அனைத்து மதஸ்தலங்களிலும் ஒலிபெருக்கி பாவனை தடை என்றிருக்கும் போது பள்ளிவாயல்களின் ஒலி பெருக்கிகளை மாத்திரம் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளை உலமா கட்சி வன்மையாக கண்டிக்கின்றது என தெரிவித்த கட்சித் தலைவர் அல்லாமா முபாறக் அப்துல் மஜீத் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;
நாட்டில் எந்த நிகழ்வாக இருப்பினும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டுமே ஒலி பெருக்கியை பாவிக்க முடியும் என்பது நீதிமன்ற கட்டளையாக இருக்கிறது. முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் இரண்டுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக எழுந்த வழக்கின் தீர்ப்பின்படி பள்ளிவாயல் பாங்குகளை மட்டுமல்ல அனைத்து மதஸ்தலங்களும் ஒலி பெருக்கியை வெளியில் கேட்கும்படி பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. விரும்பியோ விரும்பாமலோ இது முஸ்லிம்களுக்கு சாதகமான தீர்ப்பு என்பதை உலமா கட்சி மட்டுமே அன்று கூறியது. ஆனால் முஸ்லிம் காங்கிரசும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதனை எதிர்த்தனர்.
உண்மையில் பள்ளிவாயல் பாங்கு என்பது சுமார் 3 நிமிடங்களேயாகும். பள்ளிக்கு சென்று தொழுவோர் பாங்கு சத்தம் கேட்காவிட்டாலும் செல்லத்தான் செய்வர். செல்லாதோர் எவ்வளவு சத்தமாக பாங்கு சொன்னாலும் செல்லமாட்டார்கள். ஆனால் ஏனைய மதஸ்தலங்களோ விடிய விடிய ஒலிபெருக்கிகளை பாவிக்கின்றன. அது மட்டுமல்லாமல் பள்ளிவாயல் பக்கத்தில் வேண்டுமென்றே தொழுகின்ற வேளைகளில் ஒலி பெருக்கிகளை முடுக்கி விடுகின்றார்கள். இது தொழுகையாளிகளுக்கு இடைஞ்சலைத்தருகின்றன. முஸ்லிம்களுக்கு நன்மை தரும் இச்சட்டத்தை புரிந்து கொள்ளாத முஸ்லிம்களின் எதிர்ப்பை தொடர்ந்து இது விடயத்தை அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது.
இப்போது வக்பு சபை பாங்கு மற்றும் முக்கிய அறிவித்தல் தவிர ஏனைய நிகழ்ச்சிகளுக்கு ஒலி பெருக்கியை பாவிக்க கூடாது என தான்தோன்றித்தனமாக சட்டமியற்றுவது முஸ்லிம்களுக்கு மட்டும் செய்யும் அநியாயமாகும். பள்ளிவாயலில் தொழும்போது வேறு மதஸ்தலங்களில் ஒலி பெருக்கி சத்தமாக இயங்குவதால் தொழுகை நேரத்தில் ஒலி பெருக்கியை பாவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தென்னிலங்கையில் உள்ள பல பள்ளிகளுக்கு ஏற்படுகின்றது என்பதை தெரியாதோர் வக்பு சபையில் உள்ளது கவலை தருவதாகும்.
ஆகவே வக்பு சபை இத்தகைய அநீதியான சட்டம் கொண்டு வருவதை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் முடியுமாயின் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய எந்தவொரு மதஸ்தலத்திலும் வெளியே கேட்கும் வகையில் ஒலிபெருக்கி பாவனை தடைச் சட்டத்தை அரசாங்கம் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்த முயற்சி எடுக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment