குவைத் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஜாஸிம் கராபியின் தந்தை மர்ஹூம் முஹம்மத் அப்துல் முஹ்ஸின் கராபியின் 17 ஆவது வருட அல் குர்ஆன் மனனப் போட்டியின் பரிசளிப்பு விழா கடந்த திங்கட் கிழமை (ஏப்ரல் - 28) அவரது குவைத், ஷாமியா திவானியாவில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்தப் போட்டி நிகழ்ச்சி பல பிரிவுகளைக் கொண்டிருந்தது . குவைத்திகளுக்கு தனியாகவும் ஏனைய அரபி, அரபி அல்லாதவர்களுக்கு ஒன்றாகவும் போட்டிகள் நடாத்தப்பட்டன . அதில் ஒரு ஜுஸ்ஊ பிரிவில் அரபிகளுடன் போட்டியிட்டு மாத்தறை, மீயல்லையைச் சேர்ந்த மாணவன் அப்துல்லாஹ் ஹரீஸ் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டு தாய் நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார். ஒரு இலங்கையர் இந்த போட்டியின் முதன் முறையாக முதலிடம் பெற்றது இதுவேயாகும் .
கடந்த வருடம் இப்போட்டியின் அரை ஜுஸ்ஊ பிரிவில் இவரது தம்பி அப்துல் அஸீஸ் ஹரீஸ் முதலாம் இடத்தை பெற்ற முதல் இலங்கையராக திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த குர்ஆன் மனனப் போட்டியில் இதுவரை 45 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கு பற்றி யுள்ளனர்.
மாணவன் அப்துல்லாஹ் ஹரீஸ் 2008 ஆம் ஆண்டு குவைத் இஸ்லாமிய அழைப்பு மையம் (IPC ) நடாத்திய தேசிய மட்டப் போட்டியிலும் , பாடசாலை மட்ட போட்டிகளிலும் , குவைத் பெரிய பள்ளி வாசலினால் நடாத்தப்பட்ட போட்டிகளிலும் பல தடவைகள் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார் . அதே போல் குவைத்தில் இயங்கும் சமூக சேவை அமைப்புகளான IIC ,IGC ,IMWA ,K -tic , Al- Falah போன்றவற்றால் வருடாந்தம் நடாத்தப்படும் அல் குர்ஆன் மனன, ஓதல் போட்டிகளிலும் பல பரிசில்களை தட்டிக் கொண்டுள்ளார்.
அப்துல்லாஹ் ஹரீஸ், அப்துல் அஸீஸ் ஹரீஸ் ஆகியோரின் பெற்றோர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன் .இவர்களின் வெற்றிக்கு காரணமாயிருந்த அவர்களது ஆசான்கள் உட்பட அனைவருக்கும் தமது ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்கள். அதேபோல் புனித அல் குர்ஆனை ஓதவும் , மனனம் செய்யவும் ஆர்வமூட்டி இவ்வாறான பல போட்டிகளை ஏற்பாடு செய்யும் கராபி குடும்பத்தாருக்கும், குவைத் அரசாங்கத்துக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
Post a Comment