நான் ஒரு முஸ்லிம் என்ற வகையில் கசினோவை ஒரு போதும் ஆதரிக்கமாட்டேன். இருப்பினும் அண்மையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட செயல் நுணுக்க கட்டளை சட்ட மூலத்தில் கசினோ உட்பட எந்தவொரு சூதாட்டத்திற்கும் இடமில்லையென முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இதேவேளை இத்திட்டத்தினூடாக நவீன நட்சத்திர ஹோட்டல்களே நிர்மாணிக்கப்படவுள்ளது. இதனூடாக முதலீடு அதிகரிக்கும். இதுவரையில் 258 முதலீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் இவ்வருடத்தில் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலாபமீட்டுவதே எமது இலக்காகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக கொழும்பிலுள்ள உலக வர்த்தக வலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் செயல் நுணுக்க கட்டளை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த சட்டமூலத்தில் கசினோவிற்கோ அல்லது எவ்வித சூதாட்டங்களுக்கோ இடம் வழங்கப்படவில்லை. இச்சட்ட மூலத்தினுடாக நாட்டில் நவீன நட்சத்திர ஹோட்டல்களை நிர்மாணிப்பதே நோக்கமாக உள்ளது.
இந்நிலையில் இந்நாட்டிற்கு முதலாவது கசினோ உள்ளிட்ட சூதாட்ட சட்ட மூலத்தினை ஐக்கிய தேசிய கட்சியே 1988 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இன்று வரை நாட்டில் கசினோ விபசாரம் சூதாட்டங்கள் காணப்பட்டு வருகிறது. இதற்கு வழி சமைத்தது ஐ.தே. கட்சியாகும்.
நான் ஒரு முஸ்லிம் என்ற வகையில் கசினோவை ஒரு போதும் ஆதரிக்கமாட்டேன். கசினோ தொடர்பில் எனக்கு ஒன்றும் தெரியாது. நான் அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டதும் கிடையாது. அதே வேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் கசினோவிற்கு இடமளிக்கமாட்டார். எதிர்க்கட்சிகளே அரசிற்கு அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
அதேவேளை, குறித்த சட்ட மூலத்தினால் நாட்டிற்கு இதுவரையில் 258 முதலீடுகள் கிடைக்க பெற்றுள்ளது. அவற்றில் 79 முதலீடு ஹோட்டல் துறை சார்ந்தது. இதற்கு அப்பால் உட்கட்டமைப்பு துறைக்கு 67 முதலீடுகளும் விவசாயத்திற்கு 18 முதலீடுகளும் மற்றும் 72 முதலீடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதேவேளை, இத்திட்டத்தினூடாக இவ்வருடத்தில் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டுவதனை அரசு இலக்காக கொண்டு செயற்படுகின்றது. அத்தோடு ஹோட்டல் நிர்மாணிப்பின் ஊடாக கிடைக்க பெறுகின்ற இலாபங்களில் 30 சதவீதம் அரசுக்கு கிடைக்கவுள்ளது. மேலும் இலங்கை வருகின்ற முதலீட்டாளர்கள் குறித்த ஒப்பந்தத்திற்கும் அரச சட்ட விதிமுறைகளுக்கும் எதிராக செயற்பட முடியாது.
அரசின் பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பு
இந்நிலையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட செயல்நுணுக்க சட்டமூலத்திற்கு ஜாதிக ஹெல உறுமய எதிராக வாக்களித்தது. இதனூடாக அரசில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளமையே எடுத்து காட்டுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கூட அடிக்கடி எமது அரசிலும் எதிர்க்கட்சி காணப்படுகின்றதாக கூறுவார்.
எனவே, இதுவே சிறந்த முறையில் ஜனநாயகம் நிலை நாட்டப்படுவதற்கான முன்னுதாரணமாகும்.
ஆகவே, இச்சட்ட மூலத்தில் தமிழ் முஸ்லிம் சிங்களவர்களில் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் எவ்வித சூதாட்டமும் உள்ளக்கப்படவில்லை என்றார்.
Post a Comment