வெசக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனபோதிலும் இன்னும் வசந்த கால கொண்டாட்டங்கள் ஓயவில்லை. வசந்த காலம் என்றாலே எல்லோருக்கும் நுவரெலியா தான் முதலில் நினைவிற்கு வரும். அங்கு நடத்தப்படும் குதிரை ஓட்டப்பந்தயம் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயம் என்பன பிரபலமானவையே. சகோதர இன இளைஞர்களே அதிக ஆர்வம் காட்டும் “மோட்டார் சைக்கிள் றோட் றேஸ்” இல் முஸ்லிம் இளைஞர் ஒருவர் அதிக ஆர்வத்துடன் தேசியத்தில் பேசுமளவு முன்னேற்றம் கண்டு வருகிறார்.
களுத்துறை மாவட்டம், தர்ஹா நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட 19 வயதான பாக்கீர் முஹம்மட் பாஸித் நுவரெலியாவில் வசந்த காலத்தை முன்னிட்டு நடத்தப்படும் வருடாந்த மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடத்தை (Runner up) பெற்று தர்ஹா நகருக்கு மட்டுமல்லாது முழு இலங்கை முஸ்லிம்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இலங்கையின் பிரபல மோட்டார் சைக்கிள் ஒட்ட வீரர்களான சிராஸ் சாமு வேல், உதேஸ் வெடிசிங்க, ஜடேன் குணவர்தன, மதுரங்ககல்தேரா, கணேச ன்விஜயகுமார், ஆனந்த சம்பத், பிரபாத் பீரிஸ், சேன் மாக் எனப் பல வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்ட நிலையிலேயே பாஸித் இரண்டாம் இடத்தை பெற்றார்.
துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டியில் திறமையை காட்டிவந்த இவர் மக்களின் விமர்சனங்களையும், குடும்பத்தினரின் எதிர்ப்பையும் சம்பாதித்தார். எனினும் சளைத்துவிடாத பாஸித் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டிகளில் ஆர்வம் காட்டி வந்தார். தற்போது தேசிய மட்டபோட்டிகளிலும் பங்குபற்றிவருகின்றார்.
தர்ஹா நகர் தொழிலதிபர் ஏ.டப்ளியூ.எம். பாக்கீர், பாத்திமா சில்மியா தம்பதிகளின் புதல்வரான பாஸித் தன்னுடைய பாடசாலைக் கல்வியை அளுத்கம சிங்கள மகா வித்தியாலயம், பாணந்துறை லைசியம் சர்வதேச பாடசாலை ஆகியவற்றில் பயின்றார். கல்வியில் அதிக ஆர்வம் கொண்ட இவருக்கு பாடசாலைப் பருவம் முதலே சைக்கிள் ஓட்டப்பந்தயத்தில் அதிக ஆர்வம் இருந்ததாகவும், ஆரம்பத்தில் பெரும் அச்சத்துடன் மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய பற்றியதாகவும் பாஸித் கூறுகின்றார்.
'' ஆரம்ப முயற்சியில் துவிச்சக்கர வண்டியை ஊரின் வீதிகளில் அதிகமாக ஓடியபோது விபத்துக்களில் சிக்கி கால் கைகளில் காயங்களும் ஏற்பட்டன. இதனால் தாய் தந்தை குடும்பத்தினரும், ஊர் மக்களும் றேஸ் பயிற்சிக்கு அப்போது ஆதரவளிக்கவில்லை. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் எனது றேஸ் சம்பியன் இலட்சியத்தை அடைய முடியாமல் இருந்தபோது பெந்தோட்டையைச் சேர்ந்த சிங்கள நண்பர் யோகான் வடுகே எனக்கு உதவினார்.அவரின் உதவியோடு பயிற்சியில் ஈடுபட்டு முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு “யமஹா மோட்டார் சோ” போட்டியில் பங்குபற்றி 3 ஆம் இடத்தை பெற்றேன்'' என்கிறார்.
இதனுாடகவே இவரது சாதனைப்பயணம் நம்பிக்கையுடன் ஆரம்பமானது. பின்னர் மீரிகம றோட் றேஸ்- 5 ஆம் இடம், 2013 செப்ெடம்பர் மாதம் கட்டுக் குருந்த றோட் றேஸ் 7- வது இடம், 2013 ஒக்டோபர் மாதம் குருநாகல் றேஸ் 6- வது இடம் என வெற்றிகளைப் பெற்றார். அதன் பிறகு 2013 டிசெம்பர் வார இறுதி கொழும்பு நைட் றேஸ் போட்டியில் பங்குபற்றியிருந்தார். இப்போட்டியில் வெளிநாட்டு வீரர்களும் பங்குகொண்டிருந்தனர். 18 வீரர்கள் பங்குகொண்ட இப்போட்டியில் 5 வது இடத்தை இவர் பெற்றார். இதனுாடாக இன்னும் முன்னேறலாம் என்ற தன்னம்பிக்கையுடன் சாதனை பயணத்தை தொடர்கிறார்.
2014 ஆம் ஆண்டு கட்டுக்குருந்த றேஸ் பயிற்சியில் இவரது மோட்டார் சைக்கிள் பழுதடைந்தது. பின்னர் நண்பர்களின் உதவியால் புதிய மோட்டார் சைக்கிள் பெற்றுக் கொடுக்கப்பட்டது. அதனுாடாகவே இலங்கை மோட்டார் ஒட்ட சங்கம் நுவரெலியா மோட்டார் ஓட்ட கழகமும் இணைந்து ஏற்பாட்டில் 2014. 04. 20 ஆம் திகதி நடைபெற்ற 600 சீ.சீ. ஓட்டப் போட்டியில் பங்கு பற்றி 2 ஆம் இடம் இவருக்கு கிடைத்தது.
இப்போது இவரது இலட்சியத்தின் உச்சத்தை அடையும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு நாளைக்கு மட்டும் 60 ஆயிரம் ரூபாய்கள் செலுத்தி வெளிநாட்டில் பயிற்சி எடுப்பதற்காக இவரது தந்தை உட்பட குடும்பத்தினரே சிங்கப்பூருக்கு அனுப்பிவைப்பதாக குறிப்பிடுகின்றனர். அதுபோல் வெற்றிபெற்ற பாஸித்திற்கு தர்ஹா நகர் பிரதேச மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வர்த்தகர்களும் பெரும் வரவேற்பளித்திருந்தனர்.
சிங்கள நண்பர் யோகான் உட்பட தனது ஊர் நண்பர்களையும் நன்றி உணர்வோடு பார்க்கின்றார் பாஸித், தேசிய, சர்வதேச மட்டத்தில் தான் ஒரு வீரராக வரவேண்டும் என்ற இவரது இலட்சியத்தை அடைய தொடர்ந்தும் பக்க பலமாக இருக்கப்போவதாக இவரது நண்பர்கள் குறிப்பிடுகின்றனர்.
பெரும்பாலானவர்களுக்கு ஆர்வமில்லாத மோட்டார் சைக்கிள் றேஸ் விளையாட்டில் பல சவால்களுக்கு மத்தியிலும் தனது திறமைகளை வெளிக்காட்டிவரும் முஹம்மட் பாஸித் விடா முயற்சியால் ஒவ்வொருவரும் தனது இலட்சியத்தை அடையலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாவார்.
எஸ். அஷ்ரப்கான்
Post a Comment