யுத்தத்திற்கு பின்னரான கால கட்டத்தில் பொது பலசேனா போன்ற தீவிர இனவாத அமைப்புகளின் செயற்பாடுகளினால் மீண்டும் இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் அச்ச நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்த பொதுபலசேனாவின் செயற்பாடு குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
அமைச்சொன்றுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து அட்டகாசம் புரிந்து வீரம் பேசி சட்டத்தை கையில் எடுத்து வரும் கடும் போக்காளர்களின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதோடு இவ்வாறான செயற்பாட்டினை சுதந்திர தேசத்தில் ஜனநாயகத்தை விரும்பும் நாகரிகமுள்ள எந்தவொரு சமூகமும் ஏற்றுக் கொள்ளாது.
மேலும், வடக்கில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் 20 வருடங்களாக இருப்பதற்கு இடமின்றி ஏதோ கிடைத்த ஓரிடத்தில் சிறுகுழந்தைகளுடன் குடிசைகளில் நிம்மதியாக வாழ்வதைக்கூட விரும்பாத பொதுபல சேனாவால் எப்படி பௌத்த மதம் கூறும் அகிம்சை பற்றியும் நற்சிந்தனைகள் பற்றியும் போதிக்க முடியுமென கேட்க விரும்புகின்றேன்.
மக்களின் பிரச்சினைகள், பாதுகாப்பு, அபிவிருத்தி, உரிமைகள் தொடர்பாக பேசுவதற்கும் அவற்றினை பெற்றுக் கொடுப்பதற்குமாகவே மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கும் மற்றும் அரசியல் அதிகாரமுள்ள இடங்களுக்கும் மக்கள் அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கே அச்சுறுத்தலும் தடைகளும் ஏற்படும் சந்தர்ப்பத்தில் மக்கள் தங்களின் இருப்பு பாதுகாப்புப் பற்றி சிந்திக்க தொடங்கியுள்ளனர்.
எனவே, பொதுபலசேனா போன்ற தீவிர மதவாதக்குழுக்களின் செயற்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்தாமல் விடுமேயானால் அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
தற்போது ஜனாதிபதியினால் உடன் கொண்டு வரப்பட்டுள்ள மத விவகாரங்களுக்கான தனியான பொலிஸ் பிரிவு வரவேற்கத்தக்க விடயமாகும். இதன் எதிர்கால செயற்பாடு நம்பிக்கைத்தன்மை என்பனவற்றைப் பொறுத்தே மக்கள் மனங்களில் மாற்றத்தினை பெற முடியும். மாறாக அவை பெயரளவில் மட்டுமே இருக்குமானால் இவ்வாறான இனவாதத்தையும் குரோதத்தையும் தோற்றுவிக்கும் அமைப்புகளை கட்டுப்படுத்தப்படாமல் போய்விடும். அது எதிர்காலத்தில் எதிர்பாராத விளைவுகளையும் பாதிப்புகளையும் தோற்றுவிக்கும்.
பொதுபலசேனா போன்ற கடும்போக்கான சில சிங்கள அமைப்புகளின் செயற்பாடுகளினால் முஸ்லிம் சமூகம் புண்படுத்தப்பட்டு வருவது நிறுத்தப்பட வேண்டும். இவ்வமைப்புகள் ஏதோ ஒரு நாசகார சக்தியின் பின்னணியில் செயற்பட்டு வருவதனை அறிய முடிகின்றது. உண்மையில் அவர்களுக்கு இந்த நாட்டில் பிரச்சினைகள் தேவையாக உள்ளன. அதனாலேதான் காலத்திற்குக் காலம் வெவ்வேறான பிரச்சினைகளையும் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதனை நன்கு உணர்ந்து முஸ்லிம் சமூகம் மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் செயற்பட்டு வருவதனையிட்டு பாராட்டுத் தெரிவிக்கின்றேன்.
இன்று முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள இவ்வாறான பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் முகம் கொடுக்கும் வகையில் ஒரு பொதுவான உடன்படிக்கையின் கீழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றுபட வேண்டியது காலத்தின் தேவையாகும். அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கும் பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதய சுத்தியுடன் முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஒற்றுமைப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் இறங்குவாராயின் அதற்கான பூரண ஆதரவையும் ஒத்தாசையையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளேன் என்றார்.
Post a Comment