ராஜபக்ஷக்களுக்கு எதிராக யுத்தம் செய்யும் காலம் வந்துவிட்டது: ஜே.வி.பி. எச்சரிக்கை

Friday, May 2, 20140 comments


மக்களின்  எதிர்ப்புகள்  வரும்போது  அதனைத் தடுத்து  தொடர்ந்து  ஆட்சியை  தக்கவைத்துக்கொள்ளும் ஆயுதமாக  இனவாதத்தை  பயன்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகத்  தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர்  அனுரகுமார திஸாநாயக்க,   தமது கட்சி  அரசியலில் இருக்கும் வரைக்கும் நாட்டில்  இனவாத  மோதல் ஏற்படுவதற்கு  இடமளிக்கப்போவதில்லையெனவும் தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டியிலுள்ள  பீ.ஆர்.சி. மைதானத்தில்  நேற்று  வியாழக்கிழமை  நடைபெற்ற  ஜே.வி.பி.யின் செம்மேதினக்  கூட்டத்தில்  உரையாற்றும்போதே அனுரகுமார திஸாநாயக்க  இவ்வாறு தெரிவித்தார்.

ஜே.வி.பி.யின்  அரசியல் குழு உறுப்பினரும் தொழிற்சங்கங்களின்  மத்திய நிலையத்தின்  தலைவருமான  லால்காந்த  தலைமையில்  நடைபெற்ற இந்த செம்மேதினக்  கூட்டத்தில் கட்சித்தலைவர்  அனுரகுமார  திஸாநாயக்கவுடன்  முன்னாள்  கட்சித் தலைவர்  சோமவன்ச  அமரசிங்க,   பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் கட்சியின்  எம்.பிக்கள்  உட்பட பல  பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன்,   பல்லாயிரக்கணக்கான  மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

அங்கு உரையாற்றிய  அனுரகுமார திஸாநாயக்க  தொடர்ந்து  கூறுகையில்;

மக்களின்  பிரச்சினைகளுக்குத்  தீர்வு காண்பதற்கு  ஐக்கிய தேசியக் கட்சியாலோ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியாலோ  முடியாது. இந்நிலையில்  தற்போதைய  அரசாங்கத்தின்  செயற்பாடுகளுக்கு  எதிராக மக்கள்  பொங்கியெழும்போது,  அதனைத் தடுக்க  ஒவ்வொரு கதைகளை தயாரிக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இதன்படி  சிங்களவர்களிடம்  முஸ்லிம்கள்  தொடர்பாகக்  கூறியும் முஸ்லிம்களிடம்  சிங்களவர்களே  உங்களின்  எதிரியெனக்  கூறியும் முரண்பாடுகளைத்  தோற்றுவிக்கும் முயற்சிகள்   இடம்பெறுகின்றன.  அதேபோல் வடக்கு மக்களிடம் சென்று  உங்களின் எதிரி  சிங்களவர்கள்  எனக் கூறி  சகல  இனத்தவர்களையும் பிரித்து வைக்கும் செயற்பாடுகள்  நடக்கின்றன.

ஜே.ஆர். ஜெயவர்தன  காலத்திலும் இவ்வாறு  நடைபெற்றது. இதன்படி  83 கறுப்பு  ஜூலை சம்பவம்  இடம்பெற்றது. இதனால் வெளிநாடுகளுக்குச்  சென்ற தமிழர்களே இன்று புலம்பெயர்  தமிழர்களாக செயற்படுகின்றனர்.

இந்நிலையில்  இந்த நாட்டில்  ஜே.வி.பி.  அரசியலில்  இருக்கும் வரை  இனவாத  மோதல்கள் இடம்பெறுவதற்கு  இடமளிக்கப்போவதில்லையென  உறுதியாகக் கூறுகின்றோம்.

நாட்டில்  இனவாதம்  தூண்டப்படும் இவ்வேளையில் அமைச்சரவையில்  ஜனாதிபதியுடன்  டக்ளஸ்  தேவானந்தா,  ரவூப் ஹக்கீம், சம்பிக்க ரணவக்க,  வீரவன்ச , தொண்டமான்  என சகலரும் இருக்கின்றனர். இவர்கள்  ஒவ்வொரு  தீர்மானத்தின்  போதும் கைதூக்கி  ஒற்றுமையாக  இருந்துகொண்டு  மக்களை சண்டையிட்டுக் கொள்ளுமாறு கூறுகின்றனர்.

இதேவேளை,  நாட்டில்  இனவாதத்தைத்  தடுத்து இன ஐக்கியத்தை  ஏற்படுத்த வேண்டும்.  அதற்கு  ஒரு மொழி, ஒரு மதம் மற்றும் கலாசாரத்தை  மாத்திரம் உயர்வாகப்  பார்ப்பதனை நிறுத்தி சகல  மொழி, சகல மதம் மற்றும் கலாசாரங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும்.

இதனைச் செய்யாது ராஜபக்ஷக்கள் தொடர்ந்தும்  இவ்வாறு செயற்பட்டால்  நாமும்  எமது பிள்ளைகளும் யுத்தம்  செய்வதைத்  தடுக்கமுடியாது.  இந்த நாட்டில்  இன ஐக்கியம் வேண்டும். அதனை எம்மால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்றார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham