பதகஷான் மாகாணத்திலுள்ள அப்பற்றிக் கிராமம் மண்சரிவில் தமது வீடுகளுடன் புதையுண்டதில் சுமார் 2500 பேருக்கும் அதிகமானோர் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்றே கருதுவதாக மாகாண ஆளுநரான ஷாஹ் வலியுல்லாஹ் அடிப் தெரிவித்தார்.
அந்த மண்சரிவில் உயிருடன் சிக்கியுள்ளவர்களை தேடும் நடவடிக்கை சனிக்கிழமையுடன் உத்தியோக பூர்வமான நிறைவடைந்திருந்தது.
பாரிய மண்சரிவு காரணமாக 300 க்கு மேற்பட்ட வீடுகள் அடையாளம் தெரியாமல் சேதமடைந்துள்ளன.
அத்துடன் 700 குடும்பங்கள் தமது வீடுவாசல்களை இழந்துள்ளன.
இதுவரை சுமார் 300 பேரது சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி பிராந்தியத்தில் இடம்பெற்ற முதலாவது மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற சுமார் 600 பேர் அங்கு இடம்பெற்ற இரண்டாவது பாரிய மண்சரிவில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மண் சரிவில் உயிர் தப்பியவர் சனிக்கிழமை இரவு தொடர்ந்து இரண்டாவது நாளாக திறந்த வெளிகளில் பொழுதைக் கழித்துள்ளனர்.
வீடுகளை பல மீற்றர் உயரத்துக்கு மண் மூடியுள்ள நிலையில் தேடுதல் நடவடிக்கையை தொடர்வது சாத்தியமானதாக இல்லை என பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மண்சரிவில் உயிர் தப்பிய ஸியா உல் ஹக் விபரிக்கையில் எனது குழந்தை உட்பட முழு குடும்பமும் எனது உடைமைகளும் இங்கு புதையுண்டுள்ளன என்று கூறினார்.
தஜிஹிஸ்தான், சீனா, பாகிஸ்தான் எல்லைகளுக்கு அண்மையிலுள்ள மலைப் பிராந்தியமான பதகஷான் ஆப்கானிஸ்தானின் மிகவும் வறுமையான பிரதேசங்களிலொன்றாக விளங்குகிறது.
Post a Comment