நாட்டின் பல பகுதிகளிலும்
முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள்
தொடர்பில் முஸ்லிம் நாடுகள் நேரடியாகத் தலையிட்டு, உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் என்று ஆறு முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் நேற்று இரவு அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது
இல்லத்தில் அவசரமாக சந்தித்து கலந்துரையாடிய போதே அவர்கள் இதனைத்
தெரிவித்துள்ளனர்.
இந்த முக்கிய சந்திப்பில் ஈரான், கட்டார், ஆப்கானிஸ்தான், குவைத்,
பாகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய ஆறு நாடுகளின் தூதுவர்கள் கலந்து
கொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற
உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின்
மு.கா. குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், கட்சியின் சர்வதேச விவகாரப்
பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சர் ஹக்கீம் குறித்த முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுக்கு
அளுத்கம சம்பவம் தொடர்பில் மிகவும் ஆழமாக விளக்கிக் கூறியதுடன் அதன்
பின்னணிகள் குறித்தும் அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகள்
பற்றியும் எடுத்துரைத்தார்.
பொது பல சேனா என்கின்ற பேரின கடும்போக்கு- தீவிரவாத இயக்கத்தினரின் இந்த
திட்டமிட்ட தாக்குதல்களினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்,
உயிர் மற்றும் உடமை இழப்புகள் தொடர்பிலும் தற்போதைய கள நிலைவரம் பற்றியும்
இதன்போது அமைச்சர் ஹக்கீம் விளக்கமளித்தார்.
இவற்றை மிகவும் அவதானமாக கேட்டறிந்து கொண்ட தூதுவர்கள் இலங்கை வாழ்
முஸ்லிம்களின் இக்கட்டான நிலைமை குறித்து தமது நாடுகள் கவலை
கொண்டிருப்பதாகவும் அவர்களின் உயிர், உடமைகளுக்கு ஏற்பட்டுள்ள
அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிகவும்
பொறுப்புணர்வுடன் முயற்சிகளில் ஈடுபட தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டனர்.
குறிப்பாக இப்பிரச்சினைகள் தொடர்பில் தமது நாடுகளின் தலைவர்கள், இலங்கை
ஜனாதிபதி மற்றும் அரசாங்க உயர் மட்டத்தினருடன் நேரடியாக பேச்சுவார்த்தைகள்
நடத்துவதற்கு தாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என அமைச்சர் ஹக்கீமிடம்
தூதுவர்கள் உறுதியளித்தனர்.
முஸ்லிம் நாடுகள் நேரடியாகத் தலையிடுவதாக உறுதி
Tuesday, June 17, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment