பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இலங்கை முஸ்லிம் அமைப்புகள் தொடர்புகளை வைத்துள்ளமை உறுதியாகி விட்டது என தெரிவித்த பொதுபலசேனா பௌத்த அமைப்பு யுத்த கால கட்டத்தை விடவும் தற்போது வடக்கு கிழக்கில் பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டது.
எம்மை பகைத்துக் கொள்வது கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவதைப் போன்றது. அதே போல் நாட்டில் மதரசாக்களிலே முஸ்லிம் தீவிரவாதம் பரப்பப்படுகின்றது எனவும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
பொது பலசேனா பௌத்த அமைப்பினால் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே இக்கருத்து முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் பரவியுள்ளதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் குறிப்பிட்டே வந்தோம். ஆனால் அரசாங்கம் எமது கருத்தினை கவனத்திற் கொள்ளவில்லை. ஆனால் நாம் சொன்ன காரணம் இன்று உண்மையாகி விட்டது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் ஒன்றிணைந்து இந்தியாவை தாக்க இலங்கை முஸ்லிம் தீவிரவாதிகள் செயற்படுகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. அத்தோடு கண்டி நகரைச் சேர்ந்த சாகீர் ஹுசைன் என்பவரையும் கைது செய்துள்ளனர்.
இலங்கையிலும் இந்தியாவின் தமிழ் நாட்டிலும் உள்ள தௌஹீத் ஜம்-ஆத் அமைப்புகளே இவ்வாறான குற்றச் செயல்களை செய்கின்றன. ஆயுதக் கடத்தல் போதைப்பொருள் விற்பனைகள் என்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் இவ் அமைப்புகள் தற்போது இலங்கைக்கு அவப் பெயரினையும் இலங்கைக்குள் குழப்பங்களையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அது மாத்திரமின்றி நீர்கொழும்பு பகுதியிலும் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய முஸ்லிம் இன மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித கவனம் செலுத்தாது உள்ளது. நாங்கள் பேசினால் இனவாதம் பரப்புவதாக குற்றம் சுமத்துகின்றனர்.
வடக்கு கிழக்கு கடற்கரை பகுதியினால் அத்துமீறிய வருகைகளும் தீவிரவாதச் செயற்பாடுகளும் இடம் பெறுகின்றது. எனவே அரசாங்கம் வடக்கு கிழக்கு பகுதியில் யுத்த காலத்தில் இருந்த இராணுவத்தை விடவும் தற்போது அதிகளவில் பலப்படுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் அரசு மிகவும் கவனமாகக் செயற்பட வேண்டும்.
மேலும் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் 90 சதவீதமான தீவிரவாதக் கொள்கைகள் மதரசாக்களில் தான் ஊக்குவிக்கப்படுகின்றது. சர்வதேச அறிக்கைகள் மட்டுமன்றி சில முஸ்லிம் நாடுகளும் இவற்றினை ஏற்றுக்கொண்டுள்ளது. இதே நிலைமை இன்று இலங்கையிலும் உள்ளது. கிழக்கில் முஸ்லிம் மதவாதத் தீவிரவாத அமைப்புக்கள் முஸ்லிம் சமூகத்தினரிடம் மத போதனைகளைப் போல் தீவிரவாத கொள்கைகளையும் பரப்புகின்றனர். அதன் விளைவே இன்று இந்தியாவின் பல முக்கிய நகரங்கள் மற்றும் அமெரிக்காவிலும் தாக்குதல் நடத்துமளவிற்கு கொண்டு சென்றுள்ளது.
இதனை நாம் குறிப்பிட்டால் தௌஹீத் ஜம்-ஆத் மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஆகியவை எம்மை தடை செய்யக் கோருகின்றனர். நாட்டை பாதுகாக்கும் எம்மை தடை செய்தால் அவர்களின் கொள்கையினை இலகுவாக கொண்டு செல்ல முடியும் என்பதே அவர்களின் எண்ணம்.
எம்மை தடை செய்யக் கூறும் அதிகாரம் முஸ்லிம் அமைப்புகளுக்கோ தௌஹித் ஜம்-ஆத் அமைப்பிற்கோ இல்லை. எம்மை பகைத்துக் கொள்வது கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிவதனைப் போன்றது என்பதை அனைவருக்கும் எச்சரிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment