ரிஷாடின் விருப்பத்திற்கேற்ப முஸ்லிம்களை வில்பத்துவில் குடியேற்றுவதை எதிர்க்கிறோம் - அநுர குமார திஸாநாயக
Friday, May 9, 20140 comments
வில்பத்து தேசிய வனாந்தரத்தில் 500 ஏக்கர் அழிக்கப்பட்டு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே அநுர குமார திஸாநாயக எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த அரசாங்கம் நாட்டின் இயற்கைச் சூழலையும் வன ஜீவராசிகளையும் பாதுகாப்பதற்கான எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. மாறாக அனைத்தையும் அழிக்கும் கொள்கையையே முன்னெடுக்கின்றது.
இன்று வில்பத்து வடக்கில் 500 ஏக்கர் தேசிய வனம் அழிக்கப்பட்டு வீடுகள் அமைக்கப்படுகின்றன. அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தனது விருப்பத்திற்கேற்றவாறு முஸ்லிம்களை வில்பத்துவிலும் மன்னாரிலும் குடியேற்றி வருகின்றார்.
இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதை எதிர்க்கவில்லை. ஆனால் முஸ்லிம் மக்கள் மட்டும் இடம்பெறவில்லை. தமிழ் சிங்கள மக்களும் இடம்பெயர்ந்தார்கள். எனவே, அனைவரையும் மீளக்குடியேற்ற வேண்டும்.
ஆனால் இந்த அமைச்சர் தனது அரசியல் ஸ்திரத்திற்காகவும் வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காகவும் முஸ்லிம்களை குடியேற்றுகின்றார். இதனைத் தான் எதிர்க்கின்றோம்.
மன்னாரில் முஸ்லிம் மக்கள் வாழ்ந்த காணிகளை கடற்படையினர் கையேற்றுள்ளனர். எனவே அம் மக்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட வேண்டும். கைப்பற்றப்பட்ட காணிகளிலும் ஹோட்டல்கள் தான் அமைக்கப்பட்டு வருகின்றன. இன்று யானை திருட்டும் வியாபாரமும் அதிகரித்துள்ளது என்றார்.
Post a Comment