்ளவை என்பதில் எதுவித சந்தேகமுமில்லை.

ஆனால் அவற்றைப் பராமரிக்க ஆவண செய்ய வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். அழகாகப் பல இடங்களைத் திறந்து வைத்து விட்டு பராமரிக்காமல் பல தாபனங்கள், திணைக்களங்கள் இருந்து வருவதை நான் கண்டுள்ளேன்.

அதனால் தான் இவற்றை கரிசணையுடன் பராமரித்து வாருங்கள் என்று கூறி வைக்கின்றேன்.

இந்த விழாவில் சகோதரர் றிசாத் பதியுதீனுடன் சேர்ந்து பங்கு பற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அரசாங்க அமைச்சருடன் மாகாண அரசு இணைந்து இவ்விழாவில் ஈடுபட்டுள்ளது என்பதிலும் பார்க்க தமிழ் - முஸ்லிம் ஒத்துழைப்புக்கு இது வழிவகுத்துள்ளது என்பதே எனது மகிழ்ச்சிக்குக் காரணம்.

இவ்வாறு நான் கூறுவதற்கு பலர் ஆட்சேபணை தெரிவிக்கக்கூடும். அதாவது பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் ஏன் முதலமைச்சர் இரு இனங்களின் ஒத்துழைப்பை மட்டும் வலியுறுத்துகின்றார்.

இது இன ரீதியான பாகுபாடு அல்லவா என்று அவர்கள் கேட்கக் கூடும். வரவேற்கப்பட வேண்டிய வார்த்தைப் பிரயோகம் அது. ஆனால் அதற்குக் காரணம் உண்டு. இது வரை காலமும் தமிழரில் சிலரும், முஸ்லிம்களில் பெரும்பான்மையினரும் “சேர்ந்து வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற கூற்றுக்கு அமைவாக வாழ்ந்து வந்தார்கள்.

நாம் பெரும்பான்மையினரின் மொழியில் தேர்ச்சி பெற்று எமது சமயத்தையும் வாழ்க்கை முறையையும் கைவிடாது அவர்களுடன் நல்லுறவுடன் ஒழுகி வந்தோமானால் எமக்குப் பிரச்சினைகள் எழ மாட்டா என்று முஸ்லிம் சகோதரர்கள் இதுவரை நினைத்து வாழ்ந்து வந்தார்கள்.

ஏன் தமிழ் பேசும் மக்களும் எங்களைப் போல் நல்லுறவுடன் வாழாமல் முரண்டு பிடிக்கின்றார்கள் என்றும் கேள்வி கேட்டு வந்தார்கள்.

ஆனால் அண்மையில் நடந்திருக்கும் அனர்த்தங்கள் அவர்களைச் சற்று சிந்திக்க வைத்துள்ளன. சகோதரர் ரிஷாட் ஜனாதிபதியுடன் நேருக்கு நேர் மோதவும் இடமளித்துள்ளது.

இந்த உறவு முறைகளின் தாற்பரியம் என்ன என்று பார்த்தோமானால் ஒரு சிறுபான்மையினர் அவர்களின் கைக்கு அடங்கும் விதத்தில் வாழ முற்பட்டால் தான் பெரும்பான்மையினர் அதனைப் பொறுத்துக் கொள்கின்றார்கள்.

சிறுபான்மையினர் தம் கண்கள் முன் அபிவிருத்தி அடைந்து நல்ல நிலையை அடைவதைப் பார்த்தார்களானால் உடனே மனவெதும்பலுக்கு ஆளாகின்றார்கள்.

எங்களையும் பார்க்க விரைவில் முன்னேற இவர்களுக்கு என்ன உரித்து இருக்கின்றது என்று சிந்திக்கத் தொடங்கி விடுகின்றார்கள். பின்னர் அதைத் தடை செய்ய முற்படுகின்றார்கள். ஆகவே அவர்களின் மொழியைப் படித்து அவர்களின் வாழ்க்கை முறைக்கு ஒப்பான விதத்தில் நாங்கள் வாழ முற்பட்டாலும் இந்த மனோநிலையில் மாற்றம் வரப்போவதில்லை என்பதை அண்மைக் கால நடவடிக்கைகளால் நாங்கள் புரிந்து வைத்துள்ளோம்.

