முஸ்லிம்களின் சனத்தொகை மிக வேகமாக அதிகரிக்கிறது - பொதுபலசேனா
Sunday, May 25, 20140 comments
நாட்டில் முஸ்லிம்களின் சனத்தொகை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 2040 ஆம் ஆண்டில் இந்நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மை இனமாக மாற்றம் கண்டு விடுவார்கள் என்று சிலர் தெரிவிக்கின்றார்கள். என்றாலும் இது தொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி 2081 ஆம் ஆண்டில் சிங்களவர்களின் சனத்தொகையையும் மீறி முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விடுவார்கள் என பொதுபல சேனா அமைப்பின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவின் தலைவர் சமில லியனகே தெரிவித்தார்.
கொழும்பு நூலக கேட்போர் கூடத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் வெளியீடான வங்சயக வினாசய அபிமுவ (அழிவுக்கான விளிம்பில் ஓர் இனம்) என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
சிங்கள இனம் அழிவடைந்து வரும் நிலையினை பௌத்த மக்கள் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. சனத்தொகையை அதிகரித்துக் கொள்வதற்கு இப்போதிருந்தே செயற்பட வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் உருவாகி வரும் சவால்கள் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. கிழக்கில் தமிழ் இனத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை தமிழ் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி, முறக்கொட்டான்சேனை, சந்திவேலி, கிரான், கோரகல்லிமடு பிரதேசங்களில் தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறி வருகின்றன.
வடக்கிலும் முஸ்லிம்கள் தமது இனத்தைப் பெருக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வடக்கில் விதவைகளாக உள்ள தமிழ் பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ளும் குழந்தைகளை முஸ்லிமாகவே வளர்க்கிறார்கள்.
வட மாகாண சபையில் சிங்களவர்களுக்கு எதிரான பிரேரணைகள் அடிக்கடி நிறைவேற்றப்படுகின்றன. வடமாகாண சபை சுய ஆட்சியை மேற்கொண்டு வருகிறது. வடக்கில் இராணுவ வீரர் ஒருவர் அரச மரத்தடியில் ஒரு புத்தர் சிலையை வைத்து வழிபட முயற்சித்தால் சிங்கள ஆக்கிரமிப்பு நடக்கிறது என கோஷமிடுகிறார்கள்.
இந்நாடு வெளிநாட்டிலிருந்து கடனாகப் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு 100 ரூபாயிலும் ரூபா 77. 88 இந்நாட்டு சிங்களவர்களாலேயே திருப்பிச் செலுத்தப்படுகிறது என்பதை பிரிவினை வாத தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டும். வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் கடன் மூலமே வடக்கு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை புரிந்து கொள்ளாத வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் இனவாதியாக செயற்படுகிறார் என்றார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உரையாற்றுகையில்; முஸ்லிம்களால் சிங்கள இனத்துக்கு நாள்தோறும் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. குருநாகல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் சிங்களப் பெண் மீது புரிந்த பலாத்காரம், அளுத்கம வர்த்தக நிலை ஊழியரின் செயல்கள் என்பனவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இந்த சம்பவங்களில் பொலிஸ் தரப்பிலிருந்து எமக்கு நியாயம் கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்தும் பொறுமையாக இருக்க முடியாது. பொலிஸ்மா அதிபருடன் இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பமொன்றினைக் கேட்டுள்ளோம் என்றார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment