இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ஏகாதிபத்திய சக்திகள் விதைத்து விட்டு சென்ற இன,மத,வகுப்புவாத வித்துக்கள் இப்போது ஆல மர விருட்சமாய் வளர்ந்து கிளை பரப்பிக்கொண்டிருக்கிறது.யார் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச வல்லாதிக்க போட்டா போட்டிகளுக்கிடையில் அனைத்து காலணித்துவ நாடுகளும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.சப்தமில்லாமல் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கவும் முடியாது.வீராப்பு பேசி சமூக அரங்கில் தனிமை பட்டு போகவும் முடியாத ஒரு சூழலில் முஸ்லிம் சமூகம் இப்போது உள்ளது.
யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் சமூக மற்றும் மத நல்லிணக்கம் குறித்த உடன்பாடான விளைவுகளை விட மத நல்லிணக்கத்தை தகர்க்கும் அக,புற காரணிகள்தான் அதிகமாக காணப்படுகின்றன.தர்க்க அடிப்படையில் எவ்வித நியாயங்களுமின்றி வேண்டுமென்றே சில சக்திகள் மனித உணர்வுகளை சூடேற்றுகின்றன.சார்பு நிலை என்பது நியாயங்களை கூட காணத்தவறிவிடும்.இவ்வடிப்படையில் பௌத்த சிங்கள சார்பியம் இன்று சிறுபான்மையினரின் நியாயங்களை கூட எதிர்நிலையில் வைத்தே பார்க்கிறது.
புதிய ரௌடிசத்தின் ஆத்ம பலம்?
வில்பத்து சரணாலயத்தின் முஸ்லிம் குடியேற்றங்கள் குறித்து எழுந்த சர்ச்சையின் போது பௌத்த அடிப்படைவாதத்தின் அதி பயங்கர முகம் வெளிப்பட்டது.
உண்மையில் எதையும் மதியாத ஒரு அசட்டுத்தனமான ரௌடிஸம் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.ஜனநாயகமும் சட்டமும் உள்ள ஒரு நாட்டில் அத்தனை வகையான அதிகார நிலைகளையும் மீறி வீரிட்டுப்பாய்ந்து வந்த ஒரேயொரு பௌத்த சிங்கள குரல் இலங்கையின் எல்லா தரப்பையும் கேள்விக்குட்படுத்திவிட்டது.
இரு வேறு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகமொன்றின் பிரச்சினையை மக்கள் மன்றில் முன்வைக்க வந்த பிக்குகள்,மௌலவிமார்களின் பலத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.கொதிப்பான ஒரு சூழலில் ஒருவகை தைரியமும் ஆளுமையும் இருந்ததால்தான் அவர்கள் அப்படியொரு பத்திரிகை மாநாடொன்றை நடாத்த முன்வந்தனர்.
அத்தகைய அனைவரையும் ஒரு வார்த்தையேனும் பேச விடாது தனது தடித்த குரலில் அனைவரையும் அடக்கிப்போட்டு விட்ட குறித்த அடிப்படைவாத பௌத்த துறவியின் ஆத்ம பலத்தையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.இலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாதத்தின் ஆழம் எத்தகையது என்பதை கணிப்பிடுவது இப்போதைக்கு கடினமானது.ஆயினும் பௌத்த அடிப்படைவாதத்தை பிரதிபலிக்கும் முகங்களின் ஆத்ம பலத்தை மிக இலகுவானதாக கருதிவிட முடியாது.
குறித்த அமைப்பின் துறவிகள் அன்று வெ ளியிட்ட கருத்துகளுக்கு சமனான அல்லது சரியான பதில் அல்லது விமர்சனம் சமாதானத்தை நேசிக்கும் இரு சமூகங்களாலும் இதுவரை முன்வைக்கப்படவில்லை என்பது முக்கியமானதாகும்.அப்படியென்றால் இந்த அடிப்படைவாதிகளின் ஆத்ம பலத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய சமவலு கொண்ட ஆத்ம பலசாளிகள் இரு சமூகங்களிலும் இல்லையா என கேட்கத் தோன்றுகிறது
வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்பது உண்மை.நாம் வன்முறைக்கு பதில் வன்முறையை பிரயோகிக்க வேண்டுமெனவும் கூறவில்லை.ஆனால் நாட்டின் சமாதானத்தை நேசிப்போர் சமாதானத்திற்காக தைரியத்தோடு குரல் கொடுத்து அடிப்படைவாத சக்திகளை கிலி கொள்ளச் செய்யும் விமர்சனங்களையும் நியாயங்களையும் தர்க்க அடிப்படையில் முன்வைக்கும் ஆத்ம பலத்தை கொண்டோர் இரு சமூகங்களுக்கும் இப்போது அவசியப்படுகின்றனர்.யாரோ சட்டத்தையும் ஒழுங்கையும் கையில் எடுத்துக்கொண்டு நியாயமின்றி அடக்குகின்ற பொழுது நியாயத்தோடு அதற்காக குரல்கொடுக்க எல்லோருக்கும் உரிமை உண்டு.ஆத்ம பலம் கொண்டோரின் நியாயமான குரல்களை அதிகாரம் கொண்டு அடக்குவது எப்போதைக்கும் சாத்தியமாகாது.ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் பேசுவதைவிட ஆத்ம பலம் கொண்டோரின் நூறு வார்தைகள் மட்டும் போதுமானது.
பல்வேறு ஊடகங்களில் பதிவாகிக்கொண்டிருந்த பொழுது இரு சமூகங்களினதும் கௌரவத்திற்குரிய ஒரு தரப்பாரை கடுகளவும் மானிட தர்மமின்றி வாயடைக்கச்செய்து அகௌரவப்படுத்தியது முழு இலங்கை தேசத்தையும் தலைகுனியச் செய்தது.அந்த ரௌடிஸம் மதகுருமார்களை மட்டுமன்றி இந்த தேசத்தின் எல்லா பிரஜைகளினதும் ஆளுமைக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிராக கைவைத்து விட்டதாகவே கருதப்பட வேண்டும்.நாம் எதையும் எங்கும் செய்வோம்.எவரும் நம்மை கேட்க முடியாது என்ற அசட்டுத் துணிவை அந்நிகழ்வுகளினூடாக காட்டிவிட்டனர்.
நடந்தேறிய இந்த நிகழ்வுகளுக்கு பின்னரும் வாய் மூடியிருப்பது சமாதானத்தை நேசிக்கும் எவருக்கும் அழகில்லை.மூன்றாம்தரப்பொன்றின் நிகழ்ச்சிநிரலுக்கு ஆட்பட்டு இலங்கை தீவின் அழகும் மனிதமும் கெட்டுப் போவதை எவரும் அனுமதிக்கக் கூடாது.
இந்த நாட்டின் அழகும் மனிதமும் மதத்தினால் மதங்கொண்டு அழிந்து போவதைவிட வேறென்ன அநியாயம் இருக்கிறது?.மதமும் மத நெறிகளும் மனிதர்களை மனிதத்தோடு வாழச் செய்வதற்கே ஆகும்.ஆனால் மதம் மனிதத்தை மிதித்து போடுமென்றால் அந்த மதவாதிகள் எதற்கு இந்த நாட்டிற்கு?மதத்தால் வந்த மதத்தை அடக்கி அவர்களை வழிப்படுத்துவது இந்நாட்டை நேசிக்கும் அனைவரின் கடைமையாகும்.
உமரின் ஆத்ம பலமும் அவசியமே
வரலாற்றில் உமர் (ரழி) என்ற ஆளுமையை இவ்விடத்தில் ஒப்பு நோக்குவது பொருத்தமானதாகும்.உமரின் வீரம் பற்றிய வர்ணனைகள் அவரை உடல் சார்ந்ததும் வன்முறை சார்ந்ததுமான வீரராக மட்டுமே அடையாளப்படுத்தியிருக்கிறது.அது எதிர் மறையான ஒரு தோற்றப்பாடாகும்.
உண்மையில் உமர் (ரழி) அதீத ஆத்ம பலம் கொண்ட ஒரு மனிதர்.இஸ்லாத்திற்கும் நபிகளாரின் செயல்வாதத்திற்கும் பலம் சேர்த்த மனிதர்.எதிரிகளின் வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் தனது ஆத்ம பலத்தால் பதிலடி கொடுத்தவர்.அவரின் ஆத்ம பலம் எதிரிகளை கிலி கொள்ளச் செய்தது.சில போது வாள் முனைகளை விட உமரின் ஆத்ம பலம் எதிரிகளை சரணடையச் செய்தது.
உமரின் இந்த ஆத்மீக பலத்தை முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் சரியாக பயன்படுத்தி இஸ்லாத்திற்கு பலம் சேர்த்தார்கள்.இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட புதிதில் உமர் ஹிஜ்ரத் சென்ற போது பகிரங்கமாக அதனை எதிரிகளுக்கு பிரகடனம் செய்தார்.உமரின் இந்த பிரகடனத்தை குறைஸிய எதிர்தரப்பில் எந்த மனிதரும் எதிர்த்து நிற்கவில்லை.அதன் பின்னர் ஹிஜ்ரத் நிகழ்வு ஒரு பகிரங்க இரகசியமானது.
வரலாற்றில் உமர் போன்ற ஆத்ம பலம்மிக்கவர்கள் பெரிதும் உபயோகப்பட்டார்கள்.எதிர்தரப்பை எதிர்கொள்வதற்கு வன்முறை,சாத்வீகம் தவிர்த்து மூன்றாவது வழி முறையொன்றும் உள்ளது.அதுதான் ஆத்ம பலம் கொண்ட மனிதர்களது செயல்வாதமும் பங்களிப்பும் ஆகும்.
இன்றுள்ள இலங்கை சூழலில் முஸ்லிம்களுக்கெதிராக சூழ்ந்துள்ள கரும் மேகங்களை கலைக்க அபுதாலிப்களை போன்று உமர் போன்ற ஆத்ம பலம் கொண்டோரும் அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சில விடயங்களை அணுகுவதில் இந்த முறையும் பயன்படும்.இது முஸ்லிம்களுக்கு மட்டுமள்ள ஏனைய சமாதானத்தை நேசிக்கும் சமூகங்களுக்கும் அவசியமானதே.
போட்டியென்பது இரு சம வலுக்கள் மோதும் போதே தோன்றும்.இன்றுள்ள பௌத்த அடிப்படைவாதத்திற்கு சம பலங்கொண்ட ஒன்று இல்லை என்ற தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் கதாநாயகர்கள் ஆகிவிட்டனர்.சம வலு கொண்ட ஆத்ம பலம் கொண்ட கூட்டம் அதற்கு எதிரான சம வலுவோடும் நெஞ்சுறத்தோடும் செயற்பட வேண்டும்.அப்போது அந்த கெட்ட நோக்கம் கொண்ட சக்திகள் முற்றிலும் அமைதியாகாத போதும் குறைந்தது கட்டு மீறாது கட்டுக்குள் அடங்கியாவது போகும்.
தாரிக் ஸம்ஊன்
விரிவுரையாளர்
ஸஹ்வா இஸ்லாமிய்யா
Post a Comment