மறிச்சக்கட்டி, மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள ஒரு கிராம சேவகர் பிரிவாகும். இக் கிராமம் வட மேல் மாகாணம், வடக்கு மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணத்தின் எல்லை கிராமமாக அமைந்துள்ளது. புத்தளம் மன்னார் வீதியில் புத்தளம் மாவட்டத்தின் எல்லையான மோதரகம் ஆற்றை கடந்து செல்லும் போது மன்னார் மாவட்டத்தின் தொடக்க கிராமமாக மறிச்சிக்கட்டியே காணப்படுகின்றது.
இலங்கையின் தேசிய வனமான வில்பத்து சரணாலயத்தின் எல்லையும் குறித்த மோதரகம் ஆறாகும்.
1900 இற்கு முற்பட்ட காலம் முதல் நீண்ட வரலாற்றைக் கொண்ட இப்பிரதேச மக்கள், வாழையடி வாழையாக அவ்விடத்திலேயே வாழ்ந்து வந்துள்ளனர். இங்கு விவசாயம், மீன்பிடி, காட்டுத் தொழிலையே செய்து வந்த இம் மக்களுக்கு 1990 ஆம் ஆண்டு ஒரு பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டது. இதுவே அவர்களின் வாழ்க்கையை அவலத்துக்கு உள்ளாக்கியது எனலாம். 1990 ஆண்டு இறுதி வாரத்தில் விடுதலைபுலிகள் அமைப்பு வட மாகாணத்திலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம்களை வடமாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றியது. இவ்வாறு வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது மறிச்சிக்கட்டி முஸ்லிம்களும் தமது உடைமைகள் அணைத்தையும் இழந்தபடி புத்தளம் உள்ளிட்ட நாட்டின்தெற்கு பகுதிகளுக்கு அகதிகளாக வெ ளியேறினர். அகதிகளாக வெளியேற்றப்பட்ட போதும் இவர்களுக்கு அகதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகளும் உரிமைகளும் வழங்கப்பட்டதா என்பது வேறு விடயம்.
20 வருட அகதி வாழ்கை அம்மக்களை பெரும் பாடு படுத்தி விட்டது. இடம்பெயர்ந்து வாழ்ந்த பகுதிகளில் அகதி என ஏழனமாக ஒதுக்கப்பட்ட வரலாற்றை மறக்க முடியாது. உண்மையில் வடக்கு முஸ்லிம்கள் பாவப்பட்ட சமூகமே. கலிமா சொன்ன முஸ்லிம் என்ற காரணத்திற்காக சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டனர். பின்னர் அடிப்படை வசதிகளின்றி இன்று வரை தொடர்ந்தும் அகதிகளாக வசிக்கின்றனர். யுத்தம் நிறைவுக்கு வந்தும் திட்ட மிடப்பட்ட முறையில் இம்மக்கள் மீள்குடியேற்றப்படவில்லை. தாமாக சொந்த இடங்களுக்கு சென்று குடியேறும் போது அரசியல் தில்லுமுல்லு, இன பேதம், மதபேதம், அதிகாரிகளினால் ஒதுக்கப்படல் என பல சவால்களுக்கு முகம்கொடுக்கலானார்கள்.
இவ்வாறு 2009 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மறிச்சிக்கட்டி மற்றும் மரைக்கார் தீவு ஆகிய கிராமங்களூக்கு மீண்டும் திரும்பலானர்கள். 1990 ஆம் ஆண்டு மறிச்சிக்கட்டியிலிருந்து 75 குடும்பங்களாக வெளியேறிய மக்கள் மீண்டும் 23 வருடங்களின் பின்னர் சொந்த இடத்திற்கு திரும்பும் போது 275 குடும்பங்களாக இருந்தனர்.
