- எஸ்.என்.எம்.ஸுஹைல் -
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. அதைதொடர்ந்து உலகக் கிண்ண இருபது-20 கிரிக்கெட் போட்டியும் தற்போது விறுவிறுப்பாக பங்களாதேஷில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இந்திய பிரீமியர் லீக்போட்டிகளும் ஆரம்பமாகவுள்ளன. இப்படி அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்கள் இடம்பெற்றுவருவதனால் இக் காலத்தை கிரிக்கெட் பருவகாலம் என்றும் சொல்வது பொருத்தம்.
ஒன்றன் பின் ஒன்றாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் இடம்பெறும் இப்பருவ காலத்தில் நம்நாட்டில் பாடசாலைகளுக்கிடையிலான நட்பு ரீதியிலான கிரிக்கெட் தொடர்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை போர்கள் என்றும் சமர் என்றும் பலவிதமாக வர்ணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பாடசாலைகளுக்கிடையில் இடம்பெறும் போட்டிகளில் மிகத் திறமையாக விளையாடும் இளம் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலவும் மின்னிக்கொண்டிருக்கிறன.
அப்படியொரு இளம் கிரிக்கெட் நட்சத்திரம் ஒன்றை 'விடிவெள்ளி'க்காக அண்மையில் சந்தித்தோம். 2013/2014 ஆம் ஆண்டு பருவ காலத்திற்கான பாடசாலைகளுக்கிடையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் அசத்திக்கொண்டிருக்கும் மின்ஹாஜ் ஜலீல் நட்சத்திரம் ஆகின்றார்.
மின்ஹாஜ் கொழும்புபை அண்டிய ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கின்றார். இவர் கண்டி நாவலப்பிட்டியை பூர்வீகமாக கொண்ட சல்மான் பாரிஸ் ஜலீலின் புதல்வராவார். இவரது தாயார் கண்டி நகரைச் சேர்ந்தவர். வீட்டுக்கு ஒரே பிள்ளையான மின்ஹாஜின் பாட்டியும் இவரது குடும்பத்துடனேயே வசிக்கிறார்.
தந்தையான ஜலீல் கற்ற பாடசாலையான கொழும்பு 07 தேஸ்டன் கல்லூரியிலேயே மின்ஹாஜும் கற்று வருகின்றார். இவ்வருடம் இடம்பெறவிருக்கும் உயர்தரப்பரீட்சைக்கு வர்த்தகப்பிரிவில் தோற்றவிருக்கிறார் மின்ஹாஜ்.
வர்த்தகரான ஜலீல் தான் மின்ஹாஜுக்கு முன்மாதிரி. தந்தையின் பயிற்சிக்களத்தில் அழகாக பயிற்றுவிக்கப்பட்ட அவர் இன்று ஆடுகளத்தில் பிரகாசிக்கிறார்.
சிறந்த பந்துவீச்சாளராக ஆரம்பத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட மின்ஹாஜ் தற்போது நட்சத்திர துடுப்பாட்ட வீரராகவும் விளங்குகிறார். அதுமட்டுமல்ல களத்தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தி வரும் இவர் பாடசாலையின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிக்கு பல தடவை தலைமைதாங்கி வழிநடத்தியுள்ளார்.
1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி பிறந்த இவர் 2003 ஆண்டு பாடசாலையில் இணைந்தார். ஆனால் 2002 ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் பயிற்சிகளை ஆரம்பித்தார் ஆரம்ப பயிற்சியாளராக தனது தந்தை இருந்ததாக குறிப்பிடுகின்றார் மின்ஹாஜ்,
சிறு வயது முதலே கிரிக்கெட்டில் அதீத ஆர்வம ்கொண்ட எனக்கு இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கின்றது.
பாடசாலையில் எனது கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக மஞ்சு கலப்பதி இருக்கின்றார்.
2004 ஆம் ஆண்டு தனது 9 வயதில் பாடசாலையின் 12 வயதின் கீழ் 'C' அணியில் இடம்பிடித் தார் மின்ஹாஜ். பின்னர் 2005 ஆண்டு 13 வயதின் கீழ் 'B' அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். தொடர்ச்சியாக பாடசாலை அணியில் 19 வயதின் கீழ் அணிவரை விளையாடி வருகிறார்.
2006 ஆண்டு கொழும்பு மாவட்ட 13 வயதின் கீழ் கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்தார் நட்சத்திர வீரர் மின்ஹாஜ். பின்னர் 2009 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்ட 15 வயதின் கீழ் அணியிலும் இணைத்துக்கொள்ளப்பட்ட அவர் 2010 ஆம் ஆண்டியில் அணியின் தலைவராகவும் தெரிவானார். அத்தோடு மேல்மாகாண கிரிக்கெட் அணியின் உப தலைவராகவும் மாறினார். இவ்வாறு தேசிய ரீதியி மாவட்ட மட்ட கிரிக்கெட் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திவந்தார்.
இவர் பாடசாலை அணிகளுக்கிடையிலான போட்டிகளின் போது ஒரு நாயகனாகவே திகழ்ந்தார். 2011/2012 காலப்பகுதியில் 587 ஓட்டங்களை குவித்ததோடு 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2012/2013 காலப்பகுதியில் 794 ஓட்டங்களை குவித்ததோடு 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2013/2014 காலப்பகுதியில் 1204 ஓட்டங்களை குவித்ததோடு 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சுழல் பந்துவீச்சாளராக மிரட்டும் மின்ஹாஜின் சிறந்த பந்துவீச்சாக டீ.எஸ்.சேனநாயக்க கல்லூரிக்கு எதிரான போட்டியொன்றின் போது 40 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தியமையை குறிப்பிட்டு சொல்லலாம்.
துடுப்பாட்டத்தில் அசத்தும் மின்ஹாஜ் பாடசாலை கிரிக்கட் தரப்படுத்தலில் துடுப்பாட்ட வீரர் பட்டியலில் இரண்டாமிடத்தை பிடித்துள்ளார். அத்தோடு அதிகமான பௌண்ட்ரிகளை பெற்ற வீரர் பட்டியலில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
இவர் 17 வயதின் கீழ் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டுள்ளார். இவருடன் இலங்கை தேசிய அணியில் விளையாடிய ஏனையோர் தற்போதுள்ள இலங்கையின் 19 வயதின் கீழ் தேசிய அணியில் இடம்பிடித்துள்ளனர். தனக்கு அவ்வணியில் இடம் கிடைக்காமை மிகுந்த கஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக மனம் நொந்துகொள்கிறார் மின்ஹாஜ், எனது இலட்சியமே இலங்கை தேசிய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதாகும் என்றார்.
தற்போது தமிழ் யூனியன் அணியில் இணைந்துள்ள அவரின் தேசிய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற கனவு நனவாக இறைவனை பிறார்த்திப்போம்.
Post a Comment