இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள போடோலாந்து பிராந்திய நிர்வாக மாவட்டங்களில், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பை சேர்ந்த கிளர்ச்சிக்காரர்களால் முஸ்லிம் கிராமவாசிகளிக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, அங்கு அமைதியை ஏற்படுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த கலவரத்தில் கொல்லப்பட்ட மேலும் 9 பேரின் சடலங்கள் நேற்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டன என்று அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது.
4 குழந்தைகள் மற்றும் 2 பெண்களின் சடலங்கள் உள்ளிட்ட 9 சடலங்கள், மனாஸ் தேசிய பூங்கா அருகில் உள்ள சல்பாரி துணை பிரிவின் கீழ் உள்ள கக்ரபாரி என்ற கிராமத்தில் இருந்து நேற்று மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெகி என்ற ஆற்றிற்கு அருகே ஒரு காட்டில் பதுகியிருந்த 7 முதல் 10 வயது வரையிலான 3 மூன்று குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறையில் தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் ஈடுப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக, காவல் துறை சட்ட ஒழுங்கு பிரிவின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் ஏ.பி.ரவுட் தெரிவித்துள்ளார்.
சிராங்க், துப்ரி, கொக்ராஜர் மற்றும் பக்சா ஆகிய 4 மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்குச் சட்டம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபடும் போராளிகளைக் கண்டதும் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், வன்முறை பாதித்த பகுதிகளில் இராணுவ அணிவகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அஸ்ஸாம் மாநிலத்தில் வியாழன் இரவு நடந்த இருவேறு தாக்குதல்களில் முஸ்லிம் கிராமவாசிகள் 11 பேரை போடோ இன கிளர்ச்சிக்காரர்கள் சுட்டுக்கொன்றதை அடுத்து இந்த கலவரம் தொடங்கியது.
இக்கொலைகளுக்கு காரணம் போடோலாந்து தேனிய ஜனநாயக முன்னணி என்ற அமைப்பின் ஒரு பிரிவினர்தான் என உள்ளூர் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
போடோ இன மக்களுக்கு தனியான தாய்நாடு வேண்டும் எனக் கோரி இக்கிளர்ச்சிக்காரர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.
இவர்கள் அடிக்கடி முஸ்லிம்களுடன் மோதிவருகின்றனர். அண்டையிலுள்ள வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வந்து தமது நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் முஸ்லிம்கள் என்று அந்த பழங்குடியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால், பல ஆண்டுகள் முன்பாகவே அஸ்ஸாமில் தாங்கள் குடியேறிவிட்டதாக அங்கு வாழும் முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வன்முறை தொடர்பாக இதுவரை மொத்தம் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment