முஸ்லிம்களுக்கு எதிரான பெளத்த அமைப்புகளின் செயற்பாடுகளை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதிக்கு முஸ்லிம் அமைச்சர்களும் எம்.பி.க்களும் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பொறுப்பு வாய்ந்த எவரும் என்னைக் கையொப்பமிடுமாறு கேட்கவில்லை என சுற்றாடல் துறை பிரதியமைச்சர் ஏ. ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பிரதியமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு அவர் கூறினார். தொடர்ந்தும் அவர் விளக்கமளிக்கையில்
பொது பலசேனா, சிங்கள ராவய மற்றும் ராவணா சக்தி ஆகிய பெளத்த தீவிரவாத அமைப்புகளினால் முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் வெறுப்பு பிரசாரங்களை உடனடியாக நிறுத்துவதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கையொப்பமிடுமாறு எந்த முஸ்லிம் அமைச்சரோ, பாராளுமன்ற உறுப்பினரோ என்னைக் கோரவில்லை.
தயாரிக்கப்பட்ட கடிதத்தில் கையொப்பமிடுமாறு பொறுப்புள்ளவர்கள் தான் என்னிடம் கேட்டிருக்க வேண்டும். தொலைபேசியில் இது சம்பந்தமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், எந்தவொரு எம்.பி.யும் என்னிடம் பேசவில்லை. பொறுப்பற்றவர்கள் பேசினால் அதற்குப் பதிலளிக்க வேண்டிய தேவை எனக்கில்லை.
முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை பேசுவதற்கு ஜனாதிபதிக்கு கடிதம் தேவையில்லை. நேரடியாக ஜனாதிபதியை சந்தித்து பேசித் தீர்க்கலாம். உண்மையாக முஸ்லிம்களை ஏமாற்றிக்கொண்டு அரசியல் செய்பவனல்ல நான்.
முஸ்லிம்களின் மார்க்க விடயத்தில் நான் எதனையும் விட்டுக்கொடுக்கமாட்டேன். ஹலால் ,ஹஜ் , பள்ளிவாசல் அனைத்தும் முஸ்லிம்களுக்கு வேண்டும். நாட்டில் முஸ்லிம்கள் திருமணம் செய்து, வீடுகள் நிர்மாணித்து, சுதந்திரமாக ஏனைய இன மக்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருடன் முஸ்லிம்கள் தொடர்பாக என்னால் தனியாக பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
நான் ஒரு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு கூடாத பெயர் ஏற்பட இடமளிக்க முடியாது. நாமனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் தீர்மானம் மேற்கொள்வதற்கான எந்தக் கூட்டத்துக்கும் என்னை அழைக்கவில்லை.
நானும் அஸ்வர் எம்.பியும் கடிதத்தில் கையொப்பமிடாவிட்டாலும் ஜனாதிபதி நடத்தும் பேச்சுவார்த்தைகளுக்கு அவர் எம்மிருவரையும் கட்டாயம் கூப்பிடுவார்.
முஸ்லிம்களுக்கு எதிரான சவால்களுக்கு முகம் கொடுக்க நான் எதற்கும் தயாராகவே இருக்கிறேன்.
சத்தியாக்கிரகம் என்றால் என்ன, ஆர்ப்பாட்டங்கள் என்றால் என்ன நான் முன் நிற்பேன் என்றார்.
Post a Comment