பொது வேட்பாளரை தெரிவு செய்யும் தருணம் இன்னும் வரவில்லை - கபிர் காசிம்
Monday, May 5, 20140 comments
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து அறிவிப்பதற்கான தருணம் இன்னும் வந்துவிடவில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபிர் காசிம் தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதித் தேர்தலை அரசாங்கம் விரைவில் நடத்தக்கூடும் எனவும், அதில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சிகளிடையே ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாக வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே இதனை அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் அறிவித்த பின்னரே இது தொடர்பில் சிந்திக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஏனைய அரசியல் கட்சிகளுடனும் அமைப்புக்களுடனும் ஐ.தே.க. ஆலோசனைகளை நடத்திவருவதாகத் தெரிவித்த அவர், ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றியமைப்பது குறித்தே இந்தப் பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இருந்தபோதிலும் இந்தப் பேச்சுக்களின் விபரங்களைத் தெரியப்படுத்துவதற்கு மறுப்புத் தெரிவித்த அவர், இந்தப் பேச்சுக்கள் மிகவும் இரகசியமாகவே நடத்தப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டார். கோட்டே நாக விகாரை வண மாதுறுவேவ சோபித தேரருடன் ஐ.தே.க. பேச்சுக்களை நடத்தியிருப்பதையும் உறுதிப்படுத்திய அவர், அது குறித்த மேலதிக தகவல்களை வெளிப்படுத்தவில்லை.
ஐ.தே.க.வின் அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி. சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தலாம் என ஐ.தே.க. எம்.பி. சிறிலால் லக்திக கடந்த வாரத்தில் தெரிவித்திருந்தார். இது குறித்து கபிர் காசிமிடம் கேட்ட போது, இது தொடர்பில் கட்சியின் செயற்குழுவே முடிவெடுக்க வெண்டும் எனத் தெரிவித்தார்.
Post a Comment