ஒரு யானைக் குட்டியின் விலை 4 கோடியா?

Saturday, May 10, 20140 comments

இலங்கைக் காடுகளிலிருந்து காலங்களில் 65 யானைக்குட்டிகள் வரை கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தக் கடத்தல்களின் பின்னணியில் ஆளும்கட்சி அரசியல்வாதிகளும் வன உயிர் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் தொடர்புபட்டுள்ளதாக எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

யானைக் கடத்தல்காரர்களை கைதுசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

யானைக் கடத்தலுக்காக போலியான அனுமதி ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியத்தின் (ECT) இயக்குநர் எஸ். விஸ்வலிங்கம் பிபிசியிடம் கூறினார்.

அரசாங்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்ட யானை-கணக்கெடுப்பின் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் அந்தக் கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்பட்ட தகவல்களே யானைகள் கடத்தப்படுவதற்குப் பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நீண்டகாலமாக மனித சமூகத்தோடு இணைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுவந்த யானைகள் உயிரிழந்த பின்னர், புதிய யானைகள் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக 'கறுப்புச் சந்தைகள்' உருவாகிவிட்டதாக வன உயிர்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா கூறினார்.

வீடொன்றில் சட்டவிரோதமாக பிடித்துவைக்கப்பட்டிருந்த யானைக்குட்டியை அதிகாரிகள் அண்மையில் கைப்பற்றியிருந்தனர்.

அத்தோடு புதிய செல்வந்தர்கள் யானை வளர்ப்பதை ஒரு அந்தஸ்தாக பார்ப்பதாலும் கறுப்பு சந்தையில் யானைக்குட்டிகளுக்கு நல்ல விலை கிடைப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

யானைக்குட்டி ஒன்று ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி ரூபா வரை விலை போவதாகவும் தந்தம் உள்ள யானைக்குட்டி ஒன்று நான்கு கோடி ரூபா வரை விற்கப்படுவதாகவும் வன உயிர்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

யானைக்குட்டிகள் கடத்தப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுவதை கண்டுபிடிப்பதற்காக தேடுதல் வேட்டைகளில் வன-இலாகா அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் டிஎன்ஏ மரபணுச் சோதனைகள் நடத்தப்படும் என்றும் விஜயமுனி சொய்ஸா கூறினார்.

உலகில் அழிந்துவரும் அரிய விலங்கினங்களில் ஒன்றான யானைகளுக்கு இலங்கையில் பல சரணாலயங்கள் உள்ளன. யானைகள் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் மூலம் ஆண்டுக்கு 80 முதல் 90 கோடி ரூபா வரை அரசுக்கு வருமானம் கிடைப்பதாகவும் வனஉயிர் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிபிசியிடம் கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பு வெற்றியளிக்கவில்லை என்றும் கண்காணிப்பு விமானங்களைப் பயன்படுத்தி யானைகளைக் கணக்கெடுப்பது பற்றி அரசு ஆராய்ந்துவருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

யானைகள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்களையும் அமைச்சர் நிராகரித்தார்.

இலங்கையில் பௌத்த விகாரைகளின் பெரஹெர ஊர்வலங்கள் போன்றத் தேவைகளுக்காக யானைகள் தேவைப்படுகின்றன. நீண்டகாலமாக வளர்க்கப்பட்ட யானைகளின் பரம்பரை வழி வந்த குட்டிகளை மட்டுமே வளர்க்க அனுமதி உண்டு.

காட்டு யானைகளைப் பிடிப்பது இலங்கையில் 1970களில் தடைசெய்யப்பட்டது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham