இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மீது பொதுபலசேனா போன்ற பேரினவாத அமைப்புகள் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களுக்கு அரசாங்கமும் அதனுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம்களின் பிரதிநிதிகளுமே பொறுப்புக்கூற வேண்டும் என கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம் தெரிவித்துள்ளது.
அளுத்கம பிரதேசத்தில் பொதுபலசேனா முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட மிலேச்சத்தனமான சம்பவங்களைக் கண்டித்து மேற்படி சங்கம் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இந்நாட்டின் சுதந்திரத்திற்காக அயராது உழைத்த முஸ்லிம் மக்கள் மீது பொதுபலசேனா போன்ற இனவாதிகள் பல்வேறு அசம்பாவிதங்களை கட்டவிழ்த்துள்ளது. குறிப்பாக தம்புள்ளை பள்ளிவாசலில் ஆரம்பமான மேற்குறித்த காடையர்களின் செயற்பாடு இன்று அளுத்கம தர்கா நகர் பகுதி வரை வியாபித்துள்ளது.
முஸ்லிம்களின் மத உரிமையில் கை வைத்த இவர்கள் இன்று முஸ்லிம்களது பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யும் கைங்கரியத்திலும் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்களை அரசும் தண்டிக்காது கண்மூடித்தனமாக இருந்து வருகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளின் போது அவ்வப்போது வாக்குறுதிகளை வழங்கும் அரச தரப்பினர் சிறிது காலத்தில் அதனை மறந்து விடுகின்றனர். நாங்கள் முஸ்லிம்களை பாதுகாத்து இன ஐக்கியத்தை வலுப்படுத்துவோம். முஸ்லிம்கள் பொறுமை காக்க வேண்டும் எனக்கூறும் அரசாங்கம் மேற்படி சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதில் பின் நிற்கிறது. அரசின் இத்தகைய செயற்பாடானது முஸ்லிம் மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவே நாம் கருதுகிறோம்.
இந்நிலையில் முஸ்லிம்களின் நலன்களில் நாம் அக்கறையுடன் செயற்படுகிறோம் என மார்தட்டும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி மோகங்களுக்காக சமூகத்துக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை தட்டிக்கேட்பதற்கு தகுதியற்றவர்களாக இருக்கின்றனர்.
இதேவேளை, நாட்டில் முப்பது வருடங்களாக தலைவிரித்தாடிய யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் முன்னெடுத்துள்ளோம் என இறுமாப்புப் பேசுகின்ற ஜனாதிபதி, முஸ்லிம்கள் மீது பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புக்கள் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களை கட்டுப்படுத்துவதற்கு முன்வராததன் மர்மம் என்னவென்றும் கேட்க விரும்புகின்றோம்.
எனவே, முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களும் இந்நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்நாட்டின் தலைவர் என்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment