சிலர் கசினோவுக்கு ஆதரவளித்தமையால் முஸ்லிம் சமூகம் விமர்சனத்துக்குள்ளாகிறது- முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
Thursday, May 8, 20140 comments
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்ட (கஸினோ மசோதா) சட்ட மூல வாக்கெடுப்பின்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் அதற்கு வாக்களித்ததின் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கும் இஸ்லாத்துக்கும் மாபெரும் துரோகத்தைச் செய்திருக்கிறார்கள் என மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இதனால் பிறமதத்தவர்கள் முஸ்லிம் சமூகத்தை விமர்சித்து வருகின்றனர். இதற்கு காரணமானவர்கள் இவர்களே எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த படுமோசமான செயற்பாட்டின் மூலமாக மாற்று மதத்தினர் மத்தியிலே இஸ்லாத்தைப் பற்றிய தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாம் ஒரு போதுமே அனுமதியளிக்காத குறித்த சமூக விரோத மசோதாவுக்கு எதிராக முஸ்லிம் அல்லாத மாற்று மத பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருக்கின்றனர்.
இந்நிலையிலே தமக்குத்தாமே முஸ்லிம் தலைவர்கள் என்று மகுடம் சூட்டிக் கொண்டுள்ள இவர்கள் தங்களது இந்த கீழ்த்தரமான செயற்பாட்டின் மூலமாக முஸ்லிம் சமுதாயத்தின் துரோகிகள் தாங்களே என்பதை அப்பட்டமாக நிரூபித்திருக்கிறார்கள்.
அதுமாத்திரமின்றி குறிப்பிட்ட மசோதா வாக்கெடுப்பின்போது மனசாட்சியோடு எதிர்த்து வாக்களிக்க தைரியம் இல்லாமல் தலைமறைவாய் இருந்ததன் மூலம் ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் போன்றவர்களும் தமது பச்சோந்தித்தனமான முதுகெலும்பில்லாத தன்மையை வெளிக்காட்டி இருக்கிறார்கள் என்றார்.
Post a Comment