அதேநேரம் இவர்களின் மூதாதையர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மறிச்சிக்கட்டி மக்களின் 700 ஏக்கர் காணியும் மையவாடியும் முள்ளிக்குளக் கிராமமும் கடற்படை முகாம் அமைப்பதற்காக அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே இம்மக்கள் மறிச்சுக்கட்டியில் அமைந்துள்ள மரைக்கார்தீவு என்ற கிராமத்தில் குடியேறுவதற்காக சென்றபோது வனபரிபாலன உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மறிச்சிக்கட்டி பகுதியில் வாழும் முஹம்மது தெளபீக் (மதனி) என்ற அரச அதிகாரி ஒருவரை சந்தித்தோம். அவர் அங்குள்ள பிரச்சினை தொடர்பில் விபரிக்கையில்
நாங்கள் 2009 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் புத்தளத்திலிருந்து மீண்டும் சொந்த இடத்திற்கு வந்தோம். யுத்த முடிவு எமக்கு விடிவை பெற்றுத் தந்ததாக எண்ணி 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பல கனவுகளுடன் பூர்வீக மண்ணிற்கு வந்து குடியேறினோம். நாங்கள் வெளியேற்றப்பட்ட மறிச்சிக்கட்டி கிராமம் செல்வம் கொளிக்கும் செழிப்பான பூமியாக இருந்தது. ஆனால் 20 வருடங்களுக்கு பின்னர் இங்கு வந்து பார்க்கும் போது எமது வீடுகள், பொது கட்டடங்கள் அழிவுற்ற நிலையில் காணப்படுகின்து. மட்டுமன்றி நாம் வாழ்ந்த பிரதேசங்கள் அதியுயர் பாதுகாப்பு வலையத்துக்குள் உள்வாங்கப்பட்டு கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது நாம் பரம்பரையாக வாழ்ந்த இடம். எமது பிரதேசத்தை கடற்படையினர் ஆக்கிரமித்திருக்கின்றமையினால் நாம் வசிப்பதற்கான பிரதேசம் மிகவும் குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பில் நாம் மூன்று வருடங்களுக்கு முன்னர் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகரிடமும் முறையிட்டோம். இதனையடுத்து இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசம் தவிர்ந்த 50 ஏக்கர் காணியில் எங்களை குடியிருக்குமாறு அதிகாரிகள் பணித்தனர். இதற்கமைய நாம் இங்கு கொட்டில்கள் அமைத்து குடியேறினோம்.
இங்கு வந்து சிறிது காலத்துக்குள் 18 இலட்சம் செலவில் மறிச்சிக்கட்டியில் பொதுக்கட்டம் ஒன்றை அமைத்தோம். 6 இலட்சம் செலவில் குழாய் கிணறும் 8 இலட்சம் செலவில் பாதையும் அமைத்துள்ளோம்.
இவ்வாறு கடந்த மூன்று வருடத்திற்குள் அரசாங்க நிதி, அமைச்சுகளினூடாக கிடைக்கப்பெற்ற நிதி மற்றும் பொது மக்களின் பணத்தையும் செலவிட்டு பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துள்ளோம்.
இது எங்கள் பூர்வீக நிலம் இதை விட்டு நம் வேறு எங்கும் நகரப்போவதில்லை. என்றார்.
இந்த பிரதேசத்தில் பிறந்தவர் மொஹமட் பைஸல், இவர் தற்போது மீன்பிடி தொழிலை மேற்கொண்டு சீவிக்கிறார். 15 வயதில் மறிச்சக்கட்டியிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் இஸ்மயில் புரத்தில் வசித்த இவர் யுத்தம் நிறைவடைந்ததையடுத்து மீண்டும் சொந்த மண்ணில் வாழவேண்டும் என்ற அவாவில் 2009 ஆம் ஆண்டு கடைசிப்பகுதியில் மறிச்சக்கட்டிக்கு வந்தார்.
அவர் எங்களோது பேசுகையில், இது எங்களுடைய சொந்த நிலம். எங்களில் பலரிடம் அதற்கான பத்திரங்களும் இருக்கின்றன. சிலர் கடந்த கால அசாதாரண நிலைமைகள் காரணமாக உறுதிப்பத்திரங்களை தொலைத்துள்ளனர்.
இங்கிருந்து வெ ளியேற்றப்படும் போது ஒரு சிறு குழுவினராக இருந்த நாம் பெரும் தொகையினராக இருக்கின்றோம். ஆனால் அப்போது எமக்கிருந்த நிலம் தற்போது சுறுங்கியுள்ளது. 1990 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு நாம் நிம்மதியாகவே வாழ்ந்து வந்தோம். ஆனால் தற்போது பல திசைகளிலிருந்தும் எம்மை நோக்கி பிரச்சினைகள் வந்துகொண்டிருக்கிறது.
