தௌஹீத் ஜமாஅத்தின் செயற்படுகளும் ஏற்படும் எதிர் விளைவுகளும்
Thursday, May 1, 20141comments
மதங்கள், இனங்கள் தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளை விசாரணை செய்யும் புதிய பொலிஸ் பிரிவு அண்மையில் தொற்றுவிக்கப்பட்டது. அந்த பிரிவு அங்குரார்பணம் செய்யப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்துக்குள் சிங்கள ராவய அமைப்பின் அங்கத்தவர்கள் அந்தப்பிரிவுக்கு வந்து தௌஹீத் ஜமாத்துக்கு எதிரான முறைப்பாடு உட்பட எழுமுறைப்பாடுகளை செய்தமை அண்மைய நாட்களில் பலவிதமாக பேசப்பட்டதை யாவரும் அறிவர்.
இஸ்லாமிய இயக்கங்கள் சர்வதேச உலகில் காலத்துக்கு காலம் அந்தந்த சமூகங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளையும் தேவைகளையும் மையப்படுத்தி சீர்திருத்த அமைப்புகளாகவே உருவாக்கப்பட்டன. அந்த இஸ்லாமிய அமைப்புக்களின் செயற்பாடுகள் காலவோட்டத்தில் சர்வதேச மயப்படுத்தப்பட்டு பல நாடுகளையும் நோக்கியும் நகர்ந்தன. இஸ்லாமிய அமைப்புக்களின் செயற்பாடுகள் இலங்கை மண்ணில் ஆரோக்கியமான மாற்றங்கள் பலவற்றையும் தந்துள்ளதை யாராலும் மறுத்து விடவும் முடியாது.
இலங்கை நாட்டைப் பொறுத்தமட்டில் இங்கு முஸ்லிம்கள் சிறுபான்மை சமூகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகள் இவர்களுக்கான செயற்பாடுகள் என்பவற்றுக்கு பொறுத்தமான இஸ்லாமிய சட்டவாக்கத்தை அரபு மூளைகள் யோசித்துக் கொடுத்தால் அது எந்தளவுக்கு வெற்றிபெரும், வெற்றி பெற்றுள்ளது என்பதை வரலாற்று ஆதாரங்களே நமக்கு சான்று பகிரும்.
இலங்கையில் இன்று பல இஸ்லாமிய அமைப்புக்கள் தூய்மையாக செயற்பட்டு வருகின்றன. இலங்கைக்காக இலங்கையை மையப்படுத்தி தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமிய இயக்கங்கள் என அடையாளப்படுத்தக் கூடிய அமைப்புகள் பற்றி எனது அறிவுக்கு உட்பட்ட வகையில் தெரியவில்லை. சர்வதேச உலகில் சில கால சூழல்களையும் பிரச்சினைகளையும் மையப்படுத்தி தோற்றுவிக்கப்பட்ட, கொள்கைவகுக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களே இலங்கைக்கும் இறக்குமதி செய்யப்பட்டு அதன் செயற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தம்மை மையப்படுத்தி இயங்கும் செயற்பாடுகள் தூய்மையானதாகவும் அவற்றைத்தாண்டிய செயற்பாடுகள் தூய்மை என்ற நிலைக்கு புரம்பானவை என பார்க்கும் ஒரு நிலை இஸ்லாமிய அமைப்புக்கள் சார்ந்து ஒரு மனோநிலையாக நாம் காணமுடியும். இந்த மனோநிலை அண்மைய தசாப்தத்துக்குள் பல்வேறு பிரச்சினைகளை சமூகத்தளத்தில் தோற்றுவித்தது. தற்போது அதன் நிலை புதாகரமாக வடிவம் பெற்று இன்று இலங்கை முஸ்லிம்களின் இருப்பின் மீதே கேள்வி எழுப்பியுள்ளதை அவதானின்க்கக் கூடியதாக இருக்கின்றது.
இன்று பெரும்பான்மை சமூகம் சார் சிலரால் தோற்றிவிக்கப்பட்டுள்ள இந்தப்பிரச்சினையின் பின்னனிக்காரணிகள் பல இருந்த போதிலும் அவர்கள் நமக்கு மத்தியில் உள்ள பிரச்சினை சுட்டிக்காட்டும் போது அதுபற்றி நாம் கதைக்காமல் அவர்கள் மீது மாத்திரம் குற்றம் சுமத்து நியாயமல்ல.
இன்று இந்த தௌஹீத் ஜமாஅத்தினர் நாட்டில் பரவலாக தஃவா பணியினை செவ்வனே நிறைவேற்றி வருகின்றனர். இருந்த போதிலும் பிரச்சாரங்களின் போது அவர்கள் விட்ட ஓரிரு தவறை நாம் சிறிதாக பார்த்துவிட முடியாது. ஏனெனில் பௌத்த மதத்தை பற்றியும் புத்த பெருமான் பற்றியும் கூறியிருக்கின்ற சில கருத்துக்களே இன்று பூதாகரமாகியுள்ளது. நாம் நபியையும் குர்ஆனையும் யாராவது கொச்சை படுத்தினால் சும்மா இருப்போமா? அதுபோன்றே அடுத்தவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும். பௌத்தர்கள் பிழையான பாதையில் செல்கின்றனர் இதன்போது சிலர் சொல்லலாம். அவர்கள் பிழையாக சென்றாலும் அதனை சொல்லும் பாணி இதுவல்ல என்பதை புரிந்து நடக்க வேண்டும்.
இஸ்லாமிய அமைப்புக்கள் ஏனைய அமைப்புக்களுடன் முரன்படுவது அந்த முரண்பாடுகள் கொலை கலவரம் வரை இட்டுச் செல்வது என்ற நிலை முஸ்லிம்களுக்குள் ஜாஹிலியத்துக் காபிர்களின் மரபணுக்களின் தாக்கம் இல்லாமல் இல்லை என்னத் தோன்றுகின்றது.
எல்லா இஸ்லாமிய அமைப்புக்களும் தமக்கான சுய அடையாளங்களைப் பேணிக்கொண்டு ஏனைய அமைப்புக்களின் இருப்புக்களையும் ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய மனிதவியல் பண்பைகட்டியெழுப்ப பாடுபட்டிருந்தால் சிறுவயதில் படித்த தமக்குள் சண்டையிட்டுக் கொண்டு பிரிந்து சென்ற மாடுகளை சிங்கம் பிடித்து சாப்பிட்ட நிலை நமக்கு வந்திருக்காது எமக்கான தனித்துவ வரலாற்று அடையாளம் சிதைக்கப்பட்டும் இருக்காது.
+ comments + 1 comments
Thowheedh jamath endru solpavarkalidam islam illai verumane kolkai veriyum theeviravathamum than.
Post a Comment