அளுத்கம, - தர்கா நகர், பேருவளை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று ஹர்த் தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனால் இப்பகுதிகளின் இயல்புநிலை பாதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை போன்ற பகுதிகளிலும் அம்பாறையில், பாலமுனை, அட்டாளைச்சேனை போன்ற பகுதிகளில் மூன்றாம் நாளாகவும் நேற்றையதினம் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு ஹர்த்தாலுக்கான அழைப்பினை விடுத்திருந்தது. அவ்வமைப்பின் முக்கியஸ்தர் முஜிபுர் ரஹ்மான் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
இந்த அழைப்பையடுத்து கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடைகள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் மூடப்பட்டு நேற்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
மேல்மாகாணம்
மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் பரவலாக முஸ்லிம், தமிழர்களுக்குச் சொந்தமான கடைகள் மூடப்பட்டிருந்தன.
புதுக்கடை, மாளிகாவத்தை, கொம்பனித்தெரு, பகுதிகளில் முழுமையாக கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை புறக்கோட்டை, கிராண் ட்பாஸ், தெமட்டகொடை, மருதானை, வெள்ளவத்தை, மட்டக்குளி, தெஹிவளை, வெல்லம்பிட்டி, கொலன்னாவை, கொடிகாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகமான கடைகள் மூடப்பட்டிருந்தன. இப்பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
வன்முறை சம்பவங்கள் இடம்பெற்ற பேருவளை , அளுத்கம, தர்கா நகர் மற்றும் அதனை அண்டிய முஸ்லிம் கிராமங்களில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. நேற்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்காக கொடிகள் கட்டிக்கொண்டிருந்த இருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
களுத்துறை மாவட்டத்தில், பாணந்துறை, மக்கொன, மஹகொட மற்றும் களுத்துறை நகரிலும் முஸ்லிம்கள் கடையடைப்பு செய்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
கம்பஹா மாவட்டத்தில், நீர்கொழும்பு, திஹாரி, கஹடோவிட்ட, மல்வானை உள்ளிட்ட பல பகுதிகளில் கடையடைப்பு செய்யப்பட்டது.
கிழக்கு மாகாணம்
கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளில் மூன்றாவது நாளாக நேற்றையதினமும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில், மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை பகுதிகளில் ஹர்த்தால் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தில், கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, பாலமுனை, கல்முனைகுடி, சம்மாந்துறை, இறக்காமம், நிந்தவூர், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், ஒலுவில் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதேவேளை அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பிரதேச சபை உறுப்பினர் அன்ஸில் விஷேட அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டார்.
திருகோணமலையில், மூதூர், கிண்ணியா, கந்தளாய், தோப்பூர், புல்மோட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்க்கப்பட்டது.
வடக்குமாகாணம்
யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் ஹர்த்தால் இடம்பெற்றது. சில பகுதிகளில் இராணுவத்தினர் கடைகளை திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபடுமாறு தெரிவித்துள்ளனர். எனினும் அதற்கிணங்காத மக்கள் நேற்றைய தினம் ஹர்த்தாலில் ஈடுபட்டனர்.
மன்னார் மாவட்டத்தில் நேற்று அமைதியான முறையில் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டது. இதனால் மன்னார் நகரில் பெரும்பாலான இடங்களில் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகளும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதனால் நேற்று நடைபெற வேண்டிய வழக்குகள் எல்லாம் பிறிதொரு தினத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் பல இடங்களிலும் போக்குவரத்துக்கள் மந்த கதியில் இடம்பெற்றதுடன் பெரும்பாலான தமிழ் முஸ்லிம் கடைகள் எல்லாம் மூடப்பட்டு அப்பகுதி வெறிச்சோடிகாணப்பட்டது.
கிராமப் புறங்களிலிருந்து மன்னார் நகருக்கு தங்கள் தேவையை பூர்திசெய்வதற்காக வந்த பலர் ஏமாற்றத்துடன் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது
தென்மாகாணம்
தென் மாகாணத்தில் காலி நகரம், மாத்தறை நகர், வெலிகம மற்றும் சில முஸ்லிம் பிரதேசங்களிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
வடமேல்மாகாணம்
வடமேல்மாகாணம்
வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவ ட்டம் முழுவதும் முஸ்லிம்கள் கடையடைப்பு செய்து அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். புத்தளம் நகர், மதுரங்குளி, சிலாபம், ஆரச்சிக்கட்டுவ, பாலாவி, நுரைச்சோலை, கற்பிட்டி உட்பட பல பகுதிகளில் கடையடைப்பு இடம்பெற்றது. குருநாகல் மாவட்டத்தில் ஆங்காங்கே சில பகுதிகளில் மாத்திரம் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. பறகஹதெனிய, பன்னல உள்ளிட்டபகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன.
மலையகம்
கண்டி நகரிலும் கட்டுகஸ்தோட்டையிலும் பெரும்பாலான முஸ்லிம் கடைகள் அடைக்கப்பட்டு அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அக்குறனை பகுதியில் காலை வேளையில் சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. எனினும் பிற்பகல் வேளையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் பொலிஸாரினதும் இராணு வத்தினரதும் அச்சுறுத்தல் காரணமாக சில கடைகள் திறக்கப்பட்டதாக தெரிவிக்க ப்படுகின்றது.
பதுளை, வெலிமடை, பண்டாரவளை பகுதிகளிலும் ஆங்காங்கே கடையடைப்பு செய்யப்பட்டது.
கிராண்ட்பாஸ்
கிராண்ட்பாஸ்
மாளிகாவத்தை
புறக்கோட்டை
புறக்கோட்டை
புறக்கோட்டை
புறக்கோட்டை
கோட்டை
கோட்டை
கம்பணித்தெரு
வெள்ளவத்தை
புதுக்கடை
புதுக்கடை
Post a Comment