முன்னர் இங்கு மீன்பிடிதொழிலை செய்து சந்தோஷமாக வாழ்ந்தோம். இப்போது மீன்பிடிக்கச் சென்றால், 'இங்கு மீன்பிடிக்க வேண்டாம் அங்கு மீன்பிடிக்க வேண்டாம்' என கடற்படையினர் தெரிவிக்கின்றனர் என்றார் பைஸல்.
மறிச்சக்கட்டியில் தற்போதைக்கு வாழ்வாதாரத்தை நடத்துவதற்கான முழுமையான அடிப்படை வசதிகள் கிடையாது. தற்போது அங்கு குடியிருக்கலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலை எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்கிறார் .
எங்கட உம்மா, வாப்பா, வாப்பம்மா, உம்மம்மா என .எல்லோரும் இங்குதான் வாழ்ந்தனர். நான் 13 வயதில் இங்கிருந்து வெ ளியேற்றப்பட்டேன். தற்போது எனக்கு 6 பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் புத்தளத்தில் தான் படிக்க வைத்திருக்கின்றேன். அங்கு பாடசாலையில் எமது பிள்ளைகளை பார்த்து அகதி பிள்ளைகள் என ஏழனமாக கதைக்கின்றனர். இதனால் பிள்ளைகள் மிகுந்த மன உழைச்சலுக்கு உள்ளாகின்றனர். இதனை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாம் எமது பூர்வீக இடங்களுக்கு திரும்பியும் இங்கு எமக்கான அடிப்படை வசதிகள் ஏற்படத்தி தரப்படவில்லை.
இங்கு வாழ்கையை கொண்டுசெல்வதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. இருந்தாலும் இது தான் எமது பூர்வீக நிலம். இங்குதான் கௌரவமாக வாழ முடியும். இங்கு மீளக்குடியமர அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படல் வேண்டும் என்றார்.
இந்த உறுக்கமான பேச்சுக்கள் மனதை நெகிழவைக்கின்றன. 1990 ஆம் ஆண்டு புலிகளினால் பலவந்தமாக வெ ளியேற்றப்பட்டனர். அது ஒரு கொடூரமான நிகழவாகும். அதனையடுத்து வடபுல முஸ்லிம்களுக்கு வாழ்ந்த 20 வருட அகதிவாழ்வு அதை தாண்டிய பல துன்பங்களை சுமத்தியிருக்கிறது என்றால் மிகையாகாது. இது இப்படியிருக்க யுத்தம் நிறைவடைநஙததையடுத்து மீண்டும் சொந்த இடத்திற்கு செல்லும் போது இனவாதிகளினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதியானது சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த நிலைக்கு ஒப்பானது.
அன்று மக்கள் வெளியேற்றப்படும் போது பல வேதனைகளை அனுபவித்தனர். அதன் பின்னர் அகதி நிலையில் அவல வாழ்வு. இதன்போது இனவாத அமைப்புகளுக்கு மனிதாபிமானமும் நாட்டுப்பற்றும் இருக்கவில்லை. குறிபாக நாட்டின் வன பகுதிகளை அளிப்பதாகவே பொதுபலசேனா இன்று குற்றம் சுமத்துகிறது. எனினும் குறிப்பிட்ட மறிச்சிக்கட்டி பிரதேசம் அம்மக்களின் பூர்வீக நிலம் என்பதை மறைத்து காட்டை அளிக்கின்றார்கள் எனும் பிம்பத்தை தோற்றுவிக்கின்றனர். அயற்கை வளத்தை அளிப்பது மனித வாழ்வுக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது யதார்த்தமே. என்றாலும் தாம் குடியிருந்த பகுதியில் மீண்டும் குடியிருக்க செல்லும் போது அவர்களுக்கு தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே தேசப்பற்றுள்ளவர்களின் நடவடிக்கையாக இருக்க வேண்டும். மாற்றமாக இதனை இனவாத பேசுபொருளாக மாற்றி அரசியல் நடத்துவது மனிதநேயமுள்ளவர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
Post a Comment