தம்புள்ளை பள்ளிவாசலை வேறெரு இடத்திற்கு மாற்ற தீர்மானம்
Friday, May 9, 20140 comments
தம்புள்ளை ஹைரியா ஜீம் ஆ பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றி அதே பிரதேசத்தில் பிரிதொரு இடத்தில் புதிதாக நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய புதிய பள்ளிவாசலை நிறுவுவதற்கான காணியொன்றினை நகர அபிவிருத்தி அதிகார சபை வழங்குவதற்கு இணங்கியுள்ளதுடன் பள்ளிவாசல் நிர்வாக சபையும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
தம்புள்ளை ரங்கிரி ரஜ மஹா விகாராதிபதி இனாமலுவே சுமங்கல தேரரினால் கடந்த செவ்வாய் ,புதன்கிழமைகளில் பள்ளிவாசலை ஊடறுத்துச் செல்லும் வகையில் பாதை அபிவிருத்திப் பணிகள் மேற் கொண்டதையடுத்து அங்கு பதற்ற நிலை உருவாகியிருந்தது.
இதனையடுத்து ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மாத்தளை மேயரும் மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான ஹில்மி கரீம் பள்ளிவாசல் நிர்வாக சபையுடன் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்று மாலை தம்புள்ளை பள்ளிவாசலில் இடம் பெற்ற நிர்வாக சபையுடனான கலந்துரையாடலேயே மேற் குறிப்பிட்ட இணக்கம் காணப்பட்டது. கலந்துரையாடலில் ஹில்மி கரீமுடன் தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாத , தம்புள்ளை நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தம்புள்ளை பள்ளிவாசலுக்கான மாற்றுக்காணி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தம்புள்ளையிலே வழங்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை இனம் காணும் நான்கு காணிகளில் ஒரு காணியை பள்ளிவாசலுக்காக பெற்றுக் கொள்ளலாம் என சபையின் பணிப்பாளர் ஏக்கநாயக்க நிர்வாக சபையிடம் தெரிவித்தார்.
இரண்டு வருட காலமாக 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து பிரச்சினைக்குள்ளான சவால்களுக்குள்ளான தம்புள்ளை பள்ளிவாசலுக்கு நிரந்தர தீர்வு கிடைத்தமைக்காக பள்ளிவாசல் நிர்வாகம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நோன்பு நோற்பதற்குத் தீர்மானித்திருப்பதாக நிர்வாக சபை உறுப்பினர் ரஹ்மத்துல்லா கேசரிக்குத் தெரிவித்தார்.
மாத்தளை மேயர் ஹில்மி கரீம் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு மாற்றுக் காணி கிடைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துள்ளது. பள்ளிவாசலை புதிய இடத்தில் அழகாக நிர்மாணித்துக் கொள்ள முடியும் என்றார்.
பள்ளிவாசல் தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரைத் தொடர்பு கொண்டு உடனடி தீர்வு பெற்றுத் தரும்படி வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment