கண்டி குருந்துகொல்ல, ஜும்ஆப் பள்ளிவாசல் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு இனந்தெரியாதோரினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன் பள்ளிவாசல் இமாமுக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை பள்ளிவாசலை சுத்தம் செய்துவிட்டு இமாம் உட்பட மற்றுமொருவர் சுன்னத் தொழுகையில் ஈடுபட்டிருந்த போதே பள்ளிவாசல் கல்வீச்சுக்கு உள்ளாகி கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. இச்சந்தர்ப்பத்திலே இமாம் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
குறுந்துகொல்ல நகரில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பள்ளிவாசல் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் வீடொன்றுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கலகெதர பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பள்ளிவாசலுக்கு இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் குருந்துகொல்ல ஜும்ஆப் பள்ளிவாசல் இமாம் மௌலவி மொஹமட் பாசில் கேசரிக்குத் தெரிவிக்கையில், இரவு 11 மணியளவில் நானும் இன்னும் ஒருவரும் தொழுது கொண்டிருந்த போது இரண்டு கருங்கல் வீச்சுகள் இடம்பெற்றன. எனது காலில் காயம் ஏற்பட்டதுடன் பள்ளிவாசல் கண்ணாடிகளும் சேதங்களுக்குள்ளாகின. நாமிருவரும் பயத்தினால் வெளியில் ஓடி வீடுகளுக்குச் சென்று பின்பு பள்ளிவாசல் தலைவருக்கு விபரங்களைத் தெரிவித்து பொலிஸில் முறைப்பாடு செய்தோம்.
எமது கிராமத்தைச் சூழ சிங்கள கிராமங்களே இருக்கின்றன. இச்சம்பவத்தால் இப்பிரதேச மக்கள் பீதியில் உள்ளனர் என்றார்.
கலகெதர பொலிஸார் விசரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment