BBS+சூறா சபை+தௌஹீத், BBS+ரணில்+ரிஷாட்: இனாமுல்லாஹ்விடமிருந்து...

Thursday, May 1, 20140 comments

வினை விதித்தவன் வினை அறுப்பான்


முஸ்லிம் சிவில், சன்மார்க்க, அரசியல் தலைமைகள், அமைப்புக்கள் புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், பல்கலைக் கழக சமூகத்தினர் இளைஞர் மாதர் அமைப்புக்கள், அதிபர் ஆசிரிய சமூகத்தினர் என சகலரையும் தேசிய மட்டத்திலிருந்து உள்ளூர் மட்டம் வரைக்கும் ஒருங்கிணைக்கின்ற பொறிமுறை ஒன்று அவசியம். இது குறித்தும், வேற்றுமைகளுக்கு மத்தியிலும் பொதுவான சமூக தேசிய விவகாரங்களில் ஒற்றுமைப் படுகின்ற தேசிய ஷூரா சபை ஒன்றை தோற்றுவிப்பது குறித்தும் கடந்த சிலவருடங்களாக குரல் கொடுத்ததோடு தொடர் தேர்ச்சியாக எழுதி வந்தேன். இருந்த பொழுதும் அவ்வாறான ஒரு பொறிமுறையை தோற்றுவிப்பதற்காக பல்வேறு தரப்புக்களுடனும் இணைந்து செயற்பட்ட பொழுது குறிப்பாக என்னை இரண்டு தரப்பினர் ஊடகங்களிலும் பிரச்சாரக் கூட்டங்களிலும் காரசாரமாக விமர்சித்தனர்.

கத்தாரில் இருக்கும் சர்வதேச பயங்கரவாதி யூஸுப் கரழாவி தலைமை தாங்கும் அகில உலக ஜம்மியாய்துல் உலமாவின் இலங்கைக்கான பிரதிநிதி மத்திய மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் சகோதரர், பிரதான அமைச்சர் ஒருவரின் மைத்துனன் இனாமுல்லாஹ் என்பவர் இலங்கை ஜம்மியாய்துல் உலமாவையும் மீறிய ஷூரா என்கிற அமைப்பினை இலங்கையில் தோற்றுவிக்க முனைகிறார் இது ஆபத்தானது..என ஊடகங்களிலும் பிரச்சாரக் கூட்டங்களிலும் நானும் கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி அவர்களும் இருக்கும் ஒரு படத்தை காட்டி பொதுபல சேனா அமைப்பின் பிரதானி ஞானசார தேர காரசாரமாக விமர்சித்தார்.

உண்மையில் வேற்றுமைகளுக்கு மத்தியிலும் இணக்கம் காணுகின்ற முஸ்லிம் சமூக ஒருமைப்பாடு தமக்கு பெரும் அச்சுறுத்தலாக அல்லது முஸ்லிம் சமூகத்தை சர்வதேச மற்றும் பிராந்திய சதிகாரர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்காக பலிக்கடாவாக்கும் முயற்சிகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்து விடும் எனக் கருதிய பொதுபல சேனா அவ்வாறு விமர்சிப்பதில் நியாயம் இருந்தது.

ஆனால் நாம் மாத்திரம் தான் சத்தியத்தின் வழி நிற்கின்றோம் வழிகேடர்களுடன் வேற்றுமைக்கு மத்தியிலும் இணக்கம் காண்பது அசத்தியத்தில் சங்கமிப்பது போலாகும் பள்ளிகட்டும் அமைப்பினரும் இனாமுல்லாஹ்வும்கொண்டுவரும் கையாளாகாத தேசிய ஷூரா சபையை நாம் அக்கு வேறு ஆணி வேறாக விமர்சிப்போம், அதற்கெதிராக நாடு முழுவதும் மேடை போடுவோம் என ஒரு ஏகத்துவ ஏகப்பிரதிநிதி அமைப்பு எங்களை காரசாரமாக விமர்சித்தது.

துரதிஷ்டவசமாக இன்று தனித்துச் செல்லும் குறிப்பிட்ட அமைப்பினரையே பொதுபல சேனா, ராவணா பலய உட்பட துரத்த ஆரம்பித்துள்ளது, மாத்திரமன்றி குறிப்பிட்ட அமைப்பினரின் பௌத்த மத கோட்பாடுகள் குறித்த ஏளனமான விமர்சனங்கள் பௌத்த உயர் பீடங்கள் வரை சென்று, மத விவகாரங்களுக்கான தனியான போலிஸ் பிரிவு வரை விவகாரம் அரசியல் எதிர் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது, இன்று அவர்களது செயற்பாடுகள் குற்றப் புலனாய்வு வரை சென்றுள்ளது.

எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த அமைப்பினருடனும் கோப தாபங்கள் இல்லை அவர்களும் அவர்களது அமைப்பினர் அனைவரும் முஸ்லிம் சமூகத்தின் தவிக்க முடியாத அங்கமாகும், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் தமது இன்னும் நிதானமாக சாணக்கியமாக, சமயோசிதமாக அவர்களும் செயற்படல் வேண்டும் வேண்டப் படும் பட்சத்தில் அவர்களுக்கான ஆலோசனைகளை "ஷூராவை" வழங்க நாங்களும் தயாராகவே இருக்கின்றோம்..!

முஸ்லிம் கவுன்ஸில் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க அவர்களை நாம் சந்தித்து வேண்டிக் கொண்டதற்கிணங்க போதுபலசெனாவின் நடவடிக்கைகளை கண்டித்து பாராளுமன்றில் அவர் உரையாற்றிய பொழுது வடபகுதியை சேர்ந்த நமது அமைச்சர் ஒருவரே குறுகிட்டார்...இன்று குறிப்பிட்ட அமைச்சரையே பொதுபல சேனா துரத்துகிறது...

எனக்கு எந்த அமைச்சருடனும் தனிப்பட்ட கோப தாபங்கள் கிடையாது..எல்லோருமாக ஒரு சமூக கட்டுக் கோப்பிற்குள் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டால் இவ்வாறான எதிர்விளைவுகளை எதிர்காலத்தில் தவிர்ந்து கொள்ளலாம்.

அல்லாஹு அஃலம்...!
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham