கசினோவை எதிர்க்கபமல் இஸ்லாத்துக்கு துரோகமிழைத்துவிட்டனர் - முபாறக் அப்துல் மஜீத்
Monday, April 28, 20140 comments
கசினோ சட்ட மூலத்தை முஸ்லிம் கட்சிகள் பாராளுமன்றத்தில் எதிர்த்து வாக்களிக்காததன் மூலம் மனித குலத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் இஸ்லாத்துக்கும் மிகப்பெரும் துரோகம் செய்து விட்டன என முஸ்லிம் மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
மத பாரம்பரியங்களை கொண்ட இந்த நாட்டில் கசினோ சட்ட மூலம் கொண்டு வரப்படுவதன் மூலம் முழு நாடும் சீரழிவை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது. இத்தகைய சீரழிவிற்கு குர்ஆன் ஹதீத் என சொல்லிக்கொண்ட கட்சியும் அக்கட்சியின் மூலம் அரசியல் முகவரி கொண்டவர்களும் துணைபோயுள்ளமை மிகப்பெரும் வரலாற்றுத் துரோகமாகும். இதன் மூலம் பதவிகள் என்றால் சமூகத்தைக்கூட இவர்கள் விற்கத்துணிந்தவர்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.
இத்தகைய கசினோ சட்ட மூலத்தை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துள்ளமை கண்டிக்கத்தக்கதாகும். அதே போல் மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பதற்கேற்ப ஹக்கீம் ரிசாத் அதாவுல்லா தலைமைகளிலான கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இச்சட்ட மூலத்தை எதிர்க்காமல் நழுவிக் கொண்டதன் மூலம் இச்சட்ட மூலம் நிறைவேறுவதற்கு அப்பட்டமாக துணை போயுள்ளமையை எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. இவர்களின் இந்தச் செயல் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாரிய தலைகுனிவுக்குள் தள்ளியுள்ளது.
தங்களது அமைச்சுப் பதவிகளையும் மற்றும் பல பதவிகளையும் காத்துக்கொள்வதற்காக இஸ்லாத்தோடும் மனிதப்பண்புகளோடும் முரண்படும் இத்தகையதொரு சட்டமூலம் நிறைவேற இந்த முஸ்லிம் கட்சிகள் துணை போனதற்காக இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களித்த முஸ்லிம்களும் இறைவனிடத்தில் குற்றவாளியாக நிற்கிறார்கள் என்பதை எந்தவொரு இஸ்லாமிய அறிவுள்ளவனும் மறுக்க முடியாது.
Post a Comment