பொதுபல சேனாவினருக்கு கொலை அச்சுறுத்தலாம் - ஜனாதிபதிக்கு கடிதம்
Monday, April 21, 20140 comments
(எம்.எம். எம்)
மேலைத்தேய நாடுகளின் சதித்திட்டத்திற்கு அமைவாக நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தவும், பௌத்த மதத்தினை இழிவுக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவதாகவும் எமது அமைப்பின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களினால் எமது அமைப்பினருக்கு அச்சுறுத்தல் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் எமது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படின் அதற்கு
அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று பொது பலசேனா அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு பொது பலசேனா அமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிறைவேற்று குழு உறுப்பினர் விதானகே தெரிவிக்கையில்,
பொது பலசேனா அமைப்பானது இந்நாட்டின் சிங்கள பௌத்த கலாசாரத்தினையும் பண்பாடுகளையும் பாதுகாக்கும் நோக்குகளுடனே செயற்பட்டு வருகிறது. இத்தகைய நிலையில் தற்போது நாட்டில் அந்நிய அடிப்படை வாதிகளினுடைய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. இதனால் இந் நாட்டில் பௌத்த மத கலாசாரம் முற்றாக அழித்து விட கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை தடுக்கும் நோக்குடனே எமது அமைப்பு செயற்பட்டு வருகிறது.
இத்தகைய சம்பவம் தொடர்பில் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும் ஆதரவு நல்குகின்றனர். முஸ்லிம் அடிப்படைவாதிகள் இந்நாட்டில் இஸ்லாமிய கலாசாரத்தினை திணிக்க முற்படுகின்றனர். இதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். இது பௌத்த நாடு. இந்த நாட்டை துண்டாட விரும்பமாட்டோம்.
எனவே இந்நாட்டின் பௌத்த தர்மத்தினை பாதுகாத்து வருகிறோம். இத்தகைய நிலையில் அரசின் அமைச்சர்கள் எம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். அதாவது எமது அமைப்பானது மேலைத்தேய நாடுகளின் சதித்திட்டங்களுக்கு அமைவாக இந்நாட்டின் பௌத்த மதத்தினை இழிவுக்குட்படுத்த முனைவதாகவும், ஏனைய மதத்தவர்களை இனக்கலவரங்களுக்கு தூண்டுதல் செய்வது தொடர்பான குற்றச்சாட்டுக்களை சுமத்துவது மாத்திரமின்றி தற்போதைய பொருளாதாரத்தை கவிழ்த்து மேலைத்தேய நாடுகளின் விருப்பத்திற்கேற்ப அரசாங்கமொன்றை உருவாக்கும் நோக்குடன் செயற்பட்டு வருவதாகவும் குற்றங்கள் சுமத்துகின்றனர்.
இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டாகும். இவற்றை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். இத்தகைய நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களை மையமாக கொண்டு எமது அமைப்பினருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை எமது உயிருக்கும் ஆபத்தும் நேரிட வாய்ப்பும் உள்ளது.
ஆகவே மேற்குறித்த விடயங்களில் எமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமாயின் அதற்கான பொறுப்புக்களை அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment