அளுத்கம வர்த்தக நிலைய தாக்குதல் நல்லிணக்கத்துக்கு பாதகமானது - அஸ்லம் எம்.பி.
Sunday, May 11, 20140 comments
அளுத்கமையில் முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது இன நல்லிணக்கத்துக்கு பாதகமானதும் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதுமான மிலேச்சத்தனமானதொரு செயற்பாடாகும். எனவே இதன் பின்னணியில் உள்ளவர்களை இனங்கண்டு அவர்களை கைது செய்வதற்கும் இனங்களுக்கிடையிலான உறவைப் பாதுகாப்பதற்கும் உடன் நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்றத்தினூடாக ஜனாதிபதியிடம் கோரி நிற்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. மொஹமட் அஸ்லம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் புத்திக்க பத்திரன எம்.பி.யினால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அஸ்லம் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
அளுத்கமையில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்று குறித்த ஒரு தரப்பினரால் திட்டமிடப்பட்ட வகையில் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இது ஒரு திட்டமிடப்பட்ட செயல் என்றே கூற வேண்டும்.
அண்மையில் பெஷன் பக் வர்த்தக நிறுவனமும் இவ்வாறே தாக்குதலுக்கு இலக்கானது. எனினும் அது தொடர்பான விடயங்கள் பின்னர் மழுங்கடிக்கப்பட்டு விட்டன.
அதேபோன்று தான் தற்போது பொதுபலசேனா என்ற அமைப்பின் பின்னணியில் இந்தத் தாக்குதலும் இடம் பெற்றுள்ளது.
நாம் இந்த நாட்டில் அமைதியையும் இனங்களுக்கிடையிலான உறவைப் பாதுகாத்தலையும் விரும்புகின்றோம்.
ஆனாலும் இத்தகைய அருவருக்கத்தக்க மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவங்கள் இனங்களுக்கிடையிலான உறவினை விரிசலடையச் செய்கின்றன.
மேலும், இத்தகைய செயற்பாடுகள் அரசாங்கத்தின் விரல் நீட்டுவதற்கு சந்தர்ப்பமாகி விடுகின்ற அதேவேளை அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை பெற்றுக்கொடுக்கும் செயலாகவும் ஆகிவிடுகின்றது. ஆகவே, இப்படியான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
அத்துடன் மேற்படி வர்த்தக நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு சூத்திரதாரிகளாக இருந்து செயற்பட்டோர் தொடர்பில் சரியானதும் கடுமையானதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இனங்களுக்கிடையேயான உறவினைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்தப் பாராளுமன்றத்தினூடாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.
Post a Comment