தமிழ் மக்கள் தமது தனித்துவத்தை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்ததின் காரணம் இது தான். எவ்வளவு தான் நாங்கள் சிங்களவர் போல் நடந்து கொண்டாலும், அவர்களின் நடை உடை பாவனைகளை எமதாக்கிக் கொண்டாலும் எங்களைத் “தம்பியோ” என்றும் “உன் தெமளுன்” என்றுந் தான் பெரும்பான்மையினர் ஒரு வித வெறுப்புடன் அழைக்கத் தலைப்படுகின்றனர்

“சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் சேராது” என்றார்கள் எமது தமிழ் மக்கள். “இல்லை சேருவன” என்றார்கள் பெரும்பான்மை முஸ்லிம் மக்கள். இன்று சேராது என்ற உண்மை வெளிவந்து கொண்டிருக்கின்றது.

அதற்கு நாங்கள் முஸ்லிம் மக்களைக் குறை கூறுவதாக நினைக்கக் கூடாது. குறை கூறுவதானால் மந்தைக் கூட்டத்தில் இருந்து ஒரு ஆடு வெளியே சென்று திரும்பவும் ஆட்டு மந்தையுடன் வந்து கூட்டுச் சேர்ந்ததைத் தான் நாங்கள் சுட்டிக் காட்ட வேண்டும்.

வட கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் முஸ்லிம் மக்களின் தாய் மொழி தமிழ். அவர்கள் மற்றைய தமிழ் மொழி பேசும் மக்களுடன் மிகவும் அன்னியோன்யமாகவே வாழ்ந்து வந்தார்கள்.

ஆனால் அந்த பாரம்பரிய உறவை பரிகசித்துத் தூக்கி எறிந்ததே எமக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழ் பேசும் அலகு ஆட்சிக்கு வரவேண்டும் என்று எவ்வளவோ மன்றாடியும் அதனை உதாசீனம் செய்தது எமக்கு மனவருத்தத்தைக் கொடுத்தது.

என் நண்பர் திரு.ஆ.ர்.ஆ.அஷ்ரப் உயிரோடு இருந்திருந்தால் அவர் தமிழ் - முஸ்லிம் உறவைப் பேணிப் பாதுகாக்கவே முடிவு எடுத்திருப்பார் என்பது எனது கணிப்பு.

பெரும்பான்மையினருடன் சேர்ந்து காரியங்கள் இயற்றுவதில் பிழையில்லை. ஆனால் எமது தனித்துவத்தை மறந்து சுயநல காரணங்களுக்காகப் பெரும்பான்மையினருடன் சேர முற்பட்டால் எம் மீதான மரியாதை குறைந்து விடும்.

இன்று கூட திரு.சம்பந்தன் பற்றியும் அரசாங்கத்துடன் சேர்ந்து அரசியல் நடத்தும் தமிழ்த் தலைவர்கள் பற்றியும் பெரும்பான்மை சமூகத்தினரிடையே இருக்கும் கருத்தைக் கணித்தால் அவர்களுக்குத் திரு.சம்பந்தன் மீது இருக்கும் மட்டு மரியாதை மற்றவர்கள் மீது இல்லை என்பது தெரியவரும்.

இதனை நான் அரசியலுக்கு வர முன்பே தெரிந்து வைத்திருந்தேன். எப்பொழுதுமே நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அரசியல் செய்வதே சாலப் பொருந்தும் என்று நம்புகின்றேன்.

இன்று அமைச்சர் எம்முடன் ஒரே மேடையை அலங்கரிப்பதால் அவரிடம் ஒரு கோரிக்கை விடுக்கின்றேன். தயவு செய்து தமிழ் - முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்காக நீங்கள் உங்களால் இயலுமான வரை ஒத்தாசை வழங்குங்கள்.

அதுவும் மன்னாரில் தமிழப்பேசும் கிறிஸ்தவ மக்களின் நலன்களைப் பாதுகாப்பீர்களாக! நாங்கள் சேர்ந்து ஆனால் எமது தனித்தனியான உரிமைகளுக்காகப் போராடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என மேலும் தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham