அம்பாந்தோட்டையென்பது இலங்கையின் ஒரு பகுதியே தவிர தனி ராஜ்ஜியம் அல்ல. இலங்கையர்களுக்கு நாட்டில் எங்கும் செல்லும் அதிகாரம் உண்டு. எனவே ஊழல் மோசடிகளை தட்டிக் கேட்க மீண்டும் அம்பாந்தோட்டைக்கு செல்வோம் என சவால் விடும் ஐ.தே. கட்சி, மத்தள விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகம் தொடர்பாக மறைக்கப்பட வேண்டிய மர்மங்கள் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் குற்றம் சாட்டியது.
பிட்டகோட்டேயிலுள்ள சிறிகொத்தா கட்சித் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஐ.தே. கட்சி இவ்வாறு தெரிவித்தது.
இங்கு உரையாற்றிய ஐ.தே. கட்சி தலைமைத்துவச் சபைத் தலைவரும் எம்.பி.யுமான கரு ஜயசூரிய
மத்தள விமான நிலையம் மாகம்புர துறைமுகம் என்பன மக்கள் பணத்திலேயே நிர்மாணிக்கப்பட்டவையாகும்.எனவே அதன் பிரதிபலன்கள் நாட்டுக்கு மக்களுக்கு எவ்வாறு சென்றடைகின்றது. இதனால் நாட்டுக்கு லாபமா? நஷ்டமா? ஊழல் மோசடிகள் என பல்வேறு விடயங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளது. அதனை ஆராய வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்.
அதற்கான சிறப்புரிமைகள் எம்.பி. மாருக்கு உள்ளது. சிறைச்சாலைகளுக்கும் எம்.பி.க்களால் அனுமதி பெறாமல் செல்ல முடியும்.
அவ்வாறானதொரு சூழ்நிலையில் எமது எம்.பி.க்கள் ஐவர் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள் அதிகார சபையிடமும் அனுமதியை பெற்றுக் கொண்டதோடு கட்சியின் தலைமைத்துவச் சபையிடமும் அனுமதி பெற்றுக்கொண்டே அங்கு சென்றது.
ஆனால் அரசாங்கத்திற்கு ஆதரவான குண்டர்கள் எமது எம்.பி.க்களுக்கு உள்ள உரிமையை மறுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் அச்சுறுத்தவும் முயற்சிகளை எடுத்தனர்.
துப்பாக்கிகளுடன் வீதியில் இறங்கி எமது எம்.பி.க்களை அச்சுறுத்தும் நிலைமையை நாட்டு மக்களும் ஏன் சர்வதேசமும் ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டனர்.
அன்றைய தினம் ஊடகவியலாளர்கள் எமது எம்.பி.க்களுடன் போயிருக்கா விட்டால் சிலவேளை அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்.
எத்தனையோ பிரச்சினைகளுக்கு அடக்கு முறைக்கு மத்தியிலும் ஊடகவியலாளர்கள் எமது எம்பி.க்களுக்கு எதிரான அரசாங்க குண்டர்களின் அராஜகத்தை நன்றாக ஊடகவியலாளர்கள் புகைப்படங்களுடனும் செய்திகள் மூலமாகவும் விபரித்திருந்தார்கள்.
அதற்காக அனைத்து ஊடகங்களிற்கும் அரசு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
உகண்டா வடகொரியா போன்ற சர்வாதிகார ஆட்சியாளர்களின் நாடு போன்று இன்றைய ஆட்சியாளர்கள் எமது நாட்டையும் மாற்றி வருகின்றனர்.
இருண்ட யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த மோசமான சம்பவத்திற்கு எதிராக பொலிஸ் மா அதிபர் பாரபட்சமற்ற விசாரணைகளை நடத்த வேண்டும்.
இது தொடர்பில் சபாநாயகர் சமல் ராஜபக் ஷவிற்கும் முறைப்பாடு செய்துள்ளோம். எனவே நீதியான விசாரணைகள் நடைபெறும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம் என்றும் கரு ஜயசூரிய எம்.பி தெரிவித்தார்.
எரான் விக்கிரமரட்ண எம்.பி-
விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் இல்லாதொழித்து எமது படையினர் அர்ப்பணிப்பு செய்து நாட்டை மீட்டெடுத்தனர். ஏன்? அனைத்து இலங்கையர்களும் நாட்டில் அனைத்து இடங்களுக்கும் சுதந்திரமாக போய் வர வேண்டும் என்பதற்காகவே ஆகும்.ஆனால் எமது படையினர் அர்ப்பணிப்பு செய்து பெற்றுக்கொடுத்த சுதந்திரம் இன்று அரசாங்கத்தால் மீறப்படுகின்றது. மக்கள் பிரதிநிதிகளுக்கு நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியாதுள்ளது தாக்கப்படுகின்றனர்.
இது மக்கள் பிரதிநிதிகளை அல்ல மக்களை தாக்குவதற்கு ஒப்பானதாகும். ஐ.தே. கட்சி எம்.பி மாருக்கு எதிரான தாக்குதல் அல்ல. அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிரான தாக்குதலே மத்தள சம்பவமாகும்.
தெற்காசிய வலயத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் தகவல் அறியும் உரிமை உள்ளது. அதற்கான சட்டங்கள் அமுலில் உள்ளன.
ஆனால் இலங்கையில் மட்டும் தான் தகவல் அறியும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. நாம் அதற்கான சட்ட மூலத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தோம் ஆனால் அரசின் எதிர்ப்பால் தடைப்பட்டது.
மத்தள விமான தளத்திற்கு ஒரு வருடத்திற்கு 10 இலட்சம் பயணிகள் வருவார்கள் என்ற இலக்குடனேயே கடன் வாங்கி நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் இங்கு ஒரு நாளைக்கு 25 -30 பயணிகளுக்கு இடைப்பட்ட தொகையினரே வருகின்றனர்.
இதனை கூட்டிப் பார்த்தால் ஒரு வருடத்திற்கு 1 இலட்சத்திற்கும் குறைவான பயணிகளே வருகின்றனர். இந்த விமான நிலையத்தால் நாட்டுக்கோ அல்லது மக்களுக்கோ நன்மை இல்லை. இவ்வாறான நிலைமைகளை ஆராய்ந்து ஐ.தே. கட்சி ஆட்சி காலத்தில் அதனை எவ்வாறு சரி செய்ய முடியும் என்பன தொடர்பில் ஆராயவே நாம் மத்தள சென்றோம்.
அத்தோடு அங்குள்ள ஒப்பந்தக்காரர்கள் தொடர்பாகவும் பாரிய பிரச்சினைகள் உள்ளன. இவற்றை ஆராய்ந்து மக்களுக்கு உண்மைகளை தெரியப்படுத்த வேண்டியது எமது கடமையாகும்.
அந்த கடமையை நிறைவேற்ற சென்ற எங்களைத் தான் அரசாங்கத்தின் ஒப்பந்தக்காரர்கள் துப்பாக்கிகளை கைகளில் எடுத்துக் கொண்டு விரட்டினர். மிரட்டினர் என்றார்.
ஆர். யோகராஜன் எம்.பி.
உயர் பொலிஸ் அதிகாரிகளும் பொலிஸாரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே முட்டைகளாலும் தக்காளிகளாலும் எமது எம்.பி.க்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்து.பல பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அன்றைய தினம் நாம் எதிர் நோக்கிய பிரச்சினைகளை எடுத்துக்கூறி பாதுகாப்பை கோரினோம். ஆனால் அந்தப் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றார்.
அஜித் பி. பெரேரா எம்.பி.
அம்பாந்தோட்டை என்பது இலங்கையின் ஒரு பகுதியே தவிர அது தனிராஜ்ஜியம் அல்ல. எனவே இலங்கை பிரஜைகள் அனைவரும் நாட்டில் எங்கும் சுதந்திரமாக சென்று வர அதிகாரமிக்கவர்கள்.மத்தளவில் எமக்கெதிரான அடாவடித்தனங்களால் ஊழல் மோசடிகளுக்கு எதிரான எமது தேடல்களை தடுத்து விட முடியாது. நாம் எதற்கும் அஞ்ச மாட்டோம்.
மீண்டும் அம்பாந்தோட்டைக்கு செல்வோம் மத்தளவிலும் மாகம்புர துறைமுகத்திலும் மறைக்கப்படும் உண்மைகளை என்னவென்பதை ஆராய்வோம். மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம்.
எம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அச்சுறுத்தியவர்கள் யாரென்பதற்கு ஊடகங்களில் சாட்சிகள் உள்ளன. எனவே சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு பிரச்சினை இருக்காது.
எனவே இவ்வாறானவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும். தென் பகுதி பொலிஸார் மீது எமக்கு நம்பிக்கையில்லை. பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர்களின் கருத்துக்கள் வெட்கப்பட வேண்டியவையாகும் என்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் எம்.பி.க்களான அஜித் மன்னப்பெரும, நளின் பண்டார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Post a Comment