அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை பிரதேசங்களில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் இதுவரை 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 35 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்கள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டுவருகின்றனர் என்று பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை யின் பின்னர் கலகங்களில் ஈடுபடும் நோக்கில் பதிவு செய்யப்படாத சில அமைப்புக்கள் குறுந்தகவல்கள் மற்றும் பேஸ்புக் மூலம் பிரசாரம் செய்துவருகின்றன. பொதுமக்கள் அவற்றுக்கு ஏமாந்துவிடவேண்டாம் கொழும்பில்
தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார். ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தலைமையில் அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹனவும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டார்.
பொலிஸ்மா அதிபர் அங்கு மேலும் விளக்கமளிக்கையில்
அமைதி திரும்பியுள்ளது
அளுத்கம, தர்கா நகர் மற்றும் பேருவளை பிரதேசங்களில் தற்போது அமைதியான நிலை காணப்படுகின்றது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
என்ன நடந்தது?
கடந்த 12 ஆம் திகதி பொசன் போயா தினத்தில் சமித்த தேரர் தனது வாகனத்தில் தர்கா நகர் ஊடாக தனது விகாரையை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு முச்சக்கர வண்டியில் வந்த மூன்று முஸ்லிம் இளைஞர்கள் சமித்த தேரரின் வாகனத்துக்கு தடை ஏற்படுத்தினர். இதன்போது வாகனத்தின் சாரதிக்கும் முச்சக்கர வண்டி சாரதிக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனை தடுப்பதற்கு சமித்த தேரர் முற்பட்டுள்ளார். அதன்போது சமித்த தேரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தேரரின் வாக்கு மூலத்தில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மூன்று முஸ்லிம் இளைஞர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
நான்கு கடைகளுக்கு சேதம்
இந்நிலையில் சமித்த தேரர் அளுத்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்ததன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் இடம்பெற்ற இரண்டு மணி நேரத்தில் குறித்த மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் 300 க்கும் 400 க்கும் இடைப்பட்டோர் அளுத்கம பொலிஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன் அங்கு வந்தவர்கள் சென்றுவிட்டனர். அவர்கள் போகும்போது நான்கு வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
வரவேற்பு விழா
அதன் பின்னர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் எவ்விதமான அசம்பாவிதங்களும் பிரதேசங்களில் இடம்பெறவில்லை. பொலிஸார் பிரதேசத்தின் முஸ்லிம் மத தலைவர்களுடனும் பிக்குமார்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்நிலையில் 15 ஆம் திகதி சமித்த தேரர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார். அவரை வரவேற்க விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
உள்ளூர் பௌத்தர்கள் இந்த வேண்டு கோளை விடுத்ததாலும் பொசன் வாரம் என்பதாலும் இதற்கு அனுமதி வழங்கி னோம். அந்தவகையில் அளுத்கமவில் விழா நடைபெற்றது. அதே நேரத்தில் தர்கா நகர் பள்ளியில் முஸ்லிம் இளைஞ ர்கள் கூடினர். இவ்வாறு ஒன்று கூடுவத ற்கு இடமளிக்கவேண்டாம் என்று ஏற்கனவே முஸ்லிம் மத தலைவர்களிடம் கேட் டிருந்தோம். ஆனாலும் அதனை மீறி இவ்வாறு ஒன்று கூடினர்.
தாக்குதல்கள்
இந்நிலையில் விழா முடிந்து சமித்த தேரர் தனது வாகனத்தில் தர்கா நகர் வழியாக விகாரையை நோக்கி சென்றார். அப்போது தர்கா நகர் பள்ளியிலிருந்து கற்களாலும் தடிகளாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் இது கலவரமாக பரவியது. வன்முறைகள் கிராமங்களுக்கு பரவியது. 15 ஆம் திகதி இரவு இரண்டு இன குழுக்களுக்கு இடையில் இவ்வாறு கலவரங்கள் ஏற்பட்டன.
பின்னர் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தக் கலவரத்தில் பிக்கு ஒருவர் உயிரிழந்ததாக வதந்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் அவ்வாறு பிக்கு எவரும் உயிரிழக்கவி ல்லை. அளுத்கம பகுதியில் இரண்டு முஸ் லிம்களும் வெலிப்பன்ன பகுதியில் ஒரு தமிழரும் உயிரிழந்துள்ளனர்.
மரணங்கள் எவ்வாறு நிகழ்ந்தன?
கேள்வி : மரணங்கள் எவ்வாறு ஏற்பட்டுள்ளன?
பதில் அளுத்கமவில் ஏற்பட்ட இரண்டு உயிரிழப்புக்களும் வெட்டுக்காயங்களினாலும் வெலிப்பன்னவில் தாக்குதலினாலும் மரணம் ஏற்பட்டுள்ளது.
கேள்வி விசாரணைகள்?
பதில் விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதுவரை 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 35 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்கள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.
பொதுபலசேனாவில் யாரும்
கைது செய்யப்படவில்லை
கேள்வி: கைது செய்யப்பட்டவர்களில் பொதுபல சேனா அமைப்பில் உள்ளவர்கள் யாராவது இருக்கின்றார்களா?
பதில் அவ்வாறு பொதுபல சேனா உறுப்பினர்கள் யாரும் இல்லை. முறைப்பாடு செய்யாமல் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. பொதுபலசேனாவுக்கு எதிராக ஏற்கனவே இரண்டு தடவைகள் கொழும்பில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கேள்வி: பொதுபல சேனா இந்த விழாவை நடத்த ஏன் அனுமதித்தீர்கள்?
பதில் உள்ளூர் பௌத்தர்களே இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இதனை பொதுபலசேனா ஏற்பாடு செய்யவில்லை.
கேள்வி கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை கூற முடியுமா?
பதில் 7 பேர் முஸ்லிம்கள். ஏனையோர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆயுதம் வழங்கப்படவில்லை
கேள்வி: பொதுபல சேனாவின் தலைவருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளனவா?
பதில் இல்லை. அவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை.
கேள்வி: குறித்த விழா இடம்பெறுவதால் வன்முறைகள் ஏற்படும் என பொலிஸார் அறிந்திருக்கவில்லையா?
பதில் அவ்வாறு இல்லை
கேள்வி: சேத விபரங்கள் குறித்து?
பதில் மூவர் உயிரிழந்துள்ளனர். 31 பேர் காயமடைந்துள்ளனர். சேதங்கள் குறித்து 138 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பொது மக்கள் ஏமாற வேண்டாம்
கேள்வி: தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள்?
பதில் கொழும்பில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் கல கங்களில் ஈடுபடும் நோக்கில் பதிவு செய்யப்படாத சில அமைப்புக்கள் குறுந் தகவல்கள் மற்றும் பேஸ்புக் மூலம் பிரசாரம் செய்துவருகின்றன. பொது மக்கள் அவற்றுக்கு ஏமாந்துவிடவேண்டாம். கொழும்பில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன
அஜித் ரோஹன
செய்தியாளர் மாநாட்டில் அஜித் ரோஹன குறிப்பிடுகையில்
கொழும்பில் வெள்ளிக்கிழமை பள்ளித் தொழுகையின் பின்னர் கலகங்கள் ஏற்படும் வகையில் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு என்ற பதிவு செய்யப்படாத அமைப்பு பேஸ்புக் மற்றும் குறுந்தகவல்கள் ஊடாக பிரசாரம் .செய் கின்றது. அவ்வாறு எதற்கும் பொது மக்கள் ஏமாற்றமடையவேண்டாம் என்றார்.
Post a Comment