நாமே எமது கடைக்கு தீ வைத்ததாக பொய் பிரசாரம் - பேருவளை கடை உரிமையாளர்
Monday, June 30, 20140 comments
கடந்தவாரம் அடையாளம் தெரியாதோரால் தமது கடைக்கு தீ வைக்கப்பட்ட நிலையில் அதனை நாமே மேற்கொண்டதாக ஊடகங்கள் மூலம் பிரசாரங்கள் கொண்டு செல்லப்படுவதாக பேருவளை, அம்பேபிட்டிய பிரதேச வர்த்தகர் ஒருவர் குறிப்பிட்டர்.
பேருவளை, அம்பேபிட்டிய, இக்ராஃ தொழில் நுட்ப வீதியில் அமைந்துள்ள பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணியளவில் தீ பரவியிருந்தது. இது தொடர்பில் கேசரியானது அடையாளம் தெரியாத நபர்களினால் தீ வைக்கப்-பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்த நிலையில் சகோதர மொழி பத்திரிகைகளில் உரிமையாளரே கடைக்கு தீ வைத்துவிட்டு பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்துள்ளதாகவும் அரச உதவிகளை எதிர்பார்த்தே அவ்வாறு செய்திருப்பதக சந்தேகிப்பதாகவும் பொலிஸாரை மேற்கோள்காட்டி பிரதான தலைப்புச் செய்தியாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந் நிலையில் பேருவளை, அளுத்கம் பிரதேசங்களுக்கு நேற்று முன் தினம் கள விஜயம் செய்திருந்த கேசரி குழுவினர் இது தொடர்பில் ஆராய்ந்தனர்.
தீயினால் மொஹமட் நளீம் என்ற நபருக்கு சொந்தமான ' இர்ஷாத் கிப்ட் வேல்ட்' என்ற குறித்த கடைக்கு சேதங்கள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. கடையின் பின் பக்க வாசலிலேயே தீ வைக்கப்பட்டிருப்பதற்கான அடையாளம் காணப்பட்டது.
இந் நிலையில் கடையின் உரிமையாளரான மொஹமட் நளீம் தகவல் தருகையில்,
கடையினை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று உறங்க தயாரான போது எமது கடைக்கு தீ வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்தே நான் அங்கு சென்றேன். இதன் போது கடையின் அருகே பலர் கூடியிருந்ததுடன் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் இருந்தனர். அப்போது பெரியளவில் தீ பரவி இருக்கவில்லை. அதன் பக்க கதவூடாக கடையினுள் போடப்பட்டிருந்த இரு பெற்றோல் குண்டுகள் பின்னர் மீட்கப்பட்டன. எனினும் அதில் எனது கைரேகை கூட இருக்கவில்லை.
சகோதர மொழி பத்திரிகையில் பொலிஸ் மோப்ப நாய் என்னை காட்டிக்கொடுத்ததாக கூறப்பட்டிருந்தது. எனினும் தீ வைக்கப்பட்ட பின் பக்கமாக பொலிஸ் மோப்ப நாயை சுதந்திரமாக செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை.
கடையினுள் தீ பரவுவதாக தெரிந்தவுடன் உள்ளே உள்ள மின் விளக்குகளை செயற்படுத்துவதற்காக முன் பக்கமாக வுள்ள கதவுகளை திறக்க வெளிச்சம் பற்றவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் நிறைய பூட்டுகள் உள்ளதால் அவற்றுக்கு இலக்கமிட்டுள்ளோம். இருட்டில் அவை தெரியாததால் நெருப்பு குச்சி ஒன்றினால் வெளிச்சம் பற்றவைத்தேன். அந்த நெருப்புக் குச்சியை வைத்தே இவர்கள் நானே கடைக்கு தீ வைத்ததாக கூறுகின்றனர்.
எனினும் கடைக்கு இதனால் பெரிய பாதிப்பு ஏற்படாத நிலையில் இது குறித்து நான் பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்றை அளிக்கவே இல்லை. பரவ ஆரம்பித்த தீயை நாமே நீர் ஊற்றி அணைத்துவிட்டோம்.
அன்றைய தினம் நள்ளிரவு 1.00 மணியளவில் என்னை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று மூன்று மணிவரை அவர்களே என்னிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டனர். இது தொடர்பில் நான் பொலிஸாருக்கு முறையிடவோ அல்லது நஷ்ட ஈடு கோரவோ இல்லை. என்றார்.
எவ்வாறாயினும் இந்த சம்பவத்துக்கு முன்னரேயே குறித்த கடையின் கட்டட உரிமையாளார் கடையின் கட்டடத்தை மீள தருமாறு அழுத்தம் கொடுத்து வருவதாக அறிய முடிந்தது.
Post a Comment