கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் அரசியல் - இனாமுல்லாஹ்விடமிருந்து
Monday, May 5, 20140 comments
"மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்;. அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்." (4:83) ஸுரத் அல் நிஸாஉ
இலங்கை முஸ்லிம் சமூகம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள சவால்கள் மொத்த தேசத்தினதும் அமைதி சமாதானம் சகவாழ்வு பொருளாதார சுபீட்சம் என்பவற்றிற்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற சவால்களாகும், தேசிய பூகோள பிராந்திய அரசியல் இராஜ தந்திர நகர்வுகளுக்காக கூலிப்படைகள் மேற்கொள்ளும் இனம் மதம் மொழி சாயம் பூசப்பட்ட அடாவடித்தனங்களை இந்த தேசத்தில் வாழும் பெரும்பான்மை சமூகத்தின் அறுதிப் பெரும்பான்மையினர் புரிந்துவைத்துள்ளனர், அதேபோல் தற்பொழுது பகிரங்கமாகவே பிரதான அரசியல் தலைவர்கள், மதகுருமார்கள், புத்திஜீவிகள் ,மனித உரிமை அமைப்புக்கள் என வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர்.
முஸ்லிம் சன்மார்க்க மற்றும் சிவில் தலைமைகள் மிகவும் நிதானமாகவும் ,சமயோசிதமாகவும் , சாணக்கியமாகவும் பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றமையும் , தேசிய மட்டம் முதல் ஊர் ஜமாத்துக்கள் வரை மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் விவகாரங்களை அவதானத்துடன் அணுகி வருகின்றமையும் ஆறுதல் தருகின்றது.
போருக்குப் பின்னரான இலங்கையில் சர்வதேச பிராந்திய சக்திகளின் ஆதிக்கப் போட்டியின் களமாக நமது தேசம் மாறிவருகின்ற அதேவேளை, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள ஆளும் வர்க்கமும், ஆட்சியைக் கைப்பற்ற கைப்பற்ற எதிரனிகளும் முனைப்புடன் நகர்வுகளை மேற்கொள்ள, களங்கிய குட்டையில் மீன் பிடிக்கவும், தமக்கு தேவையானவர்களை அதிகாரத்துக்கு கொண்டுவரவும் சர்வதேச பிராந்திய சக்திகள் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதோடு கூலிப்படைகள உள்நாட்டு முகவர்களுக்கு தேவையான வளங்களையும் வழங்கி வருகின்றனர்.
இன்ஷா அல்லாஹ் முஸ்லிம் சிவில் சன்மார்க்கத் தலைமைகளோடு முஸ்லிம் அரசியற் குழுக்களும் புரிந்துணர்வுடன் செயற்பாட்டின் நாட்டில் பெரும்பானமியாக உள்ள நேச சக்திகளுடன் இணைந்து மொத்த தேசத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் மேற்படி சவால்களை எங்களால் மிகவும் வெற்றிகரமாக கையாள முடியும் என்பதில் நம்பிக்கை இருக்கின்றது.
அந்த வகையில் தற்பொழுது முஸ்லிம் சிவில் சன்மார்க்க தேசிய மற்றும் பிராந்திய தலைமைகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்குவதோடு பொதுவான இணைக்கப் பாடுகளுக்கு முரணாக ஆவேசமூட்டும் அறிக்கைகள் வெளியிடல், அல்லது முஸ்லிம் சமூகத்தை தனிமைப்படுத்தும் கருத்துக்களை வெளியிடல், வன்முறைக்கு ,காடைத்தனத்திற்கு அதே பாணியில் சமூக ஊடகங்களிலும் வலை தளங்களிலும் பதிவுகளை இடல் என்பவற்றில் இருந்து நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு சமூகம் பாதுகாப்பின்மையை உணருகின்ற பொழுது அந்த சமூகம் தமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு உரிமை இருக்கிறது, அதற்கான நகர்வுகளை மிகவும் பொறுப்புடனும் சமயோசிதமாகவும் சாணக்கியமாகவும் இராஜ தந்திர ஜனநாயக
வழி முறைகளூடாகவும் சமூகத் தலைமைகள் ஒன்றிணைந்தே மேற்கொள்ள வேண்டும்.
Post a Comment