காணாமற்போன மலேசிய 'எம்.எச்.370' விமானத்தை தேடும் நடவடிக்கை தொடர்பான வழிமுறையை திட்டமிடும் முகமாக அவுஸ்திரேலிய, மலேசிய மற்றும் சீன அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மலேசிய மற்றும் சீன போக்குவரத்து அமைச்சர்கள் காணாமற் போன விமானத்தை தேடும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கும் அங்கஸ் ஹூஸ்டன் மற்றும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் வரென் தரஸ் ஆகியோர் கன்பராவில் சந்தித்து மேற்படி பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
கடந்த மார்ச் 8ஆம் திகதி 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நகருக்கு பயணித்த வேளை காணாமற் போன 'எம்.எச்.370' விமானத்தை தேடுவதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் விமானத்தின் சிதைவுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் மேற்படி விமானத்தின் சிதைவுகளை கண்டுபிடிக்க மேலும் ஆற்றல் மிக்க ஆழற்ற நீர்மூழ்கி கப்பலொன்று தேவைப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் வரென் தரெஸ் கன்பராவில் இடம்பெற்ற சந்திப்பின்போது கூறினார்.
இத்தகைய நீர்மூழ்கி உபகரணங்கள் உலகமெங்குமுள்ள கடற்படைகள் மற்றும் அரசாங்கங்களுக்கு சொந்தமாக இருக்கலாம் என்றபோதும் அவற்றை தனியார் துறையிடமிருந்து பெறுவதே பெருமளவுக்கு சாத்தியமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் அத்தகைய உபகரணமொன்றை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஒரு மாதம் முதல் இரு மாதங்கள் செல்லலாம் எனவும் அதுவரை ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட புளூபின் - 2 ரோபோ நீர்மூழ்கிக் கப்பல் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படும் என அவர் கூறினார்.
Post a Comment