-எம்.எப்.எம்.றியாஸ்
முதிர்ச்சியடையாத கல்குடா முஸ்லிம் அரசியலில் தொடரும் கல்குடா வாதம்..!
எதிர்காலங்களில் எமது சமூகத்திற்கு ஏற்படுத்தப்போகும் இழப்புக்கள் இன்னும் என்னென்ன?
சுதந்திர இலங்கையில்.. சொந்த மண்ணின் மைந்தன் ஒருவன் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெறவில்லையே...! இதன் மூலமாக எமது மண்ணினதும், மக்களினதும் அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லையே..! என்ற ஏக்கம் நீண்ட நாளாக கல்குடா மண்ணில் நிலைகொண்டிருந்தது.
இதன் பிரதிபலனாக இரண்டாயிரத்தில் ஊர் ஒன்றுபட்டு கல்குடா மண்ணின் முதல் முஸ்லிம் பிரதிநிதித்துவம் வெற்றிகொள்ளப்பட்டாலும், கல்குடா முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகள் வெற்றிகொள்ளப்படாமல் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் பாதாளத்தில் தள்ளப்பட்ட வரலாறு ஏற்படுத்திய பாதிப்புக்கள் இன்னும் எமது உடன்பிறப்புக்களின் உள்ளங்களில் மாறாத வடுக்களாய் தொடர்கின்றன....!
அன்று அரசியலுக்காய் ஒன்றுபட்ட கல்குடா முஸ்லிம் பட்டதாரிகள் சங்கமும், கல்குடா சம்மேளனமும், கல்குடா உலமா சபையும் தேர்தல் முடிந்து அதிகாரம் அரசியல்வாதியின் கைகளில் போனதும், இவர்களின் செயற்பாடுகள் செயலிழந்து போன நிகழ்வுகள, கல்குடாவில் அரசியல்வாதி ஒருவரை உருவாக்கும் பகடைக்காய்கள்தானா இவர்கள்? என்ற கேள்வி இன்னும் கேலியாய் தொடர்கின்றது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக, சபை எல்லைக்குட்பட்ட ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை கோறளைப்பற்று தெற்கு, கிரானுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் போது பட்டதாரிகள் சங்கமும், உலமா சபையும், சம்மேளனமும் தூங்கிக்கொண்டிருந்தனவா? அல்லது தெரிந்து கொண்டே இந்த சமுதாயத்திற்கு துரோகமிழைத்தார்களா? என்பது இன்னும் எம்மனங்களில் கசப்பான கேள்வியாகத் தொடர்கின்றது.....!
அதன் பின்னர் 2004 ல் ஓர் அரசியல் ஒன்று படல், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பணியாற்றிய மண்ணின் மைந்தர்களும், புத்தி ஜீவிகளும், உலமாக்களும், கல்குடா முஸ்லிம் சமூகத்தின் மிக முக்கிய பிரச்சினையான காணிப்பிரச்சினைகளை ஆறு வருடகாலமாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி அமைச்சராகவும், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராகவும், அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாகவும் இருந்த முன்னாள் அமைச்சர் அமீர் அலியை வைத்து ஏன் தீர்த்துத் தர முடியவில்லை...?
நாவலடி, சூடுபத்தினசேனை, சோதையன் கட்டு, ஜப்பார் திடல், வாகனேரி, முள்ளிவட்டவான், பொத்தானை, புணாணை, அக்கிறாணை மினுமினுத்தவெளி, வடமுனை, ஊத்துச்சேனை, கள்ளிச்சை, உசண ஏற்றம், காரமுனை, குஞ்சங்கல்குளம், வெள்ளாமைச் சேனை, மாங்கேணி, கிரிமிச்சை, வெருகல் முதலான முஸ்லிம்கள் நிரந்தரக் குடிகளாக வாழ்ந்த கிராமங்களை மீள் குடியேற்றம் செய்து அவர்களின் காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள், உட்கட்டுமானப் பணிகள் முதலிய வேலைத்திட்டங்களை செயற்படுத்த வக்கில்லாதவர்களாக கடந்த காலங்களில் அரசியல் தலைமையும், அவரோடு சேர்ந்து செயலாற்றிய கல்குடாவாதிகளும், தவறிவிட்டார்களா? தெரிந்து கொண்டே தவறிழைத்துவிட்டார்களா..?
