நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலே முஸ்லிம் சிங்கள மோதல் - விமல் வீரவன்ச
Monday, May 5, 20140 comments
நாட்டுக்குள் சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையே மோதல்களை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரல் முன் நகர்த்தப்பட்டு வருகின்றது. ஆனால், இந்த பயங்கரமான சூழ்நிலை தொடர்பாக அரசாங்கம் எவ்விதமான விவாதத்தன்மையையும் ஏற்படுத்தாது கண்களை மூடிக்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டும் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று நாட்டுக்கு புதியதொரு அரசியல் பலம் தேவை. அதற்கான வரிசைப்படுத்தலை மேற்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்திருப்பதாவது
எமது நாட்டுக்கு எதிராக சர்வதேச ரீதியான அழுத்தங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது ஆனால், அரசாங்கம் அதனை கண்டுகொள்வதில்லை.
இவ்வாறானதோர் நிலையில் சிங்கள, முஸ்லிம் மக்களிடையே மோதல்களை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலொன்று முன்நகர்த்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக கவனம் செலுத்தி அது தொடர்பில் விவாதமொன்றுக்கும் அரசாங்கம் தயாரில்லை.
மாறாக நாட்டுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தேவையான விதத்தில் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தந்த நேரத்தில் வீசப்படும் பந்துகளை கிரிக்கட் போட்டியில் சந்திப்பது போன்ற செயற்பாடே அரசிடம் உள்ளது.
நிலையான கொள்கை இல்லை.
2005ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டுமென்ற தீர்மானத்தோடு ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர்த்தினோம். அது நிறைவேறியது.
ஆனால், இன்று நிலைமை மாறியுள்ளது. சமூக, பொருளாதார, அபிவிருத்தி கொள்கைகளில் மாற்றமே இன்று தேவைப்படுகின்றது. ஒற்றுமையை ஏற்படுத்தும் பயணத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளது.
இந்த அரசாங்கத்தால் மேற்கண்டவை எதுவும் நிறைவேறவில்லையென்றே கூற வேண்டும்.
மேற்கண்ட இலக்கை அடைவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் எவர் எவர் இருக்கின்றார்கள் என்பது தெரியாது.
ஆனால், அவ்வாறானவர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு புதியதொரு அரசியல் பயணத்தை தொடர்வதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.
சமூக, பொருளாதார புரட்சியை ஏற்படுத்துவதற்காக அரசுக்குள் உள்ள சக்தியாகட்டும் வெளியிலுள்ள சக்தியாகட்டும் எவரோடு இணைந்தும் பயணத்தை தொடர்ந்து புதிய அரசியல் பலத்தை கட்டியெழுப்ப தயார் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
Post a Comment