மத விவகாரங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவு எதிர்வரும் வெசாக் தினத்திற்கு முன் கலைக்கப்பட வேண்டும் என ராவணா பலய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அப்படி செய்யாவிட்டால் வெசாக் தினத்திற்கு பின் பௌத்தசாசன அமைச்சுக்குள் சென்று 7வது மாடியில் குடிகொள்ளவுள்ளதாக ராவணா பலய அமைப்பின் பொது செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று பௌத்தசாசன அமைச்சுக்கு சென்று தமது கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் அதற்கு உரிய தீர்வு எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கையில் மத பிரச்சினை இல்லை எனவும் விசேட பொலிஸ் பிரிவு அமைத்ததன் மூலம் இலங்கையில் மத சுதந்திரம் இல்லை என ஐநாவிற்கு முறைப்பாடு செய்ய வழிசமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டார்.
குறித்த பொலிஸ் பிரிவிற்கு முஸ்லிம்கள் தற்போது பல முறைப்பாடுகளை செய்துள்ளதாக தமக்கு அறியக்கிடைத்துள்ளதாகவும் முறைப்பாடுகள் அடங்கிய கோவைகளை ஜெனீவாவிற்கு எடுத்துச் செல்வதே அவர்களின் அடுத்து திட்டம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத விவகாரங்களை ஆராய விசேட பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டமை அடிப்படைவாதிகள் மற்றும் ஏகாதிபத்தியவாதிகளின் சதியாக இருக்கலாம் எனவும் தவாறன தகவல்களை வழங்கி ஜனாதிபதியை சிலர் திசை திருப்பியுள்ளதாகவும் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
எனினும் விசேட பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டமை தங்களது அழுத்தத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதன்மூலம் குறித்த பொலிஸ் பிரிவிற்கு அவர் ஆதரவு அளித்துள்ளார்.
Post a Comment