அது மாத்திரமல்ல கல்குடாவின் பல்வேறு பிரதேசங்களிலும் விவசாய தொழில் ரீதியாக பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் சொந்தக்காரர்களான முஸ்லிம் சமூகத்தினதும், மட்டு மாவட்டத்தினதும் உயிர் நாடியான விவசாய செயற்பாடுகளுக்கான முறையான நீர் வினியோகம், பாதை அமைப்பு, காணிகளுக்கான உரிமை முதலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்காமல் கிடப்பில் போட்ட அல்லது கண்டுகொள்ளாமல் விட்ட கடந்த காலச் செயற்பாடுகள் இப்பிராந்தியத்தின் உயிர்நாடியான விவசாயிகளினதும், உழைப்பாளிகளினதும் வாழ்வை இருளடையச் செய்து இப்பிராந்தியத்தை நாட்டின் ஏனைய விவசாய செயற்பாடுகளிலிருந்து பின் தள்ளிய கடந்த கால திட்டமிடலில்லாத அரசியல் சமூக செயற்பாடுகளுக்கு காலத்துக்கு காலம் காளான் முளைப்பதைப் போல் அரசியல் முன்னெடுப்புகளை முன்னெடுக்கும் முறையற்ற கல்குடா வாதம் பேசும் புத்தி சீவிகளின் செயற்பாடல்லவா...!
தற்பொழுது மீண்டும் ஒரு முறை 'கல்குடா சூறா சபை' என்ற பெயரில்; வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது.
கடந்த 02.05.2014 (வெள்ளிக்கிழமை) வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் கல்குடா வாதம் பேசும் கையாலாகாதவர்களின் ஒன்று கூடல். இதன் மூலம் எதிர்காலத்தில் என்ன பிரச்சினைகளை எமது சமூகத்திற்கு இவர்கள் தீர்த்துக் கொடுக்கப்போகிறார்கள்..?
எந்தவிதமான சுதந்திரமான கருத்தாடல்களுக்கும் இடமளியாமல் நோக்கங்கள் எதனையும் தெளிவு படுத்தாமல், ஆட்களை மட்டும் ஒன்று கூட்டிய இந்தச் செயற்பாடானது மீண்டும் ஒர் அரசியல் நகர்வா...?
கடந்தகாலங்களைப் போல் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக ஊர்களின் புரிந்துணர்வுக்கு எதிராக இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் முஸ்லிம் தேசிய அரசியல் ஸ்திரத் தன்மைக்கு எதிராக, ஜனநாயகத்திற்கு எதிராக மீண்டும் கல்குடா வாதத்தை தலைக்கு மேல் தூக்கிப்பிடித்து இவர்கள் எமது சமூகத்திற்கு சாதித்துக் கொடுக்கப் போவது என்ன...?
இந்தச்செயற்பாடுகளால் பசுத் தோல் போர்த்திய புலியாக மீண்டும் ஓர் புதிய வேடமேற்று மக்களை ஏமாற்ற வலம் வரும் சூறா சபையின் பின்னணியில் இருக்கும் அரசியல் மர்மங்கள் என்ன....?
இவர்களை வழிநடத்துபவர்கள் யார்...?
இவர்களுக்கு நிதி வழங்குபவர்கள் யார்...?
இவர்களின் இலக்கும், இலட்சியமும் என்னென்ன...?
சிலரின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் ஏஜென்டா இவர்கள்...?
இவர்கள் தூய்மையான செயற்பாட்டாளர்களாக இருந்தால் இவர்களின் நோக்கம் பற்றி பொது மக்களுக்கு பகிரங்கமாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
தெளிவு படுத்தாவிட்டால் மசூரா சபை படுத்துவிட்டது என்றே அர்த்தம்.....! அல்லது எமது கேள்விக்கு பதிலளித்து தெளிவு படுத்தினால் நாம் எப்போதும் எமது சமூக நலனில் அவர்களை விட முன்னிற்கிறோம் என்பதை அங்கீகரித்தே ஆக வேண்டும்.
Post a Comment