முஸ்லிம்களின் முன்னேற்றம் பொறுக்காமல் அடித்து விரட்டுகின்றனர்

Sunday, June 29, 20140 comments


முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதை பெரும்பான்மையினர் பொறுக்க முடியாமலே அவர்களை அடித்து துரத்தி, அவர்களின் தொழிலிடங்கலுக்கு தீ வைக்கின்றனர் என வடமாகாண முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு நேற்று (28) காலை கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னர் தமிழர்கள் இலங்கையின் தெற்கில் இருந்து விரட்டப்பட்டார்கள். இன்று முஸ்லிம்கள் விரட்டப்படுகின்றார்கள்.

சிறுபான்மையினரால் தமக்கு அச்சுறுத்தல்கள் நிகழ்கின்றன, போட்டிகள் உருவாகின்றன அல்லது நிகழக் கூடும் என்று பெரும்பான்மையினர் நினைத்தால் உடனே சிறுபான்மையினரைத் துன்புறுத்தத் தொடங்கி விடுவார்கள்.

முன்னர் தமிழர்கள் கல்வியில் சிறந்த அரசாங்க உத்தியோகங்களில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி இருந்தார்கள். இதனால் தான் தமிழர்களை விரட்ட 1958ம் ஆண்டு தொடக்கம் கலவரங்கள் தெற்கில் வெடித்தன, 1983ல் முற்றாக வெடித்தது.

இன்று முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதைக் கண்டதும் பெரும்பான்மையினருக்கு அதைப் பொறுக்க முடியாமல் இருக்கின்றது. அடித்துத் துரத்தப் பார்க்கின்றனர். தொழிலிடங்களைத் தீக்கு இரையாக்குகின்றனர்.

இதை ஏன் கூறுகின்றேன் என்றால் நாம் ஒன்றை மனதில் வைத்து சிந்திக்க வேண்டும். மேலைத் தேசங்களில் உயர் கல்வி நாடுவோர் தொகை அங்குள்ள உள்ளூர் வாசிகளினுள் மிகமிகக் குறைவு.

அவர்களின் எல்லா உயர்கல்வி தொழில்களையும் இந்தியரும், இலங்கையரும், வேறு நாட்டினரும் தம் கைவசமாக்கியுள்ள இந்தத் தருணத்தில், பொருளாதார சரிவை மேலைத் தேசங்கள் எதிர்நோக்க வேண்டி வந்தால் என்ன நடக்கும்? உள்ளூர் மக்களின் தொழில்களுக்குப் பாதிப்பு ஏற்படும்.

அதனால் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறிய எம்மவர்கள் மீது கோபம் ஏற்படக் கூடும். இன்று இந் நாட்டின் தெற்கில் எவ்வாறு அப்பேற்பட்ட கோபம் பிரதிபலிக்கப்படுகிறதோ அதே போல் மேலைத் தேசங்களிலும் அவர்களின் கோபம் மேலெழுந்து வந்தால் என்ன நடக்கும்? எம்மவரைத் தமது சொந்த நாடுகளைத் தேடிச் செல்ல அப்பேர்ப்பட்ட ஒரு நிகழ்வு வழிவகுக்கும்.

எனவே எங்கள் மாணவ மாணவியர் உயர் கல்வியின் பின்னர் மேலைத் தேசங்களுக்குச் சென்று குடியேற வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். என்று கூறுகின்றேன்.

எமது நாட்டில் இருந்தே மக்களுக்குத் துணையாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்று கூற ஆசைப்படுகின்றேன். அதுவும் வட, கிழக்கு மாகாணங்களில் இத் தேவையானது முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு முக்கியமாகி வருகின்றது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham