தம்புள்ளை பள்ளியை இலக்காக கொண்டு இனாமலுவ தேரர் அடாவடி
Thursday, May 8, 20140 comments
பள்ளிவாசலை இலக்காகக் கொண்டு இனாமலுவே தேரரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாதை விஸ்தரிப்பு பணிகளின் காணொளிகள் தற்போது பொட்ஸ்வானாவில் இருக்கும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் ஹக்கீம் பொட்ஸ்வானாவில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் நீதியமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது லண்டனிலிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசன் அலி பள்ளிவாசல் நிர்வாகத்துடன் உடனடியாக தொடர்புகொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை பள்ளிவாசலின் இடது புறத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதை அபிவிருத்தி பணியினால் பள்ளிவாசலின் கழிவறையும் பெறுமதி வாய்ந்த மரங்களும் பெகோ இயந்திரத்தினால் அகற்றப்பட்டன.
தற்போது வெளிநாட்டிலிருக்கும் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் அவரது தந்தை சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நிலைமையினை விளக்கப்படுத்தியதை அடுத்து அவரும் ஜனாதிபதியை தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முத்தலிப்பாவா பாரூக் எம்.பி. தான் ஸ்தலத்துக்கு நேரடி விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் வெளிநாட்டிலிருக்கும் அமைச்சர் ஹக்கீம் நிலைமையை நேரடியாக அறிவிக்கும்படி தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, பள்ளிவாசல் நிர்வாகம் கொழும்பு புத்தசாசன அமைச்சால் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இனாமலுவே தேரரின் நடவடிக்கையினால் பள்ளிவாசலின் கட்டிடங்களுக்கு சேதம் எற்பட்டுள்ளதாகவும் ஒரு சில தினங்களில் தேரரினால் பள்ளிவாசல் உடைக்கப்படும் என்ற பீதியில் பிரதேச முஸ்லிம்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி நீதி பெற்றுத் தருமாறு கோருகிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்புள்ளை, கண்டலம பக்கமுனை பிரதான பாதையிலிருந்து பள்ளிவாசலை நோக்கி 20 மீற்றர் அகலத்திலான பாதையும் இதேபோன்று தம்புள்ளை விடுதியிலிருந்து பாதையொன்றும் வெட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியல்ல எவர் கூறினாலும் நான் இதனை நிறுத்தப் போவதில்லை என இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள இனாமலுவே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment