சட்டத்தை எடுக்க இடமளித்து அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது - பாராளுமன்றில் ரணில்
Tuesday, June 17, 20140 comments
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் பூரண விசாரணை அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக எவ்வாறான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதெனவும் எதிர்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
அளுத்கம மற்றும் பேருவள சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜீன் 15 ஆம் திகதி பேருவளையில் அமைதியின்மை ஏற்படுவதற்கு முன்னர் வர்த்தக நிலையமொன்று தாக்கப்பட்டமை மற்றும் பிக்கு ஒருவர் பயணித்த கார் தாக்கப்பட்டமை தொடர்பில் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.
அந்த சந்தர்ப்பத்தில் குறித்த பிக்குவின் கை துண்டிக்கப்பட்டதாக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய சம்பவங்களை தடுப்பதற்கு பதிலாக அதனை மேலும் தீவிரப் படுத்தும் நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சுமத்தினார்.
இதன் விளைவாக சொத்துக்களுக்கு பெரும் சேதமும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
15 ஆம் திகதி பொதுபல சேனா உள்ளிட்ட சில அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெளியிடங்களில் இருந்து பஸ்களில் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் மத வாதத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிடப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் தர்கா நகர் ஊடாக பேரணியாக சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் 15ஆம் திகதி பொதுபல சேனா அமைப்பு நிகழ்த்திய உரைகளின் பிரதிபலனாகவே இனவாதம் தூண்டப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சிலரின் கையிகளுக்கு சட்டத்தை எடுக்க இடமளித்து விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களின் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறும் போது அவை பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி அரசாங்கம், நீதிமன்றத்தின் தடையுத்தரவை பெற்று அவற்றை நிறுத்த நடவடிக்கை எடுத்து வருவதை ரணில் விக்ரமசிங்க இங்கு சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர் டி.எம்.ஜயரத்ன, குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment