திட்டத்தில் கசினோ உள்வாங்கவில்லை: ஈமானின்படியே நடந்தேன் - அஸ்வர் எம்.பி.
Thursday, May 1, 20140 comments
செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்ட கட்டளைகளில் கசினோ உள்வாங்கப்படவில்லை. இதனாலேயே அதற்கு ஆதரவாக வாக்களித்தேன். ஈமானைப் பாதுகாப்பதே எனது கடமை. இதிலிருந்து இம்மியும் அசையமாட்டேன். மனச்சாட்சிக்கும் குர் ஆனுக்கும் விரோதமாக செயற்படுபவன் நானல்ல என ஊடக கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு ஆதரித்து வாக்களித்தமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளைகளில் கசினோவோ வேறெந்த சூதாட்டங்களோ உள்வாங்கப்படவில்லை. இதனை ஜனாதிபதி ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊடக ஆசிரியர்கள் மத்தியில் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்.
பாராளுமன்றத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ இச்சட்டத்தின் மூலம் நடைமுறைக்கு வரவுள்ள திட்டங்களில் கசினோவுக்கோ சூதாட்டங்களுக்கோ இடமில்லை. இடம் வழங்கப்படவும் மாட்டாது என பாராளுமன்றத்தில் அடித்துக் கூறியுள்ளார். இந்த விளங்கங்களைக் கேட்டறிந்த பின்பே நான் இந்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து வாக்களித்தேன்.
இது விடயத்தில் நடுநிலைமை வகிப்பதில் அர்த்தமில்லை. ஆதரிக்க வேண்டும் இல்லையேல் எதிர்க்க வேண்டும். மதில் மேல் பூனையாக இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் ஏனையவர்களின் மத்தியில் ஏளனத்துக்கு உள்ளாவோம்.
இலங்கைக்கும் முஸ்லிம் நாடுகளுக்குமிடையில் நிலவி வரும் நல்லுறவினைச் சீர்குலைக்க வேண்டும் அரசாங்கத்தின் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்பேற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களே கசினோ சட்ட ரீதியாக அமுலுக்கு வரப்போகிறது என உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்கள்.
பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கியுள்ளார். நாட்டில் சுதந்திரமாக நடமாடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த நடவடிக்கையையும் ஜனாதிபதி அனுமதிக்கப் போவதில்லை.
ஆங்கிலேயர், போர்த்துக்கேயர் காலத்திலிருந்து முஸ்லிம்கள் நாட்டைப் பாதுகாத்தவர்கள். இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களுக்கு விசுவாசமாக நடந்து கொண்டவர்கள். மன்னர்களும் முஸ்லிம்களுக்கு பிரதியுபகாரமாக பல உதவிகளைச் செய்துள்ளார்கள். சிங்கள பகுதிகளில் கூட அரபு பாடசாலைகள் அன்று நிறுவப்பட்டன.
நான் மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளவில்லை. தூற்றுவோர் தூற்றட்டும். ஆனால் நான் போகும் வழி சரியானதே. என்னுடைய ஈமானின்படியே நான் நடந்து கொண்டேன் என்றார்.
Post a Comment