முஸ்லிம்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட அழைப்பு
Monday, May 5, 20140 comments
இலங்கையில் நாடுதழுவிய அளவில் முஸ்லீம் மக்கள் மீது சிங்கள பெளத்த பேரினவாத இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் இன்று கடும் அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுபல சேன, ஜாதி கெல உறுமய, ராவண பலய என்னும் அமைப்புகளில் சிலவற்றை இலங்கை அரசே உருவாக்கியும் மற்றவற்றிற்கு முழு ஆதரவளித்தும் முஸ்லீம் மக்கள் மீதான இவ்வொடுக்குமுறையை காவல் துறை மற்றும் இராணுவ பிரிவுகளின் நேரடி ஆதரவுடன் பகிரங்கமாக நிறைவேற்றி வருகிறது.
முஸ்லீம் மக்கள் இலங்கை தீவின் ஒரு மக்கள் அல்லர் என்னும் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது, அவர்களது இன, மத கலாச்சார அடையாளங்களை இழிவுபடுத்துவது என்னும் வகையில் ஓர் சமூக, இன அழிப்பு நடவடிக்கைகள் தூண்டிவிடப்பட்டுள்ளன. அவர்களது குடியிருப்பு, விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன, பள்ளிவாசல்கள் மூடவைக்கப்படுகின்றன, தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. இலங்கைத்தீவில் நீண்ட வரலாறு கொண்ட முஸ்லீம் மக்கள், இலங்கையில் வியாபாரத்தின் நிமித்தம் சமீபத்தில் வந்தேறிய குடிகள் என்று அவர்களை சிறுமைப்படுத்தும் வகையில் அவர்களது வரலாறு திரிபு படுத்தப்படுகிறது. வியாபார நிலையங்கள் தாக்கப்படுகின்றன, வியாபாரிகளும் ஊழியர்களும் தாக்கப்படுகிறார்கள்.
முஸ்லீம்கள் விதேசிகள், சந்தர்ப்பவாதிகள், துரோகிகள், இனப்பெருக்க விகிதத்தின் படி இலங்கையில் பெரும்பான்மையினராகிவிடுவார்கள் என்னும் பலவகையான கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கும் பழிப்புரைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். முஸ்லீம் மக்களை இவ்வாறு முத்திரை குத்தியவர்கள் தான் இன்று அவர்கள் நேசிக்கும் அல்லது நேசிப்பதாகக் கூறிக்கொள்ளும் தேசியங்களுக்கு எதிராக அதே வேலையை எந்த வெட்கமும் இன்றி செய்து வருகின்றனர் என்பதை இங்கு கவனிக்கவேண்டும்.
சிங்கள பேரினவாதம் எவ்வாறு இலங்கைத்தீவை சிங்களமக்களின் தீவாக மட்டும் உருவாக்க முனைகிறதோ; பெளத்த ஆதிக்க வாதம் இலங்கை முழுவதையும் பெளத்த நாடாக்க முயற்சிக்கிறது. இதன் வெளிப்பாடுதான் ஈழத்தமிழர்கள், முஸ்லீம்கள், மலையக மக்கள் மீதான தேசிய, இன, மத ரீதியான வரலாறு தொட்டு நிகழ்ந்து வரும் ஒடுக்குமுறைகள்.
முஸ்லீம் மக்களுக்கெதிரான அனைத்து நடவடிக்கைகளும் பெளத்த பிக்குகளின் தலைமையிலும், அவர்கள் மட்டுமே ஈடுபடும் நிகழ்வுகளாகவும் இருப்பதென்பது; இலங்கை எனப்படும் தேசியம் பெளத்த தேசியம் எனும் மதத்தேசியமாக பெரியளவில் உருவம் எடுத்து வருகிறது என்பதைக்காட்டுகின்றது. உலக அளவிலே முஸ்லீம் மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கும் கருத்தாக்ககமும், பர்மாவிலே பெளத்த மதவெறியர்களால் முஸ்லீம்கள் இன அழிப்பிற்கு உள்ளாவதும் இலங்கையில் இன, மத வெறியர்களின் நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட சில பிரிவினரிடம் ஆதரவை பெறுவதற்கு வழிவகுத்துள்ளது.
இலங்கையை பெளத்த, சிங்கள நாடாக்கும் வரை தமிழர்கள், முஸ்லீம்கள், மலையகத்தமிழர் மீதான ஒடுக்குமுறைகள் தொடரும். இதுதான் இதுவரைகாலமும் தேசிய இன ஒடுக்குமுறையை சந்தித்து வரும் நம் அனைவரதும் வரலாற்றுப்பாடம். சிங்கள, தமிழ், முஸ்லீம்,மலையக தமிழர் ஆகிய இலங்கைவாழ் மக்களின் உள் முரண்பாடுகளில், ஊட்டி வளர்க்கப்பட்ட இனவாதத்தில், மதவெறியில், பிரதேச வெறியில் இன்று குளிர் காய்வது இலங்கையரசும் சந்தர்ப்பவாத தமிழ், முஸ்லீம், மலையக அரசியல் தலைமகளுமேயாகும்.
கடந்த கால வரலாறுகள் பல கசப்பான இனக் குரோத, சந்தர்ப்பவாத நடவடிக்கைகளைப் பதிவிட்ட படியே நகர்ந்திருக்கின்றன. பௌத்த சிங்கள பேரினவாத அரசினால் அப்பட்டமான ஒடுக்குமுறைக்குள்ளாகும் தேசிய இனங்கள் தமக்குள் மோதிக் கொண்டமை அல்லது பாராமுகமாக இருந்தமை இன ஒற்றுமைக்குப் பெருஞ்சவாலாகவே இன்று உள்ளன. சிங்கள தேசத்தில் இனவாதம் அதனது எல்லா அலகுகளிலும் கணிசமான அளவு புரையோடிப் போய் இருப்பதனால் அங்கிருந்து இனவாதத்தை எதிர்த்து வரும் குரல்கள் நலிந்தே ஒலித்து வந்திருக்கின்றன.
முஸ்லீம் மக்களின் தேசியம், தமிழ் தேசியம் என்பன முற்போக்கானதா பிற்போக்கானதா என்ற எங்கள் ஆய்வுகளை நாம் செய்து கொண்டிருப்பது ஒருபுறமிருக்க முதலில் இலங்கை தேசிய இன மக்களின் தேசிய உணர்வை, உரிமையை அங்கீகரிக்கப்பதை நடைமுறையாகக் கொள்வோம். முஸ்லீம் மக்களின் தேசியத்தை பிற்போக்கான மதத்தேசியம் என வரையறுத்து புறக்கணிப்பு செய்யும் சில "முற்போக்காளர்களின்" நிலைப்பாடு, தமிழ் தேசியத்தை இனவாதம், குறுந்தேசியவாதம் என புறக்கணிப்பு செய்யும் நிலைப்பாட்டிற்கு ஒப்பானதாகும்.
தமிழ் மக்களின் உரிமைக் குரல் தமிழ் மண்ணில் நெரிக்கப் பட்டு அதனது போராடும் வலிமையை அது மீண்டும் பெற்றுக் கொள்ளும் சாத்தியம் இப்போதைக்கு இல்லையென்ற கணிப்பில் தனது அடுத்த குறியாக முஸ்லீம்களை இலக்கு வைக்கிறது இலங்கை இனவாத அரசு. இலங்கை சுதந்திரம் அடையுமுன்பே தோற்றுவாய் பெற்ற சிங்கள பௌத்த பேரினவாதம், இலங்கையில் வாழும் சிறுபான்மையினர் மீது ஒவ்வொரு காலகட்டங்களிலும் திட்டமிட்ட வகையில் ஒரு குறிப்பிட்ட கால வரம்பில் ஒரு குறிப்பிட்ட இனத்தினை நோக்கி தனது அடக்குமுறை இயந்திரத்தை முடுக்கி விட்டு வருகிறது. இதற்கு மற்றைய இனங்கள் துணை போவதும் அமைதியாக இருந்து மறைமுக ஆதரவு வழங்குவதும் இனவாதிகளின் இராஜதந்திர வெற்றியாகவே பார்க்கப் படுகிறது. இந்தக் கபடத் தனமான ஒடுக்குமுறை இயந்திரத்தின் தற்போதைய நிகழ்ச்சி நிரலை மற்றைய தேசிய இனங்கள் விளங்கிக் கொள்ளாது தள்ளி நின்று வேடிக்கை பார்க்க முயல்வது மிகவும் ஆபத்தான நடைமுறையாகும்.
ஒடுக்கப்படும் தேசியர்களாகிய தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் ஐக்கியத்திற்காக பாடுபடுவோம்!
சிங்கள மக்களில் இருந்து நீட்டப்படும் நியாயமான நேசக்கரத்தை இறுகப்பற்றிக் கொள்வோம்!
இலங்கைத் தீவினிலே ஒவ்வொரு தேசிய இன மக்களின் தேவைகளுகேற்ப போராட்டங்களை கட்டியமைப்போம்!
தேசிய, இன, மத வேறுபாடுகள், முரண்பாடுகளை தவிர்த்து இன்று பாரிய ஒடுக்குமுறைக்குள்ளாகும் முஸ்லீம் மக்களுடன் சிங்கள, தமிழ், மலையக மக்கள் ஒன்றிணைந்து போராடுவோம்.
முஸ்லீம் மக்களின் உரிமைக்கான அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுப்பதுடன் சாத்தியமான தளங்களில் புதிய திசைகள் அமைப்பு பங்காளியாகவும் இருக்கும்.
புலம்பெயர் முஸ்லீம் மக்களால் மே 5 லண்டனில் உள்ள இலங்கை தூதுவராலையத்திற்கு முன் நடைபெறும் அர்ப்பாட்டத்திற்கு எமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
புதிய திசைகள்
Post a Comment